அவள் + காதல் = அவன் (01)

ஒவ்வொரு
உயிர் இழையிலும்
உந்தன் நினைவுகளை
புதைத்து வைத்திருக்கிறேன்
நான் கரியாவதும்
வைரமாவதும்
உன் வருகையில்!

#


குழந்தை வரைந்து
பாதியில் விட்ட
ஓவியமாய் காத்திருக்கிறது
காதல்
நின் வருகைக்காக !

#

வறண்ட வனாந்திரத்தில்
ஒற்றை இலையுடன்
பெருமழைக்காக நின்றிருக்கும்
மரமென
உயிர் பிடித்து
காத்திருக்கிறேன்
உன் வருகைக்காக!

#

அறுவடை கண்ட
கம்பங்காட்டில்
தானியம் பொறுக்கும்
சிறு பறவையென
உன்னுடனான சந்திப்பிற்கு
தேடித் தேடி
சேகரிக்கிறேன்
சொற்களை!

#

என் நாட்காட்டியில்
காலம் தொடங்குறது
உனை
கண்ட நாளில் இருந்து!

  • ப்ரியன்.
https://www.theloadguru.com/