கையசைத்து நகர்ந்தது இரயில்!

யப்பா!பிப்ரவரியில ஆரம்பிச்சது ஜூன் ல முடிஞ்சிருக்கு எல்லோருக்கும் (எனக்கும்) கதையே மறந்திருக்கும் 🙂

என்னை மடலிலும் சாட்டிலும் கேட்டுக் கேட்டு கடைசியில் எழுத வைத்துவிட்ட அன்புடன் குழும நண்பர் ரிஷி ரிஸ்வானுக்கு என் நன்றிகள்!மன்னிக்கனும் நண்பா ரொம்பவே உங்க பொறுமையை சோதிச்சுட்டேன்.

🙂 மீண்டும் ??? வருகிறேன் ஒரு தொடரோடு 🙂

காதல் 01

டேய்!டேய்!
சூரியன் வந்து நேரமாச்சு!
எந்திரிடா!
அம்மா நச்சரித்துக் கொண்டிருக்கையில்!
பட்டுத் தாவணி சரசரக்க
வந்து நின்றாய் நிலவாக!

காதல் 02

“அம்மா
ஒரு குடம்
குடிதண்ணி வேணும்!”
இப்படியல்லாமா குயில் கூவும்?
குழம்பி கண்ணைக் கசக்கியவன் முன்!
அடடா,
நேற்றைக்கு கனவில் வந்த
அதே தேவதை!

காதல் 03

சத்தியமாய்,
இன்றைய தேதிவரை
அன்றைய நாள்தான்
இனியநாள் எனக்கு!

காதல் 04

பார்க்காதப் பார்வை;
இதுவரைப் பார்க்காத பார்வை
நான் பார்க்க
அம்மா சொன்னாள்
“புதுசா குடிவந்திருக்கிறப் பொண்ணு”
நான் கேட்காத கேள்வி
எங்கே என் இதயத்திலா?

காதல் 05

என் அம்மா உன் அம்மாவும்
உன் அப்பா என் அப்பாவும்
நல்ல நண்பர்கள் ஆனதைவிட;
எனக்கு சந்தோசம்,
எங்கள் வீட்டில் பூக்கும் ரோஜாவும்
உந்தன் கூந்தலும் ராசி ஆனதில்தான்!

காதல் 06

எப்படி இருப்பாள்? எப்படி இருப்பாள்? –
நண்பர்களின் தொடர் கேள்விக்கு
எப்படி இருக்கவேண்டுமென்று
கனவு கண்டேனோ
அப்படி இருப்பாள் எனச்
சொல்லி தப்பிவந்த நாளில்,
நல்ல நல்ல கல்லூரிகளிலெல்லாம்
இடம் கிடைத்தும் வேண்டாமென்று
கடைசியில் நீ சேர்ந்த அதே கல்லூரியில்
சேர்கிறாள் மகள் எனச் சொல்லி
வருத்தப்பட்டாள் உன் அம்மா
குதூகலப்பட்டது என் ஆன்மா!

காதல் 07

எப்படி உணர்ந்தேனா?
உன்னுடன் முதல்நாள்
கல்லூரி வரும்போது
எப்படி உணர்ந்தேனா?
தெய்வத்துடன் நடந்துவர
வரம் பெற்ற பக்தனைப் போல்!
அடியேய்,
தெய்வத்துடன் நடந்துவர
வரம் பெற்ற
ஏழைபக்தனைப் போல்!

காதல் 08

நீ வந்ததிலிருந்து
கல்லூரி முழுவதும்
ஏகப்பட்ட மரியாதை
எனக்கு!
தெரியும் அது
சாமியின் காலடியில் கிடக்கும்
பூவுக்கான மரியாதை!

காதல் 09

நேற்றிருந்த நானாக
இன்று நான் இல்லை!
தனிமை துணையாய் போனது!
மொட்டைமாடி இரவு
கையில் புகை
நண்பர்களுடன் அரட்டை! – என்றிருந்த
அடையாளம்
அத்தனையும் அவசரமாய் மறந்துப் போனது!
உன் நினைவுகள் மட்டும் துணையாய் ஆனது!

காதல் 10

கல்லுரிச் செல்லும்
காளையர்களின் கனமான
கனவு இருசக்கர வாகனம்!
அப்பா வாங்கித் தர
அபசகுனமானது
உன்னுடனான பேருந்து
பயணத்திற்கு!

