June 05, 2008
Filed Under (புலம்பல்ஸ்) by ப்ரியன்

ஊருக்கு போயிருந்தேன் , செல்பேசி அலைகள் காற்றில் கலக்காத இணைய வலையில் சிக்காத கிராமம்.

 

இதமான வெயில் , குளுகுளு காற்று , கடுகடுக்கும் நீர் , சுற்றிவர தென்னையால் மூடிய தோட்டம் சொர்க்கம்.

 

–**–

 

என்றைக்கு நம் ஊர் இரயில் சரியான நேரத்தில் வந்தது அன்று மட்டும் வர , இரவு 9.40 க்கு பூங்கா நகரில் கடைசி பறக்கும் இரயில் சேவை , கோவை இன்டர்சிட்டி வந்து சேரவேண்டி நேரம் இரவு 9.20.சரியான நேரத்தில் கோவை இன்டர்சிட்டி போனால் பறக்கும் இரயிலை பிடித்துவிடலாம் என்று நப்பாசை.ஆனால் , அது வந்து சேரந்ததோ 9.32 க்கு.சரி பேருந்து பிடித்துக் கொள்ளலாம் என்றால் அங்குதான் பிரச்சனையே ஆரம்பம்.

 

முதலில் ஒரு T21 வந்தது நிறுத்தவில்லை.

அடுத்து D51 இவனாவது நிறுத்துவானா?ம்கூம்.

அடுத்து 5C அதே கதை.

அடுத்து இன்னொரு T21 , ஓடிப்போய் ஏறினால் ‘பஸ் டிப்போவுக்கு போகுது சார்’.கெட்ட வார்த்தை வந்தது.என்ன செய்ய துப்பிவிட்டேன்.

அடுத்து வந்த A21 ல் ஏறி வந்து வீடு சேரந்தபோது மணி இரவு 11.10.

 

நல்ல போக்குவரத்து துறை போங்க.

 

–**–

 

தாத்தாவுக்கு பிறந்தநாளாம் , அண்ணாசாலை முழுக்க குழல்விளக்கு.

 

ஆற்காடு வீராசாமி அண்ணே , எப்போ மின்சார தட்டுப்பாடு நீங்குச்சு?!

 

–**–

 

தலைப்புதானே?! அது முத்தமிழ் அறிஞரின் பிறந்தநாளுக்கு பெருங்குடியில் வைத்திருந்த டிஜிடல் பதாகையில் பார்த்தது.

 

–**–

 

படிக்க : ‘நட்புத் தடங்கள்’



May 30, 2008
Filed Under (புலம்பல்ஸ்) by ப்ரியன்

‘வெற்றி!’

‘இன்று தெரியும்?’

‘விபத்து!’

‘பலி!’

 

இப்படி தினமலர் பாணியில் தலைப்பு வைப்பதானால் விஜயகாந்தின் நேற்றைய அறிவுபூர்வமான அறிக்கைக்கு சட்டென மேலே இட்ட தலைப்புதான் பதிலாய் தோன்றியது.

 

பெரிய தனியார் நிறுவனங்களில் ஊழியர்களுக்கு தனியாக மருத்துவ காப்பீட்டு திட்டம் இருக்கும் நிலையில் அரசாங்க ஊழியர்களுக்கும் இத்திட்டத்தை அரசு கொண்டுவந்திருப்பது மிக நல்ல விடயம்.

 

தலைவர் விஜயகாந்த் அறிக்கையில் தனியார் காப்பீட்டு நிறுவனமான ஸ்டார் ஹெல்த் அண்ட் அலெய்டு நிறுவனத்தின் நெட்வொர்க் மருத்துவமனைகளின் எண்ணிக்கைப் பற்றியும் தரத்தை பற்றியும் கேள்வி எழுப்பி உள்ளார்.அறிக்கை தயாரிக்கும் முன் மருத்துவமனைகளின் பட்டியலை அவர் படிக்கவில்லை போலும்.ஸ்டார் ஹெல்த் அண்ட் அலெய்டு நிறுவனத்தின் நெட்வொர்க் மருத்துவமனைகளான ‘அப்பலோ’ போன்ற மருத்துவமனைகள் தங்களின் தரம் பற்றி பேசிய இவர் மீது வழக்கு தொடர்ந்தால் என்ன செய்வார்?

