May 29, 2008
Filed Under (புலம்பல்ஸ்) by ப்ரியன்

ஏற்கனவே ‘ப்ரியன் கவிதைகள்‘ என்ற என் வலைப்பூவில் அதிகம் எழுதாமல் இருக்கிறேன் , இந்நிலையில் , இன்னொரு வலைப்பூவிற்கான அவசியம் என்ன? அது என்ன பெயர் ‘ப்’ ?பதில்கள் இப்பதிவின் முடிவில்…

 

–**–

 

யாழ் நூலக எரிப்பு விடயத்தை நண்பர் ‘சோமி‘ ஆவணப்படம் தயாரித்திருப்பதாகவும் , வரும் ஞாயிறு(ஜூன் 1ம் தேதி) சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் மாலை 5.30 மணிக்கு திரையிடல் இருப்பதாகவும் , தோழர் பாலபாரதி இந்த வார இறுதியில் நான் ஊரில் இல்லை என்பது தெரிந்திருந்தும் இரண்டுக்கு மூன்றுமுறை அழைப்பு விடுத்துவிட்டார்.பாபாவுக்கு வயசாகுதில்லை அதான்.

 

சரி விடயத்துக்கு வருவோம் ‘சாரலில்‘ முன்னோட்டம் பார்த்தேன் , நாசரின் அழுத்தமான குரலில் நன்றாக வந்திருக்கு.சோமிக்கு வாழ்த்துக்கள்.பாலாவை திரையிடல் நாளன்று குறுந்தகடு கிடைத்தால் வாங்கி வரச் சொல்லி இருக்கிறேன்.

 

சோமி : ஒரு படுகொலையின் நினைவு-யாழ் நூலகம் எரிக்கப்பட்டு 26 வருடங்கள்

 

–**–

 

கொடுமையிலும் கொடுமை பணியில் இருந்தும் பணி இல்லாமல் இருப்பது.கடந்த 4 மாதங்களாக இப்படித்தான் என்பதால் தனிமையும் , குழப்பமும் , பயமுமாக கழிகிறது பகல்.

 

இன்று மதியம் , சாப்பிட வண்டியை கிளப்புகையில் எதிரில் 12-14 வயது மதிக்கதக்க சிறுவன் வண்டி ஓட்டி வந்தான், சுத்தமாக வண்டி அவன் கட்டுப்பாட்டில் இல்லை.தள்ளி நின்று கொண்டேன்.எங்கள் தெருவில் குறுக்கும் நெடுக்கில் ஓடும் குழந்தைகள் அதிகம்.நல்லவேளை அந்த நேரம் எந்த குழந்தையும் தெருவில் இல்லை.பிள்ளைகளின் கையில் வாகனத்தை தரும் பெற்றோர்களை எதைக் கொண்டு அடிப்பது.

 

–**–

 

சமீபத்தில் இணையத்தில் வாசித்த கவிதைகளில் தோழி லக்ஷ்மி சாகம்பரியின் நத்தைக்கூடு என்னை மிகவும் கவர்ந்தது.

 

நத்தைக்கூடு

 

அணிந்து கொண்டதோ
அணிவிக்கப்பட்டதோ தெரியாது
நத்தை கொண்ட ஓடு .

 

நகர்வுகள் அனைத்திலும்
உடன் பயணித்து வரும் ஓடு
சுமையாகவும்
ஈர்ப்பின் இருப்பிடமாகவும்
அழகானதொரு கூடாகவும் …

 

ஓட்டை தவிர்த்த நத்தை
கற்பனைகளில் தோன்றுவதில்லை
உடன்வரும் ஒன்று
அதற்கான அடையாளமாய் …

நத்தை கொண்ட
கூட்டிற்கான நகலாய்
பெண்ணின் வரையறைகள்

அணிந்து அணிந்து கொண்டதோ
அணிவிக்கப்பட்டதோ தெரியாது

 

ஈர்ப்பின் இருப்பிடமாகவும்
அழகானதொரு கூடாகவும்
சமயங்களில் சுமையாகவும்
பிற்பொழுதுகளில்
அவளிற்கான அடையாளமாகவும் .

 

மேலும் வாசிக்க : நிலாக்காலம் – தேய்தலும் வளர்தலும்.

 

–**–

 

மதியம் சன்னலை திறந்தபோது பக்கத்து வீட்டு மாடியில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.பார்த்து நின்று இருந்தேன்.எனை கவனித்துவிட்ட பெண் குழந்தை ஒன்ற்று கையில் இருந்த குச்சியை தூப்பாக்கி ஆக்கி ‘குருவி’யின் இடைவேளையில் விஜய் சுடுவது போல இருமுறை பாவனை செய்தது.இரண்டாம் முறை சுடப்பட்டவனாய் நான் நெஞ்சை பிடித்துக் கொள்ள குழந்தை சிரித்தது.நானும் சிரிக்க கொஞ்ச நேரம் பார்த்திருந்துவிட்டு திரும்பிக் கொண்டது.

 

–**–

 

ஒரே டேட்டா பேஸில் இரு வேறு வோர்ட் பிரஸ் வலைப்பூ சாத்தியமா?என்று முழித்திருந்தவனுக்கு உடனடியாக.இரண்டல்ல இருநூறும் சாத்தியம் என்று சொன்ன ரவிக்கு சிறப்பு நன்றிகள்.

 

–**–

 

இப்பதிவின் முடிவில், இவ்வலைப்பூவிறக்கான அவசியம் பற்றியும் , ‘ப்’ க்கான காரணமும் சொல்லுவதாக சொல்லி இருந்தேன்.

 

உண்மையை சொல்வதானால் இவ்வலைப்பூவுக்கான அத்தியாவசியம் ஏதுமில்லை , ‘ப்ரியன் கவிதைகளில்‘ அநேக பதிவுகள் கவிதைகள் என்பதால் அவற்றுடன் இதை போட்டு குழப்ப வேண்டாம் என்று நினைத்ததும் , புதிய இணைய வழங்கி அதிக இடம் தந்த சுதந்திரமும் தான் ‘ப்’ பிறக்க காரணம்.

 

என்னது ‘ப்’ க்கு பெயர் காரணமா?அட போங்க சார்…உருப்படியா ஏதும் தோணல அதான்.’ப்ரியன்’ ஐ ‘ப்’ ன்னு சுருக்கிட்டேன்.

 

–**–


Comments:
2 Comments posted on "‘ப்’ ஏன்?"
மதி கந்தசாமி on May 31st, 2008 at 11:25 pm #

புதிய வலைப்பதிவு தொடங்கியமைக்கு வாழ்த்துகள் ப்ரியன். தொடர்ந்து எழுதுங்க. வந்து படிக்கிறேன். எழுதலைன்னா, ஏன் எழுதலைன்னு தொந்தரவும் செய்வோமாக்கும். ;)

-மதி


PrEmKuMaR on June 2nd, 2008 at 2:48 pm #

பாதித்த நிகழ்வுகளை அழகாய் பகிர்ந்து கொள்கிறீர்கள். தொடர வாழ்த்துக்கள். ப்ளாகரில் இருந்தபோது ‘என் சன்னலுக்கு வெளியே’ என்றொரு வலைப்பூவில் நீங்கள் எழுதி வந்ததாக நினைவு

And about the hits :
அதான் பாலா பாய் உங்கள் வலைப்பூவிற்கு கொ.ப.செ வா மாறிட்டாரே


Post a comment
Name: 
Email: 
URL: 
Comments: