முன்னொன்று
பின்னொன்று
அதை தாங்க
தாங்கு சக்கரம்
மற்றிரண்டு!
இதுவெல்லாம் போதாதென்று
என்கால்கள் வேறு
அந்த பக்கம்
இந்த பக்கம் சாயும்
மிதிவண்டியின்
சமநிலை காக்க!
தத்தக்கா பித்தக்கா
நடையில்
தங்கை வந்து
தொற்றிக் கொள்ள
சத்தம் போட்டு
ஊரை கூட்டி
ஓட ஆரம்பிப்போம்
இரண்டு சக்கர
குட்டி மிதிவண்டியும்
ஓட்டுவதாய் சொல்லி
ஓடும் நானும்!
அண்ணா வேகம்
இன்னும் வேகம்
சொல்லி சொல்லி சிரிக்கும்
தங்கத்தின் சிரிப்பொலி
மயக்கத்தில்
தலை தெரிக்க ஓடும்
என்காலுடன் சேர்த்து
ஆறுகால் மிதிவண்டி குதிரை!
சந்தோசமாக ஓடும்வண்டி
குப்பற சாயும்
வழி கிடக்கும்
ஒற்றை கல் தட்டி!
அம்ம்ம்ம்ம்ம்மா என்றபடி
தங்கை சாய
அவளை தாங்க நான் சாய
மிதிவண்டி கிடக்கும் அடிபட்டு
சப்தம் கேட்டு வந்த அன்னை
கையில் சிராய்ப்பு
முட்டியில் அடி!
சொல்லி
எடுப்பாள் தடி
வேகமாய் ஓட்டிய எனை தண்டிக்க
தடி எனை தாக்க வரும் முன்
அம்மா வலிக்கல அம்மா
வலி பொருத்து
கண்வழி நீர் வழிய
தங்கை!
இன்னொருமுறை இப்பிடி பண்ணுனே
பிச்சுடுவேன்
நூறாவதுமுறை சொல்லி
தங்கை காயத்திற்கு
மருந்து தர செல்வாள்
அருமை அம்மா!
மருந்து வரும் முன்
காயம் தடவி
வலிக்குதா என கேட்டகையில்
ம்ம்ம்…இன்னொரு ரவுண்ட்
அழைச்சிட்டு போண்ணா
மழலையில் வந்த வலி காணாமல்
போகும் இருவரின் ரணம்!
ஆரவாரமாய்
தொடங்கும் அடுத்த ஆட்டம்
விழுந்து விழுந்து எழுந்தாலும்
அது எங்களுக்கு கொண்டாட்டம்!
எங்களின் பாசம் கண்ட
அம்மாவின் கண்ணில் தெரியும்
சந்தோசம்!
இப்போதும்
நானும் தங்கையும் சேர்ந்து
நடக்கையில்
எங்காவது எப்போதாவது
கண்ணில் தட்டுபடும்
எங்கள்
சின்ன வயது நாங்கள்!
– ப்ரியன்.