நேற்று எல்லாம் நல்லபடியாகத்தான் நடந்து கொண்டிருந்தது அது நிகழும் வரை.
அதே இந்தியப் பெருங்கடல்தான் , இங்கு சற்று வித்தியாசமாக அவ்வப்போது உள்வாங்கிக் கொள்ளும் , சில நேரங்களில் கடற்கரையே இல்லாமல் போகும் அளவுக்கு பொங்கிவரும்.நேற்றைக்கும் அப்படித்தான் கடல் நன்கு உள்வாங்கி இருந்தது , அறையில் அமைதியாய் உறக்கத்திற்கு தயாராகி கொண்டிருந்தவனை பலவந்தமாய் நண்பர்கள் அழைத்தார்கள் நீச்சல் குளத்திற்கு (நீச்சல் குளம் நிறைய பெண்கள் இருந்ததால் இவர்கள் ஆண்களின் எண்ணிக்கை பலம் காட்ட அழைத்திருக்கிறார்கள் என்பது எனக்கு அப்போது தெரியாது).அங்கே போனால் , கடலில் நடப்போம் வாங்கன்னு ஒருத்தன் அழைக்க எல்லோரும் சென்றோம்.
ஒரு 100 அடி நடக்கும் வரை எதுவும் தெரியவில்லை.கலங்கலில்லா கடல் , நீருக்கு அடியில் தெரியும் வெண்மணல் , வர்ண மீன்கள் , கடல்த் தாவரங்கள் , மூச்சுவிடும் சின்னச் சின்ன பவளப்பாறைகள் எல்லாம் இடுப்பளவு கடல் தண்ணீருக்கடியில் , இடையில் நறுக்கென ஏதோ குத்தியது போன்ற உணர்வு இறந்துபோன பவளப்பாறையாக இருக்கும் என முன்னேறிப் போனால் இப்போது வலதுகாலில் நறுக்கென குத்தியது போக அடியில் ஏதோ நகர்வதாய் தோன்றியது.பயத்துடன் தண்ணீரில் துலாவினால் , முள்ளம்பன்றி போன்ற ஒரு உயிர் அதன் மேல் கால் வைத்தப்போதுதான் இந்த நறுக்.கருப்பு வர்ணத்தில் பெரிய எலுமிச்சை அளவில் எட்டு பக்கமும் 4 அங்குல நீளத்தில் முட்களை உடலில் தாங்கியபடி அது மெதுவாக நகர்ந்துக் கொண்டிருந்தது.பதறி அடித்து , கடல் விட்டு வெளியே வந்தால் கால் முழுவதும் முட்கள்.இது விஷமில்லை ஆனாலும் முள்ளை முடிந்தவரை சீக்கிரம் எடுத்துவிடுங்கள் என்று அங்கிருந்த மீனவர் ஒருவர் சொன்னார்.ம் முள் எடுப்பதிலேயே நேற்றைய காலம் முழுதும் முடிந்தது.இனி கடலில் சுறாக்களுக்காக மட்டுமில்லை இம்மாதிரியான சின்னச் சின்ன உயிர்களுக்காகவும் இறங்கவே யோசிக்கத்தான் வேண்டும்.
Sea Urchin
படங்கள் : கூகிள்
நம்ம ஆளுங்கதான் 😉
*
கரு நிற பறவையின் சிறகால்
அணைப்பட்ட நேற்றைய இரவின்
கனவில்
நீ என்னைப் பற்றிய கனவில் இருந்தாய்.
பெரும் வனத்தை எரிக்குமொரு
சிறு தீயுடன்
நீளும் பாதையொன்றில் நடந்தவனை
நீ புன்னகையோடுப் பார்த்திருந்தாய்
தரைப் போர்த்திய சருகுகளையும்
நீண்டு நிற்கும் வனவிருட்சங்களையும்
கடந்து – நான்
தொலைந்த சமயத்தில்
பற்றி எரியத் தொடங்கியது
அவ்வடர் கானகம்
கூர்வாளினால் கிழிப்பட்ட
வலி கண்டவளாய்
மாறுகிறது உன் முகம்
பீதியில் நடுநடுங்கி
உன் விழியோரம் துளிர்த்து
உதிர்ந்த ஒற்றைத்துளியின் அடர்த்தியில்
சட்டென அணைந்து
அடங்குகிறது பெருந்தீ
மென்னகையோடு நாம்
அணைத்துக் கொள்ள
சாம்பலான மூங்கிலிலிருந்து
கசிகிறது
இசை, மெலிதாக.
– ப்ரியன்.