வணக்கம் நண்பர்களே!
நன்றி! வேறுவார்த்தைகளில்லை என்னிடம்!
விக்கியையும் ப்ரியாவையும் தனிமையில் விட்டு கொஞ்சமே கொஞ்சம் உங்களுடன் பேச ஆசை! அமரலாமா?நன்றி!
முதலில் தன்னிலை விளக்கம் தரவேண்டிய கட்டாயத்தில் நான்!என்னை மிக நன்றாக அறிந்தவர்கள் கூட யாரவள் என வினவுகின்றனர்…தமிழ் கொண்ட வெற்றி!உண்மையில் “விக்கி”,”வித்யா”,”சின்னி”,”அம்மா”,”அப்பா” அப்புறம் “கலை” தவிர மற்றவை
கற்பனையே! ம்.ப்ரியாவும்…மும்பையில் ஒரு மழைப்பகலில் வேலைவிட்ட புதிதில் இப்படி ஒருத்தி காதலியாய் கிட்டினால்?போட்ட விதை…அது ஆயிற்று ஒன்றரை வருடங்கள்…இப்போதுதான் உயிர் பிடித்திருக்கிறது!மற்றபடி பலரும் “மெயிலி” கேட்டபடி உண்மை சம்பவமொன்றுமில்லை!
நன்றி சொல்லவேண்டிய நேரம்!உயிர் கொடுத்து வளர்க்கும் தாய்க்கும்!எல்லோரும் தம்மக்களை ஆங்கிலப்பள்ளியில் சேர்க்க! எனை தமிழ்ப்பள்ளியில் சேர்த்து உதவிய முதன் ஆசிரியன் தகப்பனுக்கும்!கன்னடம் பேசும் எனையும் ஒரு பொருட்டாய் மதித்து என்னிடம்
தங்கி நிற்கும் என் தமிழுக்கும்!தப்பாய் சொல்லுகையில் திருத்தி;துவண்ட கணம் தட்டிக்கொடுக்கும் என்னினிய நண்ப நெங்சங்களுக்கும்!இவர்களுக்காவது ஏதாவது செய்திருப்பேன்…முகம் கூட தெரியாமல் “மெயிலி” உற்சாகம் கொடுத்த சில நண்ப நல்லுள்ளங்களுக்கும்!கட்டக்கடைசியாய்,ஆனால் சத்தியமாய் இதுவரை கண்ணாமூச்சிகாட்டினாலும் என்றாவது நான் கண்டுகொள்ளப் போகும் என்னருமை “ப்ரியா”விற்கும்!ஐயோ கோபிக்காதே காதலே…தமிழும் நானும் தடுமாறி பாதைதெரியாமல் முழித்த நேரமெல்லாம்…கைப்பிடித்து வழி காட்டி அழைத்து வந்த குழந்தை “காதல்” உணர்ச்சிக்கும்…
இது சமர்ப்பணம்!
சிலருக்கு பிடித்திருக்கலாம்! – மகிழ்ச்சி
பலரை இம்சித்திருக்கலாம்! – மன்னிக்க!
மீண்டும் இம்சிக்கவோ! மகிழ்விக்கவோ!
கட்டாயம் வருவேன்…இப்போதைக்கு விடைக்கொடுங்கள்!
திட்டோ?பாராட்டோ?
mailtoviki@gmail.com அனுப்புங்கள்!
நன்றி!
ப்ரியமுடன்
(“ப்ரியாவுடன்”னு போட வேண்டிக்கோங்க!)
ப்ரியன்…
மொட்டு
காதல் – 1
16.7.2001 திங்கட்கிழமை
“விழியீர்ப்பு விசைகள்”
வாசித்துக் கொண்டிருக்கையில்தான்
நுழைந்தாய் எதிர்வீட்டுத்
தோழியின் புதுத்தோழியாய்!
காதல் – 2
டேய் இது “ப்ரியா”
அடுத்த வீட்டில் புதுசா
குடிவந்திருக்காங்க – தோழி…
அறிமுகத்தில்
“வணக்கம்” சொல்லி நீ
கைக்குவிக்கையில்
எதோ உள்ளுடைந்து
அலறியது;
இவள் இவள்
இவளேதானென்று!!!