காதல் 11

தனியே உனை அனுப்பவாதா? – உன் அப்பா
உன்னையும் தொற்றிக் கொள்ள சொல்ல
பூவானது பின் இருக்கை!

காதல் 12

தினம் தினம்
அலுங்காமல் குலுங்காமல்
தேரில் உலாவரும்
அம்மனைப் போல்தான்
அழைத்துச் செல்வேன்!
நீயும் வழிதோரும் காணும்
பிள்ளைகளுக்கு எல்லாம்
புன்னகை வரம் அளித்துக்
கொண்டே வருவாய்!
இவன் மனம் மட்டும் குண்டு
குழி தேடித் தேடி குதித்து
தரிக் கெட்டு ஓடிவரும்!

காதல் 13

கடைசிவரை யாரென
கண்டறிய இயலவில்லை
நம்முடன்
மிதந்து வந்த வண்டியை பொறாமையில்
“பஞ்சர்” ஆக்கிய
களவானி யாரென்று!

காதல் 14

பெண்ணில்லா எங்கள் வீட்டிற்கும்
நீதான் கோலம் போடுவாய்!

போக வர பார்த்திருக்கிறேன்
அர்த்தமில்லாமல் பேசிப்பேசி
வழிந்து கொண்டிருக்கும்
என்வீட்டு கோலம்
உன்வீட்டு கோலத்திடம்!

காதல் 15

நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை
புடவைக் கட்டிக்கொண்டு
வந்த அந்நாளில்
நிலவில் முட்டி நின்று
அம்மாவிடம் வாங்கிக்
கட்டிக் கொண்டதை!

காதல் 16

காதலர் தினமன்று
உனக்கு கடிதம் கொடுத்த அவனுக்கு
நீ கொடுத்த பதிலடியில்
சொல்லாமல் கொள்ளாமல்
ஓடி ஒளிந்துக் கொண்டது
என் தைரியம்
தற்காலிகமாய்
என் காதலும்!

காதல் 17

அன்று உனக்காக
வாங்கிய ரோஜா
ஒற்றை இதழைக்கூட உதிர்க்கவில்லை இன்னமும்!

காதல் 18

ஒரு மழைநாளில்
அம்மாவீற்கு முடியாமல்போக
நீ செய்த உதவி கண்டு
அம்மா சொன்னாள்
“இவளைப் போல்
ஒரு மருமகள் வேண்டும்”
இவளே மருமகளாய் வேண்டும்
உனக்கு!
பாவமாய் வேண்டியது இதயம்!

காதல் 19

உன்னுடன் பேசிக்கொண்டிருக்கையில்
காற்றிலாடும்
கலைந்த கூந்தல் ரசித்திருந்தேன்!
என்னடாவென்றாய் புருவம் தூக்கி!

“கூந்தலில் தொங்கிக் கொண்டு
ஊஞ்சல் ஆடுகிறது என் இதயம்!”

கேட்டவள்,கொஞ்சம் முறைத்து
சடசடவென
சிரிப்பூ தூவினாய்!

அடடா!கவிஞனே!
இன்னும் சொல்லேன்!
என நீ கேட்க
முதன்முதலாய்
வெட்கம் கற்றேன்!

காதல் 20

கவிதையாய் நான் சொன்ன காதல்
உனக்குப் புறிந்ததோ?
புரிந்தும் புரியாததாய் நடிக்கிறாயோ?
எண்ணி மயங்கிகிடந்த நாளில்
மொட்டைமாடி இரவில்
“விக்கி” எனக்கொரு கவிதை வேண்டும்
என் ‘கவி’தைக்கு இல்லா கவிதையா?
சொல்ல வந்த கணம்!
வெட்கபூ பூத்தபடிச் சொல்லி முடித்தாய்
என் காதலனுக்கு தர…
அந்நேரத்தில் மடிந்தது என் உயிர்;
இன்றைக்கும்,
அதோ!அங்கு வானெங்கும்
நட்சத்திரங்களாய்
சிதறிக் கிடப்பவை
இதயம் சிதறிய சில்லுகள்!

காதல் 21

அவளோ?இவளோ!
என் காதலி என
பார்வை வீச வேண்டிய வயசடி!
அவனோ?இல்லை இவனோ?
உன் காதலன் என
நீ பேசும் ஆணிடமெல்லாம்
பொறாமை பார்வை வீச வைத்தாயே
கொடுமையடி கொடுமை!

