மந்திரி வந்தார்

மந்திரி வந்தார்
எங்கள் ஊர்
மந்திரி வந்தார்;

போலீசு படைசூழ
தொண்டர்கள் துதி பாட
எங்கள் ஊர்
மந்திரி வந்தார்;

வாராத மழை வந்தது போல
கார்கள் ஈசல்
கூட்டத்துடன்
மந்திரி வந்தார்;

பன்னிகள் மேய்ந்து திரிந்த
எங்கள் சாலைகள்
பளிங்கு சாலைகளாக
மந்திரி வந்தார்;

பெருமாளை சேவிக்கும்
பக்தனைப் போல
கும்பிட்டபடி
மந்திரி வந்தார்;

பணிவுக்கு புது இலக்கணம்
வகுத்தவர் போல
பெரியவர்கள் கால் தொட்டு
சின்னவர்கள் கை தொட்டு
பாட்டிகள் கூச்சம் கூட்ட
புகைப்பட கலைஞர்கள் நடுவினில்
மந்திரி வந்தார்;

அஞ்சுக்கும் பத்துக்கும்
அல்லாடும் எங்களுக்கு
வாரி வாரி
அம்பதும் நூறும் தர
எங்கள் மந்திரி வந்தார்;

தினம் தினம்
வாழ்க்கை கூத்தாடும் எங்களுக்கு
கரகாட்டமும் பொய்க்கால் ஆட்டமும்
ஓசியில காட்ட
எங்கள் மந்திரி வந்தார்;

ஒரு கார் கண்டால்
புழுதி பறக்கும் ரோட்டில்
ஒரு கையில் டவுசர் பிடித்து
துரத்தி ஓடும் பிள்ளைகளுக்கு
கார் பவனி காட்ட
எங்கள் மந்திரி வந்தார்;

அடுத்த மாசம்
எலெக்சன்னு டீக்கடை
ரேடியோவில கேட்டதை
நியாபக படுத்தி போக
எங்கள் மந்திரி வந்தார்;

எல்லாதுக்கும் மேல
நான் இன்னும் உசிரோடதான்
இருக்கேன்; – அதனால
உங்க வோட்டு
எனக்குத்தான் என
சொல்லிவிட்டு போக
எங்கள் மந்திரி வந்தார்;

– ப்ரியன்.

https://www.theloadguru.com/