காதல் – 3
அம்மா குங்குமம்
இட்டு – மகாலட்சுமியாய் இரு
வாழ்த்தினார்கள்
வழக்கமானதுதானென்றாலும்
மருமகளை வாழ்த்தியதாய்
பட்டது எனக்கு!
என்றும் மலரா
குறிஞ்சிப் பூ!
எங்கள் வீட்டு ரோஜா!!
உந்தன் கூந்தலில்
தங்கையின் தயவு!
நாய்க்குட்டியும் கூட
உன் காலடியில் அடிபடாமல்
சுற்ற கற்றுக்கொண்டது!
நான் மட்டுமே
தள்ளி நின்று
ரசித்தேன்!
தோழியின் கேலிப்
பார்வையினுடே!
கண்டிப்பாக அன்று
திருஷ்டி கழித்திருப்பார்கள்உன் வீட்டில்!!
காதல் – 4
நீ வந்து சென்ற
கணத்தில் டைரி
சுமந்தன இரு கவிவரிகள்!
கொஞ்சம் தள்ளி
நின்று ரசித்தேன்
அவையிரண்டும் நீ
விட்டுப் போன
உன்னிரு கருவிழிகள்!
காதல் – 5
sஉனக்கு பிடித்த
சுஜாதாவும் வைரமுத்துவும்
என்னிடத்தில் இருந்ததில்
செளகரியம்
அடிக்கடி வந்துபோனாய்!
காதல் – 6
தோழியும் நானும்
பேசிக் கொண்டிருக்கையில்
சத்தமிடாமல் இடையில் வந்தமர்ந்தாய்!
ஒரு உலகப் போர்
தொடங்கியது நெஞ்சில்!
காதல் – 7
அம்மாவின் அழைப்பிற்கு
தோழி நகர்ந்துவிட!
வானம் பார்த்தும்
பூமி கண்டும்
அமர்ந்திருந்த நம்மை
புன்னகைத்த படியே
மெதுவாய் க்டந்து
கடிகாரம்!
மெதுவாக நீதான்
அரம்பித்தாய்!
“கவிதை எழுதுவிங்களாமே”
‘கலை’ சொன்னா…
மேலன்னதில் ஒட்டிய
நா விழ மறுத்ததில்
என் புன்னகையால் கழுவப்படுவதற்காகவே
அமைந்ததாய் ஆனது அந்நிமிடம்!!
காதல் – 8
அடுத்த நாளே என்
பழைய கவிதைகளைத்
தேடித் தேடி
புதிதாய்
புனைப் பெயர்
எழுதித் தந்ததாய்,
ஞாபகம்!
காதல் – 9
அடுத்த நாள்!
கவிதைகளைக் கைசேர்த்தவள்!
விமர்சனம் ஏதும் சொல்லாமல்
காதல் கவிதை
எழுதுவீங்களா?
கேட்டபோது
‘ம்’ என்ற வார்த்தை
மட்டுமே துப்ப முடிந்தது!
இப்போது அதை மட்டுமே
எழுதி தொலைக்கிறேன்
என்பதை மனதில் சுமந்துகொண்டு!
சிரமப்பட்டு உச்சரித்தாய்
எனக்காக ஒன்று வேண்டும் நாளை!
‘கண்டிப்பாக’
என்னை அடக்கிவிட்டு
உற்சாகமாய் துள்ளிக்குதித்து
உரக்கச் சொன்னதுஉள்ளிருந்த கவிதை!
காதல் – 10
வெளியே போய்வந்தவன்
வீட்டையேப் புரட்டிப் போட்டேன்!
கவிதைக் குறிப்புகளைக்
காணோமென்று!
அம்மா மெதுவாகச்
சொன்னாள்;
நீ வந்துச் சென்றாயென்று!
நீ எடுத்துச் சென்றிருக்க மாட்டாய்!
எனக்குத் தெரியும்!
பழகிய நாய்க் குட்டியென
அவைதாம் உன் பின்னால்
ஓடி வந்திருக்கும்!
காதல் – 11
நன்றி கெட்டதுகள்!!
காகிதம் போட்டும்
மசி ஆகாரமிட்டும்
வளர்த்தவனைவிட்டு!