காதல் 22

நல்ல கவிஞன் என்பாய்;
நல்ல நண்பனென்பாய்
என்னை நான் அறிய
தரும் பொழுதுகளில்;

உன் காதலைச் சேதப்படுத்த
விரும்பியதில்லையாதலால்
நல்ல காதலன் எனச்
சொல்லிக் கொள்வேன்
என்னையே நான்!

காதல் 23

அவன் அப்படிச் சொன்னான்
இப்படி சொன்னான்
என காதலன் புராணம்
நீ பாடி சிலாகித்திருக்க
சிரித்தப்படி கேட்டுக் கொண்டிருப்பேன்
மனதின்
மூலையில் குத்தவைத்து
அழுது கொண்டிருக்கும்
என் காதல்!

காதல் 24

அறிமுகப்படுத்தியதில்லை;
தூரமிருந்தும் அடையாளம்
காட்டியதில்லை;
உன் காதலனின்
பெயரும்கூட அறிய தந்ததில்லை;
ஆனாலும்
உன்னை விடுத்துப் பார்த்தால்
நான் மட்டுமே அறிவேன்
உன் காதலனை
உன்னுள் இருக்கும் காதலை;
இருக்கட்டும்
அவன் வரம் பெறவதற்கென்றே
பிறந்த ஆடவன்;
நான் சாபம் வாங்கவே
வந்த முடவன்!

காதல் 25

மொட்டைமாடியில் அமர்ந்து
கல்லூரி
கடைசி வருடத்தின்
கடைசி தேர்வுக்காக
படித்துக் கொண்டிருக்கையில்;
பக்கதிலிருந்த என் நோட்டு புத்தகத்தை
அனுமதி இல்லாமல்
எடுத்துப் பார்த்தவள்
கவிதைகள் எல்லாம்
உன்னைக் குறித்து இருக்க
பட்டென முடி
சட்டென பறந்து போனாய்;
ஆற்றி முடியாமல்
அழுது கொண்டே இருந்தது
அம்மா நீ
சொல்லாமல் போனாதாய்
கவிதை!

காதல் 26

அடுத்தடுத்த நாட்கள்
பேசாது நீயிருக்க
ஊமையாகிப் போனது
நான்!
ஊனமாகிப் போனது
மனது!

காதல் 27

கல்லூரி கடைசிநாளில்
எல்லோரும்
கலந்திருக்க
பிரிவு் கவலையில்
கரைந்திருக்க!
என் கண்களும்
அழுது கிடந்தன
நீ பேசாததால்
இறந்துப் போன – எந்தன்
இதயத்திற்காக!

காதல் 28

விடுமுறைக்கு ஊருக்கு பயணம்
வழியனுப்ப வலிய எனை
அனுப்பும் உன் அப்பா!
பாதையெங்கும் மெளன
முட்களுடன் பயணம்!

குடிக்க தண்ணீரும்
படிக்க சில புத்தகங்களும்
வாங்கி வந்தவனுக்கு
நன்றிகூட இல்லாதா நீ!

கைப் பையை கூட
என்னிடம் தராமால்
அந்நியமாய் நீ!
முதன்முதலாய்
உன் அண்மை வேண்டா
நிமிடங்கள் அவை!

மெல்ல மெல்ல
இரயில் நகர ஆரம்பிக்க
போ!போ!
மனம் சொல்ல
போய் ஏறிக் கொள்
என கடைசியாய் என் மெளனமும்
கலந்த வினாடியில்!

‘உன்னை விட்டுப் போவேனோ?
என் உயிரை தனியே விட்டு போவேனோ?’
என நீ கட்டியணைக்க
கூவி அழைத்து
கையசைத்து நகர்ந்தது
இரயில்!

நிமிர்ந்து பார்த்தவள்
நீ தான்டா இத்துணை நாட்களாய்
நான் சொல்லிச் சொல்லி
உன்னை வெறுப்பேற்றிக் கொண்டிருந்த காதலன் என்றபடி
மீண்டும் என் நெஞ்சில் முகம்புதைத்து
அப்போதும் ‘பெயர்’ சொல்லாமலே
சொல்ல

அதிவேக ரயிலாய் பயணப்பட்டது என் மனது!

– ப்ரியன்.

மடலாடலுக்கு : mailtoviki@gmail.com

https://www.theloadguru.com/