பூப்படைதல்

பூப்படைதல்

அம்மாங்க பேசிட்டு

இருக்கோம்ல

குட்டிய கூட்டிடு போய் விளையாடு!

இதில்தான் உண்டானது உனக்கும்

எனக்குமான பந்தம்!

பொம்மைகளுடன் விளையாடுவதை விட

என் கைப் பிடித்து நடப்பது சுகம் உனக்கு!

எனக்கும் அப்படியே! – ஓர் வித்தியாசம்!

கைப்பிடித்து நீ தத்தி தத்தி

வழி நடத்துதல் சுகம்!

நீ பள்ளி சேர்ந்த புதிதில்

பள்ளி பேருந்தை விட்டு

கைக்கோர்த்து நடந்தே

வீடு சேர்ந்தோம்!

அன்னைகள் குச்சியுடன்

காத்திருப்பார்கள்!அறியாமலே!

அத்துணை அடி வாங்கியும்

ஒருவரை ஒருவர் பார்த்ததும்

சிரித்துக் கோண்டோம்!

அண்ணாவென அழைத்து வந்தவள்,

பெயர் சொல்லி விளிக்கலானாய்!

அதிலும் சுகம் கண்டது மனது!

ஓர் நாள் அவசரமாய் வீட்டிற்கு

போக வேண்டுமென்றாய்!

எதுக்கு?

தலையில் தட்டியவாறே!

“உன்னிடம் சொல்ல முடியாது!”

நீயா பேசியது?!

கை நீட்டியும் கைப்பற்றவில்லை நீ!

கோவமோ?

என்றும் அதிகம் பேசுபவள்!

வாயே திறக்கவில்லை!

பயந்துதான் போனேன்!

அம்மாவிடம் ஏதோ குசுகுசுவென்றாய்!

அம்மாவின் முகத்தில் ஆனந்தம்!

உன் முகத்தில் என்ன உணர்ச்சி அது!

பிடிக்க இயலவில்லை!

“அக்கா அவள் அத்தை வர நேரமாகும்

நீங்களே இனிப்பு கொடுங்கள்!” – உன் அம்மா என் அம்மாவிடம்…

உன் முகத்தில்

ஆனந்த தாண்டவம்!

உண்மையில் ஒன்றுமே புரியவில்லை

எனக்கு!அம்மா வந்து நீ பூப்படைந்தது

சொல்லும் வரை!

அடுத்த பதினைந்து நாட்கள்

பள்ளி காணவில்லை நீ!

உன்னிடம் பேசுவதாய்!

காற்றுடன் பேசி நடந்தேன்!

நீ பள்ளி திரும்பும் முதல் நாள்…

உன்னிடமும் என்னிடமும்

இனி பழக வேண்டிய விதம்! – அறிவுரை!

முக்கியமாய் நானும் நீயும்

கைக்கோர்த்தல் ஆகாதாம்!

நீயும் சொற்படி

விலகியே வந்தாய்!

பத்தடிக்கு ஒரு தரம்

சில நடை அகலம் குறைத்தாய்!

மெல்லமெல்ல அருகில் வந்து

கையோடு கை சேர்த்தாய்!

அந்நிமிஷத்தில்

பூப்படைந்தேன் நான்!

https://www.theloadguru.com/