நேற்று வந்தவளுடனா
ஓடிவிட்டீர்?!
மறுபடியும் காலெடுத்து
வையும் காலொடித்து விடுகிறேன்!
உரக்கமாய் உலறியவனை
அம்மா சிரித்தவாறே
தலையில் அடித்துக் கொண்டு
“வித்யா இவனுக்கு முற்றிவிட்டது”
தங்கையிடம் சொல்வதாய் என்னிடம்
சொல்லியவாறு நகரலானார்!
உள்ளே உறங்கப்போன தங்கைகூட
குரலுக்கு ஒர் கணம்
எட்டி சிரித்து விட்டுப் போனாள்!
ஆகா,இவர்களுக்கு புரிந்து விட்டது!!!
உனக்கும் கவிதைகளின்
உலறல் புரிந்துபட வேண்டும்!!
ஏக்கம் ஒருபுறம்!!
புரிந்துபடுமோ??பயம்
ஒருபுறம்!!
உன் உணர்ச்சி காண
கவிதை தாங்கி நின்ற ஓர்
காகிதமாயிருந்திருக்கலாம்
அன்று மட்டும்! – தவமொருபுறம்!!அழகான அவஸ்த்தைஇரவு முழுவதும்!!
காதல் – 12
பத்திரமாய் கைச் சேர்த்தாய்!
ஆயிரம் முறை மன்னிப்புக் கோரினாய்!
அற்புதமென்றாய்!
யாரவளென்றாய்!
பாவிகளா?இதை கூட சொல்லாமல்
இந்நேரம் என்னடா செய்தீர்கள்;
அவள் வீட்டில்! கடிந்து கொண்டேன்
கவிதைகளிடம்!
ஒருவேளை உன்வாசிப்பை
தாலாட்டு என உறங்கி
போனதுகளோ??
மனம் முழுவதும்
குழப்பரேகைகள்!
உன் முகம் மட்டும்
பாலில் துடைத்த
நிலவென தெளிவு!
சொல்லுடா சொல்லுடா!
அவள் நீதானென்று
சொல்லிவிடுடா!
உன் மனம் கதறிய வார்தைகள்
அன்று கடைசி வரைஎனக்கு கேட்கவே இல்லை!
காதல் – 13
சில நாள்
செலவில்…
புனைப்பெயரின் விளக்கம்
கேட்டாய்!!
புரியவில்லையா?
என் மனம் வினவியதும்;
என் பெயர்தானே??
உன் மனம் முணுமுணுத்ததும்;
கேட்டுவிட்ட
தோழியின்,அம்மாவின்
நமட்டுச் சிரிப்பு!!
இன்னமும் கண்களில்!!
காதல் – 14
தங்கையிடம் காட்டிய
புதுப்பாசம்!
தாயிடம் பகிர்ந்துகொண்ட
புதுநேசம்!
அப்பாவிற்கு காட்டிக்கொடுத்திருக்கும்
நான் காதலிலிருப்பதை!
என்னடா?ஆள் புதுசா இருக்கே?
ஏதாவது காதல் கீதலா??
அப்பா கேட்ட போது…
அது வந்துப்பா…
ஒண்ணுமில்லையே!
தட்டுத் தடுமாறி
மழுப்புகையில்!
“சீக்கிரம் சொல்லிடுடா இல்லாட்டி
உன் அம்மா மாதிரி
ஒருத்திகிட்டே தான் கடைசிலே
மாட்டிக்குவே!”
சொல்லிய அப்பாவிற்கும்
அம்மாவிற்கும் மெலிதாய்
செல்லச் சண்டை துவங்கிய கணம்;
எத்தோச்சையாக வந்து
ஓடிப்போனதாகச் சொன்னது
உன் ஓட்டத்துக்கு
ஈடுகொடுக்காமல்
பின்தங்கிப் போன கூந்தல் வாசனை!
காதல் – 15
“ப்ரியா”வைக் காதலிக்கிறாயா?
இது நண்பியின் முறை!
“ம்” என்றது மனம்!
இல்லை என இப்படியும்
அப்படியும் ஆட்டும்
தலை மட்டும்!
தெரியவில்லை குளறியது
நா மட்டும்!
