June 14, 2009
Filed Under (கென்யா) by ப்ரியன்
 

கென்யா அரசின் 2009 – 2010 ஆண்டிற்கான வரவு செலவு கணக்கு நேற்று தாக்கல் செய்யப்பட்டது.சாதாரண மக்களின் வாழ்க்கைக்கு ஏதும் உபயோகமற்ற வரவு செலவு கணக்குதான்.அவர்கள் மக்காசோள மாவை தவிர வேறு உணவுக்கு மாற வாய்ப்பளிக்காத வரவு செலவு கணக்கு.ஆனால் , அனைத்து வகை கேமராவுக்கான வரியான 25% சதவீதத்தையும் 16% VAT வரியையும் தள்ளுபடி செய்திருக்கிறது அரசு.கேமரா விலை வெகுவாக குறையும்.பால் அதே லிட்டர் 120 Ksh தான்.

 

அப்படியே , படபிடிப்புக்கான கட்டணத்தை முற்றிலுமாக நீக்கியுள்ளது இதுவரை காங்கோ வரை வந்த தமிழ் நாயகர்கள் இனி கென்யா வரை வந்து சண்டை போடுவார்கள்.

 

*-*

 

நான்காண்டுகளாக அந்தா இந்தா என்று பாவலா காட்டிக் கொண்டிருந்த ஒளி இழை (பைபர் ஆப்டிக்) இணைய இணைப்பு கடல் வழியா அரேபியாவிலிருந்து மாம்பாஸா(கென்யாவின் இரண்டாம் பெரிய , மிகப் பெரிய துறை முக நகரம்) வந்து சேர்ந்துவிட்டது.இனி இணையம் வேகமாகும் மக்கள் வளம் பெறுவார்கள் இதை நான் சொல்லவில்லை.இங்குள்ள அரசியல்வாதிகள்.

 

*-*

 

அலுவலகத்திற்கான பயணத்தில் , சகாக்கள் ரஹ்மானின் இசையில் இலயித்திருந்தார்கள்

 

அந்த போக்குவரத்து விளக்குகான காத்திருப்பில் இன்றைக்கும் தன் வயதுக்கு மீறிய வளர்ச்சி கொண்ட அந்த பெண் பிள்ளை இறுக மூடிய எம் கார் கண்ணாடியை தட்டி பார்வை அற்ற அவளின் தாயை காட்டி காசு கேட்டாள்.தினமும் கவனித்து கொண்டுதான் இருக்கிறேன் ஒரு வயதான மூதாட்டியும் , ஒரு அப்பாவும் பிள்ளையும் , அந்த தாயும் , தொப்பியை பக்கவாட்டில் அணிந்த ஒருவரும் அந்த இடத்தில் தினமும் இருந்திருக்கிறார்கள்.அந்த பெண் , அவள் புதுசு.அந்த தாய்க்கு உதவியாய் வந்திருக்கிறாள்.இதுநாள் வரை அவள் பள்ளியில் இருந்திருக்கலாம்.

இப்போது சுற்றுலாவுக்கு ஏற்ற காலம் அல்ல…நாளை?! சுற்றுலா காலத்தில் அவளின் வறுமையும் அவளின் வயதுக்கு மீறிய வளர்ச்சியும் அவளை வக்கிர புத்தி கொண்ட ஒரு வெள்ளை மிருகத்திடம் கொண்டு சேர்க்கலாம்…ம் குழந்தை விபாச்சாரம் அவளை நாசமாக்கலாம்.

 

அப்பிள்ளையின் கண்களை சந்திக்க இயலாமல்  தலையை குனிந்துக் கொண்டேன்..ஏனோ கண்ணில் துளிர்த்தது,

 

*-*


Post a comment
Name: 
Email: 
URL: 
Comments: