மற்றொரு மாலையில்… – 02

2.

சாபமென்றால்
வதைப்பட நான்
வதைக்க நீ!

வரமென்றால்
பக்தனாய் நான்
அருள்பாளிக்கும் அம்மனாய் நீ!

சொல்,
என் காதல்
வரமா?சாபமா?!

எப்போதோ
யாரோ
ஊர்பிள்ளைகள் மீதான
இரக்க்கத்தில் தந்த
இறக்கமான நிலமது!

மரங்களே வேலியாய்
தன்னிறமே என்னவென்று மறந்த
ஓடுகள் வேயப்பட்ட கட்டிடங்கள் பலதும்
அங்கொன்றும் இங்கொன்றும்
புது கட்டிடங்களுமாய்
எழுந்து நிற்கும் பள்ளிக்கூடம்!

சூரியன் சுட்டெரிக்கப் போகிறேன்
என்ற எச்சரிக்கை விடுத்து
ஏழு குதிரைகள் பூட்டிய வண்டியில்
பவனி கிளம்பிய காலை வேளையில்

விடுமுறை கழிந்து
பள்ளி புகுகிறாய்!
நேற்று
புத்தம் புதிதாய் பூத்த பக்கங்களை
தாவணி தவழவிட்டு!

இதுநாள் உனை
காணா சோகத்தில்
சருகாயிருந்த மரங்கள்
மெல்ல உயிர் பெருகின்றன
வறண்ட காற்றாய் நுழைந்து
உன் உயிர்வருடி
தென்றலாகி திரும்பும் காற்றை சுவாசித்து!
மொட்டுகள்
பூக்க துவங்குகின்றன
அவசரமாய்
வசந்தத்தின் முதல்நாள் வந்ததென்று!

இவையாவும் கண்டும் காணாமல்
தாழ்வான அந்நிலத்தில்
தயவுதாட்சணம் ஏதொன்றொன்றும்
அறியா தேவதையாய்
அழகையெல்லாம்
அள்ளி தெளித்து;
முன்னேறுகிறாய்
பன்னிரெண்டாம் வகுப்பு ‘அ’ பிரிவு நோக்கி
காற்றுடன் உறவாடி வரும்
தாவணி முந்தானையால்
அனைவரையும் தூக்கிலிட்டபடி!

பூ மாறி பூ மாறி
தேன் ருசிக்கும் பட்டாம்பூச்சிகளாய்
உனை மொய்த்து நகர்கின்றன
அனைவரின் பார்வைகள்!

இடது சடையின் ஓரமாய்
ஓரிடம் பார்த்து
ஓர் பூவாய் ஒய்யாரமாய்
அமர்கிறது என்னுடையது மட்டும்!

தரைக்கு கண் பார்க்கவிட்டு
நகர்ந்தவள்
நான் பார்க்கமட்டுமே என
நாணம் கரைந்தொழுகும்
ஓர் ஓரப்பார்வை வீசி கடந்துச் செல்கிறாய்!

விழி நுழைந்து
உயிர் தேடிப் புறப்படும்
அப்பார்வை பிடித்து
இதயத்தின் ஆழத்தில்
அழுத்தி பத்திரப்படுத்துகிறேன்
மழைத்துளி சேர்த்து
முத்து பிரசவிக்கும்
கடலாகிடும் ஆசையோடு!

இனி உருகும் உயிர் காண :

மற்றொரு மாலையில்… – 03

இதுகாரும் உருகிய உயிர் காண :

01

https://www.theloadguru.com/