கண்டிப்பா அதுதான்!
அவகிட்டே சொல்லிடுட்டா??
கேட்டபடியே நகர்ந்த தோழியை
வேண்டாம் வேண்டாம்
முணங்கியபடி துரத்தியது
சத்தம் மட்டும்!!
முன்னேறிய துவேசியை
விட்டுவிடு விட்டுவிடு
பின்னுக்கு இழுத்தது உள்ளம்!
வரவேற்பறை வரை முன்னேறியவள்!
நீயே சொல்லிவிடு
நாளை!
திரும்பி வந்தவளை…
திட்டிக் கொண்டு
எழுந்தவனுக்கு…
கடைசி வரைத் தெரியாது!
வரவேற்பறையில் நீயும்
உன் நாணமும் சம்மணமிட்டு
என் தவிப்பை ரசித்துகொண்டிருந்தது!
காதல் – 16
“பரதேசி” இப்படித்தான்
இதே வார்த்தைதான்
உபயோகித்தாள் தோழி!
ஏன்டா நேற்று
சொல்லவில்லை!
என்றும் தவறாமல் தரும்
கவிதை கூட தரவில்லை?
ஏன்டா?கேட்டவளிடம்
பயமாயிடுத்து! “கலை”…
பயதைத் தூக்கி
குப்பையிலே போடு! – உன்
காதலைத் தூக்கி
கைப்பையிலே போடு!
தைரியம் தானா வரும்!
நானும் ப்ரியாவும்
நாளை கடற்கரைப்
போறோம்!
நீயும் வர்றே!
சொல்றே!
மறுத்துட்டா??
மறுக்க மாட்டா…நான் கியாரண்டி!
சொல்லிய படியே
நகரும் தோழியை
நான் மட்டுமல்ல
நட்பும் ஒழிந்திருந்து
என்னை பொறாமையாகப் பார்த்தது!
அவள் கொடுத்துப்போன
தைரியத்தில் என்னைப் போலவே
இரவெல்லாம் கண்விழித்து
காத்திருந்தது என்னறை
மின்விளக்கு…
நாளைநான் காணப்போகும்
முதல்காதல் பகலுக்காக!
பூ
காதல் – 17
உயிர்க்காதல் சுமந்த
பேனா துப்பிய
வார்த்தைகள் காகிதத்தில்!
துப்பாத பல காவியங்கள்
மனதில்!
மறைத்து வைத்த
ஒற்றை ரோஜாவுடன்! – நான்
தோழியுடன்
துணைக்கு நீயுமோர்
ரோஜாவாய்!
வாருங்களேன் கால் நனைத்து
திரும்புவோம்! – அழைக்கும் தோழி
“இல்லை நாங்கள் வரவில்லை”
எனக்கும் சேர்த்து பதில்!
முகம் நோக்கி என் உணர்ச்சி படித்து
மண் நோக்க அலையாகும் – கண்!
இருவரின் படபடப்பை
புதுக்கவிதையென அலை நோக்கிப்
புறப்பட்டது நட்பு!
ஏதேதோப் பேசிக்கொண்டோம்
நம் காதலை தவிர!
ஏதோ குருட்டு தைரியத்தில்
ரோஜா எடுத்து நீட்ட இருந்தவனை
ஒரு நிமிடம் திடுக்கிடவைத்தது
உன் குரல்!
“விக்கி இதைப்பாரேன்”
“என்னிதயத்தில் நீ காதல் பூ
நான் சூட்டிக் கொள்ளவா?
இல்லை சாமிக்கு அனுப்பவா?”
மணலில் எழுதியிருந்தாய்!
“அருமை ப்ரியா!!”
சொல்ல வந்தவன்
வார்த்தைத் தொண்டையில்
சிக்கி விக்கித்துப் போனேன்…
அது என்ன வலது ஓரத்தில்
மணி மணியாய் இருவார்த்தைகள்
இல்லையில்லை ஒருவார்த்தை
“ப்ரியாப்ரியன்” ?புரிந்த கணம்
உண்மையில் புதிதாய்ப் பிறந்தேன்நான்!!
காதல் – 18
வார்த்தைகள் குண்டுகளாய்
உருண்டு விளையாடின
தொண்டைக்குழிகளில்!
