இயற்கை பாடம்

தூரத்தில் நின்று
அம்மரத்தை வெறித்திருந்தேன்!

சென்ற வருடத்தின்
காய்ச்சலுக்கே
மரித்திருக்க வேண்டிய
மரம்
தாங்கிப் பிடித்திருக்கிறது
இலைகளையோ
கிளைகளையோ அல்ல
உயிரை மட்டும்!

எப்போதாவது
எட்டிப் பார்க்கும்
மேகமொன்று தூரத்தில்
வருகின்றதாய் அறிகுறி!

பக்கம் வந்த
மேகம் பாவப் பட்டு
மரத்தின் பாதம் மட்டும்
நனைத்து நகர்கின்றது!

நீர்,
ஆணி வேர்
தொட்ட கணம்
சிலிர்த்து ஆயுத்தமாகிறது
மரம்;
அடுத்த தளிர் பிரசவத்திற்கு!

உயிர் தாங்கி
நிற்கும் மரத்தின் – நம்பிக்கை

மேகம் வந்தது – அதிர்ஷ்டம்

மழை தந்த மறுபிறவி – சமயத்தில் வந்த உதவி

மெல்ல மேற்கே ஆதவன்
அடைக்கலம் ஆக
என் கிழக்கில் விடியல்;

மெல்ல எனக்கு
பாடம் சொல்லி விட்டு
அடுத்த பாடத்திற்கு
ஆயுத்தமாகிறது இயற்கை!

பாடம்:

நம்பிக்கை – அதிர்ஷ்டம் – உதவி
இப்படித் தான் உயிரை
கட்டி பிடித்து
வைத்திருக்கிறது
இத்தனை நாள்
உலகம்! – இன்னமும்!!

– ப்ரியன்.

https://www.theloadguru.com/