மார்கழி முன்பனியில்
நடுங்கிகொண்டே உன் வாசல்
கடந்தவனைக் கண்டு
உள்ளோடிப் போனாய்!
பாதியில் நீ விட்டுப் போனக்
கோலத்தின் பரிதாப
குரல் கேட்டு
திடுக்கிட்டு நின்றவன்!
உன் விரல் பட்டதால் என்னவோ
“பகுதி கூட அழகாகவே இருக்கு!”
கதவோடு ஒட்டி நின்றவளுக்கு
கேட்கும் குரலில்
சொல்லிவிட்டு நகர்ந்தேன்!!
நகர்ந்துவிட்டதை உறுதிச்
செய்து வெளிவந்தவள்!
என் பாதம் விட்டுச் சென்ற
சுவட்டில் நின்று
அப்படியும் இப்படியும்
திரும்பிப் பார்த்து!
“ஆமா,அழகாகத்தானிருக்கு”
சொல்லிய வண்ணம்
பகுதிலேயே விட்டுவிட்டு
போனாய்!
நான் சொன்னதற்காகவே!
உன் விரல் படாமல்
முக்தி மறுக்கப்பட்டதில்
முறைத்து தள்ளுகிறது
கோலம்!நான்
வாசல் கடக்கும் போதெல்லாம்!!
-ப்ரியன்.