நம்மை கண்டு
கிண்டல் பேசி
நகர்ந்தன நண்டுத்
துணைகள் இரண்டு!
நீயென்ன புது மொழி?
மெளனத்திடம் மெல்லியதாய்
விசாரித்துக் கொண்டிருந்தது தமிழ்!
ஒருவரை ஒருவர்
மாறி மாறி
அவசரஅவசரமாய்
தின்றுவிட முயன்றதில்
துளிர்க்கும் கண்கள்!
இப்படித்தான் இவற்றைத்
துணைக் கொண்டுதான்
அமர்ந்திருந்தோம்;
தோழி வந்து நம் தோள் குலுக்கும்வரை!
காதல் – 19
தோழி வாங்கிவந்த
“ஐஸ்கிரீம்”
உருகிப் போவது கூட
தெரியாமல்
ஒருவரை ஒருவர்
விழுங்கி கொண்டிருந்தோம்!
தோழியை சாட்சியாக
வைத்துக்கொண்டே!
“நேரமாகுது…போகலாம்” – சொல்
தோழி இதழ் உதிக்கும் முன்
“நாங்கள் பின் வருகிறோம்
நீ போ!” சொல்லும் எனை
நீங்களாப் பேசியது? – எனப்
பார்த்தாய்…
அடி………..
ஆளப் பாரு!
மிரட்டி எழவைத்த
தோழியை கோபத்தோடு
பின் தொடர்கிறேன்
நான்!
மார்பின் குருக்கே
கைக் கட்டி
ஓரக்கண்ணால்
எனைப் பார்த்து
சிரித்துக் கொண்டே
தோழியுடன் சம்பாஷணை
செய்தபடி நீ!
கொண்டுவந்த ரோஜாவை
கடல்
ரசிக்கவிட்டு வந்தேன்!
கொஞ்ச தூரம் கடந்து திரும்பி
பார்த்தேன்!
அதுபாட்டிற்கு யாருக்கோ
வரவேற்பு
தந்துகொண்டிருந்தது!
அட,துணைக்கு மூச்சிரைக்க
ஓடிக்கொண்டிருப்பது;
உன் கூந்தல்உதிர்ந்த
ஒற்றை மல்லிகை!
காதல் – 20
நாளைக் காலைப்
பார்க்கலாம்!
கையசைத்துப் போனாய்!
உன் வாசத்தை மட்டும்
என் துணைக்குவிட்டு!
காதல் – 21
காலணி கழற்றி
உள் நுழைகையில்!
“என்ன அய்யா முகம்
தெளிவாய்ட்டு இருக்கு?”
கத்திவிட்டு
பிடிகொடுக்காமல்
ஓடிப்போனது
தங்கைப் பிசாசு!
“அகதின் அழகு முகத்தில்
தெரியும்” – பழமொழி
இது கண்டிப்பாக
அம்மா!
“என்னடா இதெல்லாம்?”
அட,சின்னி!!!
“சின்னி எப்போ வந்தே?”
தூக்கி கரகம் ஆடினேன்…
தாய்வழிப் பாட்டி…
என்னடா…என்ன நடக்குது?
கேட்ட கணம் நிறுத்தி
சின்னி மடியில்
தலைச் சாய்த்து
வானம் பார்த்து சொல்லியது
இதுதான்!
“ஒரு அகல்விளக்கு
இந்த இருண்ட வானத்திற்கு
வெளிச்சம் தர இசைந்துள்ளது…!”
காதல் – 22
தனிமையில் நான்!
வானம் ருசிக்க
மொட்டை மாடி!
ரோஜா மெத்தை;
எனக்கே எனக்கான
ஒற்றை நிலவு!
நான் பெயரிட
காத்திருக்கும் சில
மின்மினிப் பூச்சிகள்!
என் வேண்டுதல்கள் இவை!
அனைத்தும் அருகே!
தூக்கம் மட்டும்
துரத்தித் துரத்தி எட்டா தூரத்தில்!
தூணை துணைக்கு கட்டி
உன் வீட்டை எட்டிப்
பார்க்கிறேன்!
ஐயோ!!
யாரது உன் வீட்டு
சுவரேறிக் குதிப்பது!
