கேள்வரகு – ராகி களி
தஞ்சாவூர் மண்ணில் பிறந்தவள் என்பதால் என்னவோ என் தங்கத்திற்கு ராகி களி என்ற சொல்லே புதிதாக இருந்தது , போன வாரத்தில் ஒரு மாலை நான் செய்து தர கேட்ட போது.கடைசியில் என் நினைவில் இருந்த செய்முறையை அம்மாவிடம் ஒருமுறை செல்பேசி வாயிலாக கேட்டு உறுதி செய்த பின் , களி கிண்டினேன்.உண்மையை சொல்வதால் அம்மாவைவிட ருசியாகவே சமைத்திருந்தேன். 😉
தேவையானப் பொருட்கள் :
இரண்டு பேருக்கு
4 டம்ளர்* தண்ணீர்
2 டம்ளர்* கேள்வரகு – ராகி மாவு
* 225ml அளவு டம்ளர்(காபி டம்ளர்).
செய்முறை:
அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் 4 டம்ளர் தண்ணீரை விட்டு கொதிக்க விடவும்.தண்ணீர் நன்கு கொதித்தவுடன் கேள்வரகு மாவை கொஞ்சம் கொஞ்சமாய் கொதிக்கும் நீரில் போட்டுக் கொண்டே கிளறவும்.கட்டி கட்டாமல் கிளறுதல் முக்கியம்.(ரவா கிண்டுதல் போல.)
பின்னர் மிதமான தீயில் வைத்து வேக விடவும்.மாவு அடியில் ஒட்டாது கிளறிக் கொண்டே இருக்கவும்.மாவு கட்டி கட்டியிருந்தால் உடைத்துவிட்டு கிளறவும்.மாவு கலவை இறுகி களி போல வந்ததும் இறக்கி பரிமாறலாம்.களி சூடாக உண்டால் ருசி அதிகம்.
சாப்பிடும் முறை:
களியை சிறு உருண்டையாக உருட்டி தொட்டுக் கொள்ள இருப்பதை தொட்டு அப்படியே விழுங்க வேண்டும் – மென்று சாப்பிட்டால் ருசி இருக்காது.களியில் ஒட்டியிருக்கும் காய் / கறியை வாயில் தனியே பிரித்து மென்று சாப்பிடுதல் தனி சாமர்த்தியம்.
ஆறிய களியில் தயிர் ஊற்றி சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.சிறு உருண்டையாக பியத்து போட்டு தயிர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு கூழ் போல பிசைந்து சாப்பிடுங்கள்.
சாப்பிட்டாச்சா?! என்னது களி கிண்டிய பாத்திரத்தை கழுவ போறீங்களா?! இருங்க பாத்திரத்தில இன்னும் களி ஒட்டி இருக்கு பாருங்க , அதுக்கு என்னவா?! அகா என்ன இப்படி கேட்டுடீங்க.அதுல தண்ணீர் ஊற்றி வைங்க காலைல தயிர் ஊற்றி கூழ் செயது சின்ன வெங்காயம் கடிச்சு குடிச்சு பாருங்க.அதன் ருசியே தனி.
தொட்டுக் கொள்ள :
கீரை கடைசல் , பாசி பயிறு கடைசல் , கோழி / ஆட்டுக் கறி / மீன் குழம்பு என எல்லாமே – எதுவுமே களிக்கு நல்ல கூட்டணிதான்.
குறிப்பு :
1.) பாத்திரம் – குண்டா(வாய் சிறிதான பாத்திரம்) வகையாக இருந்தால் கிளறுதல் எளிது
2.) களி கிண்ட தட்டையான நீளமான மர கரண்டி கடையில் கிடைக்கும் இல்லாவிட்டால் மரத்தினால் ஆன தோசை திருப்பியை உபயோகிக்கலாம்.
3.) உருண்டை / மொத்தை பிடக்க தனி உபகரணம் உண்டு ஆனால் சென்னையில் கிடைக்கவில்லை.கரண்டியில் எடுத்து பறிமாறலாம்.
4.) கேள்வரகு – ராகிக்கு பதில் கம்பு / சோள / கோதுமை மாவு சேர்த்தும் களி கிண்டலாம்.
5.) மாவு கட்டி கட்டாமல் கிளற தெரியாதென்றால் , மாவு போட்டு கிளறும் முன் கொஞ்சம் பழைய சாதம் அல்லது சம்பா ரவையை சேர்த்துக் கொள்ளலாம் – மாவு கட்டி கட்டாமல் கிளற இது உதவும்.(மாவு அளவை ஏற்றாட்போல் குறைத்துக் கொள்ளவும்.)
6.) சர்க்கரை உள்ளவர்களுக்கு நல்ல உணவு.
நான் தொட்டுக் கொள்ள செய்தது காரமணி – தட்டைகாய் கெதக்கல் அதன் செய்முறை அடுத்த பதிவில்.