 

திடீரென உடல் நலம் கெட்டுப்போகிறது அவசரமாய் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டுமாகிறது , கையில் மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டையை மட்டும் எடுத்தச் சென்றால் போதுமானது அம்மருத்துவமனை உங்களுக்கு எந்தவித கட்டணமுமின்றி சிகிச்சை அளிக்கும், மருந்து மாத்திரைகளிக்கு தனியாக செலவழித்தாலும் அந்த ரசீதுகளை காப்பீட்டு நிறுவனத்திற்கு காட்டி பணத்தை மீளவும் பெற்றுக் கொள்ளலாம்.மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படும் முறை இதுதான்.

 

வருடம் ரூ.300/- ல் குடும்பத்தினர் அனைவருக்கும் காப்பீடு என்பது பெரிய விடயம்.தனியாக நாம் காப்பீடு செய்தால் தனி நபருக்கே வருடம் ரூ.2500/- கட்ட வேண்டி இருக்கும்.என்னுடைய நிறுவனத்தில் எனக்கான காப்பீட்டுக்கு வருடம் ரூ.3615/- பிடித்தம் செய்கிறார்கள் , குடும்பத்தினரையும் சேர்ப்பதானால் இன்னும் அதே அளவு செலுத்தவேண்டும். :(

 

–**–

 

பத்தாம் வகுப்பில் மாநில முதல் மதிப்பெண்  496 - ஆம்.என்னுடைய ஆச்சரியம் எப்படி 4 மதிப்பெண்ணை எடுக்காமல் விட்டார் என்பதுதான்

 

வாகனத்தை முந்தும் போது எந்த பக்கம் முந்த வேண்டுமென்றோ அல்லது ஒரு டிடி பார்மை பூர்த்தி செய்யவோ பத்தாவது முடித்த பிள்ளையிடம் கேளுங்கள்.அட!போங்கடா!நீங்களும் உங்கள் கல்வி முறையும்!

 

–**–

 

இந்த வலைப்பூவின் சுட்டி பாலபாரதிக்கு மட்டுமே தெரிந்திருக்கும் வேளையில் நான்கு ஹிட்டுகள் ;).இது எப்படி சாத்தியம்?!

 

–**–

 

படிக்க :

கென் : நித்யாவும் நானும் ..,

 

–**–



May 29, 2008
Filed Under (புலம்பல்ஸ்) by ப்ரியன்

ஏற்கனவே ‘ப்ரியன் கவிதைகள்‘ என்ற என் வலைப்பூவில் அதிகம் எழுதாமல் இருக்கிறேன் , இந்நிலையில் , இன்னொரு வலைப்பூவிற்கான அவசியம் என்ன? அது என்ன பெயர் ‘ப்’ ?பதில்கள் இப்பதிவின் முடிவில்…

 

–**–

 

யாழ் நூலக எரிப்பு விடயத்தை நண்பர் ‘சோமி‘ ஆவணப்படம் தயாரித்திருப்பதாகவும் , வரும் ஞாயிறு(ஜூன் 1ம் தேதி) சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் மாலை 5.30 மணிக்கு திரையிடல் இருப்பதாகவும் , தோழர் பாலபாரதி இந்த வார இறுதியில் நான் ஊரில் இல்லை என்பது தெரிந்திருந்தும் இரண்டுக்கு மூன்றுமுறை அழைப்பு விடுத்துவிட்டார்.பாபாவுக்கு வயசாகுதில்லை அதான்.

 

சரி விடயத்துக்கு வருவோம் ‘சாரலில்‘ முன்னோட்டம் பார்த்தேன் , நாசரின் அழுத்தமான குரலில் நன்றாக வந்திருக்கு.சோமிக்கு வாழ்த்துக்கள்.பாலாவை திரையிடல் நாளன்று குறுந்தகடு கிடைத்தால் வாங்கி வரச் சொல்லி இருக்கிறேன்.

 

சோமி : ஒரு படுகொலையின் நினைவு-யாழ் நூலகம் எரிக்கப்பட்டு 26 வருடங்கள்

 

–**–

 

கொடுமையிலும் கொடுமை பணியில் இருந்தும் பணி இல்லாமல் இருப்பது.கடந்த 4 மாதங்களாக இப்படித்தான் என்பதால் தனிமையும் , குழப்பமும் , பயமுமாக கழிகிறது பகல்.