இங்கும் அங்கும் பார்த்து
அவன் நெருங்குவது உன் அறை அல்லவா!!
ஆ!!இது என்ன அறையிலிருந்து
வெளிப்பட்டு உள்ளிழுத்து
ஒற்றை முத்தம் தந்து
புன்னகையினுடன் கையணைத்து
வழி அனுப்புவது
உண்மையில் நீதானா??
ஏதோ கெட்ட வார்த்தை
வாய்வரை வந்து வெளித்துப்ப
சக்தி அற்றவனாய் நான்!
வந்தவன் அடுத்து வந்தது
நேரே என் மொட்டை மாடிக்கு!
ஏதோ எதிர்பார்த்தான் என்னிடம்
ஒன்றும் பேசாமல் நான் நின்றிட!
படுக்கையில் விழுந்து உறங்கிப் போனான்…
இதழ் மயக்கம் போலும்!
இவன் யார்?இவன் என்ன உறவு..??
இவனிடமா கேட்பது??இல்லையில்லை…
உன்னிடம்தான் கேட்கவேண்டும்…
நள்ளிரவு!
சுவரேறிக்குதித்து!
ரோஜா முள் கிழித்தல் பொறுத்து
உன் வீட்டு பப்பியிடம் கடி பட்டு
உன்னறை சேர்கிறேன்!
அவனுக்கு காத்திருந்தது
போலத்தான் காத்திருந்தாய்! – எனக்கும்
அதே புன்னகை!
அதே காதல்!!
அதே மோகம்!!!
அதே தாபம்!!!!
கோபத்தோடு நான் வாய்திறவும் முன்…என் தோளில் கைவைத்துகட்டிய படி நீ பகன்றாய்”காதல்” வந்தான் கண்டாயா??
காதல் – 23
கூந்தல் சுகந்தம் சுவாசித்து
வானம் பார்த்து
நிலவுக்கும் உனக்கும்
ஆறுவித்தியாசங்கள் கண்டறிய
முயலுகையில் சிணுங்கினாய்!
யாராவது பார்த்தால்
தப்பாகிப் போகும்!
யாராவது பார்ப்பதா?
அடி அசடே…
உலகமே நம்மைத்தான்
பார்த்து கிடக்கிறது!
நிலவை பார்!
பொறாமையில் கொஞ்சம்
கருமை!
தென்றல்
நம்மை புரளிப்
பேசியதில் கொஞ்சம்
உஷ்ணம்!
ஆரம்பித்த கணம்
ஆரம்பிச்சுட்டியா?
போடா போய் தூங்கு!
விரட்டிவிட்டாய்!
திரும்புதலுக்கே காத்திருந்தது போல்
விழித்து பாதியிரவில்
கதைக்க ஆரம்பித்தான்!
“காதல்!”
கேட்டுக் கொண்டே படுத்துகிடந்தேன்…
உனக்கு தாலாட்டு பாடிய மீதி
வரியை காட்ட ஓடி வந்தது தென்றல்!
கண் அயர்கையில்
மெல்ல என்னுள் நுழைந்து
எனைப் பார்த்து
மெலிதாய் புன்னகைத்து வைத்தான்
“காதல்!”
காதல் – 24
உன் மூச்சுகாற்றில்
பூவிதழ் வெடிக்கும்
சப்தத்தில் விடிகின்றன
என் கிழக்குகள்!
உன் வீட்டைக் கடக்கையில்
கோலச்சங்கிலியில்
கட்டுண்டுத் தவிக்கின்றன
என் கால்கள்!
“ப்ரியா ப்ரியா”
என விளிக்கும்
என் எல்லா
“system.out.println”கள்!
முன்னைவிட அழகாக
எழுதுகிறேன்…
சொல்லும்
என் கவிதைகள்!
இவையெல்லாம்
சொல்ல ஆரம்பித்தேன்;
“உளற ஆரம்பித்துவிட்டாய்
நிறுத்தியாக வேண்டும்”
“எப்படி” – நான்
“இப்படி” என்ற படி
முத்தமொன்று தந்தாய்
மூர்ச்சையாகி நின்றது
பேச்சும் காற்றும்!!
