நிலா

பார்த்து பார்த்து
உனை சமைத்த கணம்
கைவலி பொறுக்கமாட்டாமல்
பிரம்மதேவன் தூரிகை
உதறியதில் சிந்தி
தங்கிவிட்ட ஒற்றைத்துளி
“நிலா”!

– ப்ரியன்.

காதல் நாடகம்!

யோசித்து யோசித்து
ஏதோ எழுதிக் கொண்டிருக்கையில்
பின் நின்று நுனிநாக்கால்
காதுமடல் வருட ஆரம்பித்தாய்!

காகிதம் மேலிருந்த
கவனம் முழுவதும்
காது மடலில் குவிந்த கணம்
வருட்டெனக் கடித்துவைத்தாய்!

கடித்தது நீயென்றாலும்
சின்னதாய் வலிக்கத்தான்
செய்தது!

செல்லமாய் கோபம்
மெலிதாய்
அடித்து வைக்கத் துணிந்தேன்!

எதிர்ப்பார்த்தவள்
பாதுகாப்பான தூரம்
நின்று!
உடைந்துவிட எத்தனிக்கும்
இடையில் இருகை வைத்து
புருவம் தூக்கி
என்னடாவென்றாய்
மெலிதாய் தலைசாய்த்து
புன்னகை பூத்தூவி!

அதுவரை மூக்கின்
மேல்நின்று தவம் செய்த கோபம்
மெதுவாய் கை ஊன்றி
கீழிறங்கி முன்நின்று
அவள் காதலுக்கும்
எனக்கும் ஏழாம் பொருத்தம்
சொல்லி காற்றில்
கரைந்து போனது!

பேசாமல் சில நொடிகள்
நான் நின்றுவிட!
சேயழைக்கும் தாய்ப்போல்
இருகை நீட்டி
வா வா
வாடா செல்லம் என்றாய்!

மந்திரமென காதல்
கட்டிப் போட்டதில்
மழலையென மார்ப்பில்
சாய்ந்து ஒட்டிக்கொள்கிறேன்!

சுகமோ சுகமென
நினைக்கையில்
மெதுவாய் முன்னேறி
காது மடல்
வருட முனைகிறாய்!

சீக்கிரத்தில்,
அரங்கேறும்
மற்றொரு காதல்
நாடகம்!

– ப்ரியன்.

குழந்தை

தப்பு தப்பாய் தமிழ்
வாசிக்க அறிவாய்!
தாறுமாறாய்
எழுதித்தந்தாலும்
தலைவன் எனக்காக
தரமானது என்பாய்!
கவிதை புத்தகங்கள்
காணோமென்று தேடினால்
தலையணை அடியிலிருந்து
எடுத்து நீட்டி இதனால்
என்மேல் உங்கள் கவனம்
குறைக்கின்றது என கோபித்துக்கொள்வாய்!

என்றுமில்லாமல்
இன்று புது வெட்கம்
காட்டி!
பூமியை புரட்டிப்போடும்
புன்னகை சிந்தி!
நாணி கோணி
சிரிப்பால் நனைந்து
எனையும் நனைத்து
தோள் சாய்ந்து
கையில் தந்தாய்;
படித்துவிட்டு
சொன்னேன் அருமையான
கவிதை படைத்தாய்!

சொல்லி முடிக்கும் கணம்
பொக்கைவாய் திறந்து
நம்மிருவர் முகம் நோக்கி
முதல் புன்னகை உதிர்த்தது
கையிலிருந்த கவிதை!
நம் குழந்தை!

– ப்ரியன்.

மரம்

தளிரோடு தளிர்
ரகசியம் பேசி சிரிக்கும்!
கிளையும் முடிந்தமட்டும்
வளைந்து நெளிந்து
குலுங்கி வைக்கும்!
பலமிழந்த பூக்களும்
காய்க்கனியும்
புன்னகை சுமந்து
மண் முத்தமிடும்!
தப்பி நின்ற
தளிரும் பூவும்
அளவு மிகுந்து
சிரித்து தொலைத்ததில்
கண்கடையில்
கண்ணீர் தொக்கி
நிற்கும்!

யாரங்கே மரத்தின்
கால் வேர்களில்
குறுகுறுப்பூட்டுவது!

– ப்ரியன்.

கையோடு கை

இரவு முழுவதும் நடக்கும்
நாளைய சந்திப்பின்
கனவுகளைச் சுமந்து!

காலை சூரியனோடு
உனையும் எழுப்பி
படுக்கையில் கூடக் கிடக்கும்
கைப்பேசி தடவி
காலை வணக்கம்
தவிர்த்து
“உனை நான் காதலிக்கிறேன்”
என்பதில் தொடங்கும்
என் விளையாட்டுகள்!

கடக்கையில்
பார்வை பரிமாறி
நேரம் கிடைக்கையில்
உரையாடி
சாப்பிட்டதில் தொடங்கி
எல்லாமே சொல்லி முடித்திருப்பேன்!

மெதுவாக குட்டி மா என்பாய்
என்னமா என்றால்
ச்சும்மா என்று மனம் சுளுக்க
சிரித்து வைப்பாய்!

சாப்பிட போங்க
செல்லமாய் சொல்லுகையில்
நிரம்பியிருக்கும் பகுதி
வயிறு!

மதியம் பேச்சே
வேறு மாதிரியிருக்கும்
நான் சொல்லுதல் உனக்கு புரியாது
நீ சொல்லுதல் எனக்கு புரியாது
உண்ட மயக்கமல்ல
காலையிலிருந்து நமை நாமே
தின்ற மயக்கம்!

சின்னச் சின்னதாய்
மனஸ்தாபங்கள்
சிணுங்கல்கள்
அதை தொடரும்
மன்னிப்பு கோரல்கள்!

பல நாட்கள்
மன்னிப்பு கிடைக்காமல்
போகும்;
பணி முடிந்து
கையோடு கை பிணைத்து
வீடு திரும்புதலுக்காகவே!

– ப்ரியன்.