 

இன்று மதியம் , சாப்பிட வண்டியை கிளப்புகையில் எதிரில் 12-14 வயது மதிக்கதக்க சிறுவன் வண்டி ஓட்டி வந்தான், சுத்தமாக வண்டி அவன் கட்டுப்பாட்டில் இல்லை.தள்ளி நின்று கொண்டேன்.எங்கள் தெருவில் குறுக்கும் நெடுக்கில் ஓடும் குழந்தைகள் அதிகம்.நல்லவேளை அந்த நேரம் எந்த குழந்தையும் தெருவில் இல்லை.பிள்ளைகளின் கையில் வாகனத்தை தரும் பெற்றோர்களை எதைக் கொண்டு அடிப்பது.

 

–**–

 

சமீபத்தில் இணையத்தில் வாசித்த கவிதைகளில் தோழி லக்ஷ்மி சாகம்பரியின் நத்தைக்கூடு என்னை மிகவும் கவர்ந்தது.

 

நத்தைக்கூடு

 

அணிந்து கொண்டதோ
அணிவிக்கப்பட்டதோ தெரியாது
நத்தை கொண்ட ஓடு .

 

நகர்வுகள் அனைத்திலும்
உடன் பயணித்து வரும் ஓடு
சுமையாகவும்
ஈர்ப்பின் இருப்பிடமாகவும்
அழகானதொரு கூடாகவும் …

 

ஓட்டை தவிர்த்த நத்தை
கற்பனைகளில் தோன்றுவதில்லை
உடன்வரும் ஒன்று
அதற்கான அடையாளமாய் …

நத்தை கொண்ட
கூட்டிற்கான நகலாய்
பெண்ணின் வரையறைகள்

அணிந்து அணிந்து கொண்டதோ
அணிவிக்கப்பட்டதோ தெரியாது

 

ஈர்ப்பின் இருப்பிடமாகவும்
அழகானதொரு கூடாகவும்
சமயங்களில் சுமையாகவும்
பிற்பொழுதுகளில்
அவளிற்கான அடையாளமாகவும் .

 

மேலும் வாசிக்க : நிலாக்காலம் - தேய்தலும் வளர்தலும்.

 

–**–

 

மதியம் சன்னலை திறந்தபோது பக்கத்து வீட்டு மாடியில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.பார்த்து நின்று இருந்தேன்.எனை கவனித்துவிட்ட பெண் குழந்தை ஒன்ற்று கையில் இருந்த குச்சியை தூப்பாக்கி ஆக்கி ‘குருவி’யின் இடைவேளையில் விஜய் சுடுவது போல இருமுறை பாவனை செய்தது.இரண்டாம் முறை சுடப்பட்டவனாய் நான் நெஞ்சை பிடித்துக் கொள்ள குழந்தை சிரித்தது.நானும் சிரிக்க கொஞ்ச நேரம் பார்த்திருந்துவிட்டு திரும்பிக் கொண்டது.

 

–**–

 

ஒரே டேட்டா பேஸில் இரு வேறு வோர்ட் பிரஸ் வலைப்பூ சாத்தியமா?என்று முழித்திருந்தவனுக்கு உடனடியாக.இரண்டல்ல இருநூறும் சாத்தியம் என்று சொன்ன ரவிக்கு சிறப்பு நன்றிகள்.

 

–**–

 

இப்பதிவின் முடிவில், இவ்வலைப்பூவிறக்கான அவசியம் பற்றியும் , ‘ப்’ க்கான காரணமும் சொல்லுவதாக சொல்லி இருந்தேன்.

 

உண்மையை சொல்வதானால் இவ்வலைப்பூவுக்கான அத்தியாவசியம் ஏதுமில்லை , ‘ப்ரியன் கவிதைகளில்‘ அநேக பதிவுகள் கவிதைகள் என்பதால் அவற்றுடன் இதை போட்டு குழப்ப வேண்டாம் என்று நினைத்ததும் , புதிய இணைய வழங்கி அதிக இடம் தந்த சுதந்திரமும் தான் ‘ப்’ பிறக்க காரணம்.

 

என்னது ‘ப்’ க்கு பெயர் காரணமா?அட போங்க சார்…உருப்படியா ஏதும் தோணல அதான்.’ப்ரியன்’ ஐ ‘ப்’ ன்னு சுருக்கிட்டேன்.

 

–**–