“இனி அடிக்கடி உண்மை
உலறுவேன்!”
“உதைபடுவாய்”
குட்டிச் சொன்னாய்!
“ஆ!வலிக்குதடி”
மெளனம் காத்தாய்;
“வலி நிறுத்த ஒர் முத்தம் தாயேன்!”
பிச்சை தட்டு ஏந்தாதது ஒன்றே குறை!
“ஆசை தோசை”
நம் காதலை கேட்டுச் சிரித்து
இன்னும் கேட்க;
கால்வலி தணிக்க
நிழலுடன் சேர்ந்து
அப்படியே அமர்ந்துகொண்டது
அங்கிருந்த மரம்!
காய்
காதல் – 25
நேற்றுவரை
என்னுயிர் வளர்த்தவள்தானே நீ!
முன் வராமல்
பேச்சு தராமல்
உயிர் சுருங்க
காரணமானாய்!
தேடித்தேடிப் பார்த்தேன்
தவிப்பே மிஞ்சியது!
தக்கக் காரணம் கிட்டவில்லை!
உன் தவிர்த்தலுக்கு!
காலை நடையில்
பேச்சு தரும்
உன்னப்பா கூட
கண்டுகொள்வதில்லை!
கண்டால் செல்லக்கடி கடிப்பதாய்
பலமாய் கடித்து கால்சுற்றும்
உன் ‘பப்பி’ கூட
பாராமுகம் காட்டியது!
இன்று பேசுவாய்;
நாளை விலகும்
உன் கோபமேகம்;
மனதிடம் சமாதானம்
சொல்லித் திரிந்தேன்!
அழைப்பு கலையிடமிருந்து
சொன்ன செல்பேசி தடவி
காதில்வைத்த நொடி
‘ப்ரியாவுக்கு கலியாணம்
முடிவு செய்திருக்கிறார்கள்’
சேதி சொன்னாள்!
‘ப்ரியா ஒத்துகிட்டாளா?’
‘இது என்ன கேள்வி?’
அவள் இஷ்டம்தானே எல்லாம் வீட்டில்
ஈயத்தை காய்ச்சி ஊற்றியிருக்கலாம்!
தோழியும் மெலிதாய் மறுமுனையில்
அழுததாய் தெரிந்தது!!
“படீர்” ஏதோ வெடித்தது!
இதயமா? – இல்லை
இதயத்திலொரு எரிமலையா?
இனி எதுவாயிருந்தால்தான் என்ன??
காதல் – 26
ஒன்றும் பேசாமல்
செல்பேசி அணைத்து,
பொய்சொல்லி
பகுதி நாள்
பணிவிடுப்பு பெற்று!
முதன்முதலில் காதல் வரைந்த
மண்ணில் முன்னங்கால்
புதைத்து கடல்வெறித்து;
மெளனமாய் அழுது!
அவளுக்கு அது சுகமென்றால்
அதுவே நடக்கட்டும்
மனம் செதுக்கி!
“நன்றாக இருக்கட்டும்”
முடிவாய் கண்ணீர் துடைத்து!
வீடுத்திரும்புகையில்
மணி 9.30!
அழைப்பு மணி அழுத்த இடம் தராமல்
கால் சப்தம் கேட்டே தாள் விலக
கதவின் பின் புன்னகையுடன் நீ!
உன்வீட்டார் எல்லாம்
என்ன இந்நேரம் இவ்வீட்டில்?
என்வீடுதானா?
கேள்விக்குறியுடன் நெற்றி சுருங்குகையில்
“வாங்க மாப்பிள்ளை” – உன் அப்பா
குரல் கேட்டு! – ஐயோ என்
பின்னால் உன் அவரா?
அவசரமாய் திரும்பி
அட இவன் உன் அத்தைமகனல்லவா?
இவன் ஊருக்கு உன்
அப்பா சென்றுவந்தலிருந்தல்லவா
எல்லாம் மாறியது!
“வாங்க” சம்பிரதமாய்
அழைத்து துணிமாற்றி வர
என்னறை நுழைகையில்
என்னைக் கண்டசோகத்தில்
சத்தமாய் ஒப்பாரி வைத்து
மூக்குசிந்தி அழத்துவங்கின
என் கவிதைகள்!
