பீக்கங்காய் கெதக்கல்

களிக்கு தொட்டுக்கொள்ள அருமையான ஒரு உணவு இந்த கெதக்கல்.

தேவையானவை :

பீக்கங்காயின் தோலை கீறி சிறுது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும் (1 இன்ச் அளவுக்கு)

பெரிய வெங்காயம் ஒன்றை பொடிசாக நறுக்கிக் கொள்ளவும்

உப்பு – தேவையான அளவு

காய்ந்த மிளகாய் – 2

மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

பூண்டு – 20 பல்

கருவேப்பிலை

பால் – 100 மிலி

வறுத்த நிலக்கடலை (தோல் நீக்கியது) – 100 கிராம்

பூண்டு + நிலக்கடலையை பேஸ்ட் போல மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும் (தண்ணீர் விடாமல் அரைப்பது நல்லது , தண்ணீர் விட்டாலும் சிறிதளவே விடவும்).

செய்முறை :

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி , எண்ணெய் காய்ந்ததும் சிறிது கடுகை போட்டு வெடிக்க விடவும்.

பின் சிறிது கடலை பருப்பு, நறுக்கிய வெங்காயம் , இரண்டு காய்ந்த மிளகாயை கிள்ளிப்போட்டு தாளிக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் , தேவையான அளவு உப்பு போட்டு , நறுக்கி வைத்த பீக்கங்காயை வாணலியில் இட்டு வதக்கவும். காய் ஓரளவு வதங்கியதும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.

காய் ஒரளவு வெந்த உடன் , அரைத்து வைத்திருக்கும் பூண்டு நிலக்கடலை பேஸ்ட்டை சேர்த்து , மஞ்சள் தூள் தூவி கிளறி விட்டு காயை வேக விடவும்.

தேவை என்றால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்.

இறக்குவதற்கு 1 நிமிடத்துக்கு முன் , சூடான பாலை சேர்த்து கிளறி விட்டு இறக்கவும்.

இது களியுடன் தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.

குறிப்பு :

பீக்கங்காய் க்கு பதில் ,

  1. தட்டைப்பியறு , பச்சை தட்டைப்பயிறு விதை , அவரை , பச்சை அவரை விதை (மொச்சை) , கத்திரிக்காய் , உருளைக்கிழங்கு , பச்சை துவரை விதை. என எதை கொண்டும் செய்யலாம். கலந்தும் செய்யலாம்.
  2. நான் கொடுத்திருப்பது நான் செய்யும் முறை , என் பாட்டியின் செய்முறை கொஞ்சம் வித்தியாசப்படும். அவர்கள் நிலக்கடலை + பூண்டு + மிளாகாய் ஐ உரலில் போட்டு இடித்து வைத்திருப்பார்கள் அதை பயன்படுத்துவார்கள். காரம் அதிகமாக சேர்ப்பவர்களுக்கு மிளகாயை வறுத்து வைத்திருப்பார்கள் காரம் வேண்டுவோர் அதை கெதக்கலில் பிசைந்துக் கொள்ள வேண்டும்.
https://www.theloadguru.com/