கனி
காதல் – 27
உன்னருகில் மட்டும்
இடமிருக்க தயங்கி சுவரில்
சாய்ந்து நின்றபடி கவனித்தேன்!
“மாப்பிள்ளை எப்போ கலியாணம் வைக்கலாம்”?
கலியாணம் பேசும் நேரமாயிது??
முந்தி வந்தது உன் குரல்
நாளையே கூட நல்ல நாள்!
“இருமா”?மாப்பிள்ளை சொல்லட்டும்…
உன்னப்பா குரல்கேட்டு
அத்தை மகன் நான் முகம்பார்க்க!
எல்லோரும் எனைப்பார்க்க…
ஏதோ புரிந்தும் புரியாதவனாய்
நிற்க!
அட பைத்தியமே உன்னைத்தான்
என்றபடி தலையில் குட்டி
தர தரவென தங்கை இழுத்து
உன்னருகில் அமரவைத்தாள்;
மெல்ல மெல்ல விடியதுவங்கியது
இதுவரை இருண்டருந்த மனம்!
பக்கத்தில் ஒளி வடிவில்
ஒளிர்ந்து கொண்டிருந்தது உன் முகம்!!
கலியாணம் பேசலாம் இந்நேரத்திலும்!!
காதல் – 28
திருமண அரங்கம்.
மேடையில்!மெதுவாய்
உன்பக்கம் சாய்ந்து
வெகுநாளாய் மனமரித்த
கேள்வியை கேட்டேன்;
“ஏனப்படி அன்று
அதிர்ச்சி தந்தீர் எல்லோரும்?”
“நீதானே சொன்னாய்…
எதிர்ப்பில்லாமல்
சுவாரசியமாயில்லை காதல்”
புருவம் தூக்கி சொன்னாய்…
அட!எத்துணை அழகாய்
காதலிக்கிறாய் நீயும்!!
சொன்ன சமயம்
ப்ரியமான ப்ரியா
பக்கத்தில்
தம்பி வாழ்க்கை இனி
“இனிமை 24×7”
கண்ணடித்து நகர்ந்தாள்
தோழி!!
உனக்கும் சேர்த்து நான்
அதிகமாய் வெட்கப் பட
இடம் பொருள் பாராமல்
சத்தமாய் சிரித்து தொலைத்தது
“காதல்”!!
– சுபம் –
வகுப்பு நடக்கையில் ஏதாவது கிறுக்கி தருவேன்…அதை கவிதை என மதித்து படித்து…புன்னகை பதிலை தந்த என் முதல் வாசகனுக்கும்!
நல்லதா காப்பி அடிக்கிறாய் என உற்சாகப்படுத்திய என் நண்ப உள்ளங்களுக்கும்!
எவனுக்கு புரியுது?? என்று “மெயிலி” அடுத்தநாள் அவனுக்கு அனுப்பாமல் விட ஏனடா இன்று ஒன்றும் காணோம் என பதில் “மெயிலி”ய நண்பனுக்கும்!
இப்பிடியே போனால் சுவாரசியம் இருக்காது!பிரித்து விடு!அதுவும் பெண் துரோகம் செய்வதாய் முடி!என்ற எனதருமை நண்ப வட்டங்களுக்கும்!
எனக்காகவே தமிழை தத்தி தத்தி படிக்கும் சில நண்பர்களுக்கும்!
🙂 😉 இப்படியே தன் மனமுணர்த்திய தோழிக்கும்!
“பிரிக்காதே!
நல்லாயிருக்கு!
இப்படியிருந்தால் நல்லாயிருக்கும்!
யப்பா ஒரு வழியா முடித்துவிட்டாய்!இனி சில நாள் நிம்மதி!”மெயில் பாக்ஸ்” நிரம்பாது!”
இதுவும் நண்பர்களே!!
சில முகமறியா நண்பர்களும்!அடக்கம்!!
சத்தியமாய் எனை ஆக்கியது!ஊக்கியது எல்லாம் நட்பே!
என்றும் எனை நேசிக்கும் நட்பிற்கே என் நன்றிகள்!
கால வெள்ளத்தில்,மீண்டும் சந்திப்போம்!
– ப்ரியன்.