Category: பிற


சென்னைக்கு வந்து முழுதாய் 4 வருடங்கள் ஆகிவிட்டது , அதில் இது 4 வது புத்தக கண்காட்சி.கண்டதை தின்பவன் குண்டாவான் என்பதை யாரோ எனக்கு கண்டதை படிப்பவன் என்று சிறு வயதில் எனக்கு மாற்றி சொல்லி தொலைத்திருக்க வேண்டும் , அதனாலோ என்னவோ புத்தக கண்காட்சி எனக்கு திருவிழா காணும் குழந்தையின் குதூகலத்தை எனக்கு தந்திருந்தது.அம்மை கண்டு படுக்கையில் இருந்தாலும் ப்ரேமின் குறுந்தகவல் கண்டதும் ஞாயிறு (11.01.09) புத்தக கண்காட்சிக்கு முடிவு செய்திருந்தேன்.ஆனாலும் வண்டியில் இருக்கும் பெட்ரோல் புத்தக கண்காட்சி வரைக்கும் தாங்குமா என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது.நல்லவேளை எண்ணெய் நிறுவனங்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்து , பெட்ரோலும் கிடைத்தது.

* சென்ற முறையை விட இந்த முறை ஏற்பாடுகளும் , அரங்க அமைப்பு முறைகளும் நன்றாக இருந்தன.

* வழக்கம் போல் , கேன்டீன்லும் ஆன்மீக , சமையல் புத்தகங்கள் பக்கமும் கூட்டம் கலை கட்டுகிறது.

* கவிதை புத்தகங்கள் பக்கம் அதிக கூட்டம் காணவில்லை.ஆசிப் தலைமையில் கவுஜ கூட்டம் சீக்கிரம் கூடி அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி விவாதித்தல் நலம்.

* சுஜாதா இன்னமும் நன்றாக விலை போகிறார்.

* உயிர்மையில் 0 டிகிரி யை பார்த்துவிட்டு பையின் கணம் அறிந்து வாங்காமல் விட்டேன் , பாலபாரதி அழைத்து சென்று ஜியே வில் அதே புத்தகத்தின் மக்கள் பதிப்பை 30 ரூபாய்க்கு வாங்கி தந்தார்.(ரூ.120 மிச்சம்).

* காவல்துறையிடமிருந்து,தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பற்றிய புத்தகங்களை சென்னை புத்தகக் கண்காட்சி அரங்குகளில் விற்பனை செய்யக்கூடாது என்று வாய்மொழி உத்தரவாம் – வாழ்க ஜனநாயகம்.

* அரங்கிலும் , வெளி பந்தலிலும் அவ்வளவு கூட்டமில்லை , பொருளாதார மந்த நிலையா பெட்ரோல் தட்டுபாடா தெரியவில்லை.

* அரங்கிலும் புது புத்தகங்களின் வரவு குறைவே.

* புத்தக கண்காட்சில் , ரேடியோ மிர்ச்சிக்கு என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை.

* ப்ரேம் , அகிலன் , கார்த்திக் , திரு , பாலபாரதி , லட்சுமி , எழில்பாரதி , விழியன் , சாகாரா தென்றல் ஆகியோரை சந்திக்க முடிந்தது.

* சத்யத்தின் தாக்கத்தால் பர்ஸ் கொஞ்சம் இறுக்கி வைக்கபட்டதால் அதிகம் வாங்கவில்லை ,

0 டிகிரி
ஒரு இரவில் 21சென்டிமீட்டர் மழை பெய்தது
நடந்தாய்; வாழி, காவேரி

மட்டுமே வாங்கியவை.

* 50 மிலி காபி யின் விலை ரூ.10 , அதுவும் மண் மாதிரி நான் கேன்டீனில் குடித்துவிட்டு எழிலுக்கும் மதுவுக்கும் வாங்கி சென்றேன்.எழிலும் மதுவும் குடித்து பார்த்துவிட்டு , தெரிந்தே ஏன் வாங்கினீங்க என்று கேட்டார்கள்.ப்ரேம் ஏன் காபி நல்லாதானே இருக்கு என்றான்.பாவம் ப்ரேம்!?

இதுவே கடைசிப் பதிவு.

வழக்கமாய் மற்றவர்கள் செய்வதுப் போல் இதற்கு தமிழ்மணத்தின் மீதோ உங்கள் யார் ஒருவர் மீதோ குற்றம் சொல்லவில்லை , சொல்லப் போவதும் இல்லை, சொல்லவும் வாய்பில்லை.

ஏனெனில் என் இம்முடிவிற்கும் , உங்களுக்கும் எவ்வகையிலும் சம்பந்தம் இல்லை.

ஆமாம் , எனக்கு திருமணம் ஆவதற்கும் , பேச்சுலராய் இப்பதிவே கடைசி என்பதற்கும் நீங்கள் என்ன செய்வீர்கள் பாவம்.

அனைவரையும் மீண்டும் ஒருமுறை அன்புடன் அழைக்கிறேன்.

*

அழைப்பிதழ்

வடிவமைப்பு உதவி : http://www.4creativeweb.com/

அன்பின் நண்பர்களே,

இதயத்தால் இணைந்திட்ட
எங்களின் இல்லறப் பாதையெங்கும்
உங்களின் வாழ்த்துக்களால்
தோரணம் கட்டிட
விரும்பி அழைக்கிறோம்!

–  ப்ரியன்
மதுமிதா

(இடம் , தேதி மற்றும் நேர விபரங்களுக்கு படத்தை பெரிதாக்கி பார்க்கவும்).

அழைப்பு

பாப்பா பாட்டு!

கொஞ்ச நாள் முன்னால் வரை நானும் ஒரு சிறுவனாக இருந்தேன் என்பதை நினைத்தால் மிகவும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.கிழிந்த டவுசரில் கட்டமாக கிழித்த காகித்ததை தபால் என்று போட்டதும் , வேப்பங்கொட்டையை எச்சல் துப்பிய விரல் முட்டியில் வைத்து தோல் கிழிய அடித்ததும் , பகல் உணவு வேளையில் கமல் அணி ரசினி அணி என பிரிந்து அடித்துக் கொண்டதும் , சின்ன வயது சிநேகம் தந்த தோழியின் கதகதப்பும் , பறித்து தின்ற பருத்திப் பிஞ்சுகளின் சுவை நாக்கில் நிறையும் நேரத்தில், சத்தமாய் ராகத்தோடு இழுத்து இழுத்து பாடிய சில பாடல்களில் சிலவற்றை இங்கு பதிக்கிறேன்.

தோசை அம்மா தோசை
அரிசி மாவும் உளுந்த மாவும்
கலந்து சுட்ட தோசை
அப்பாவிற்கு நான்கு
அண்ண்னுக்கு மூன்று
அக்காவுக்கு இரண்டு
பாப்பாவுக்கு ஓன்று
சீனி நெய்யும் சேர்த்து
கூடி கூடி உண்போம்!

*

நிலா நிலா ஓடி வா
நிலாமல் ஓடி வா

மலை மீது ஏறி வா
மல்லிகைப் பூ கொண்டு வா

வட்ட அட்ட நிலவே
வண்ண முகில்ப் பூவே

பட்டம் போல பறந்து வா
பம்பரம் போல சுற்றி வா!

*

அணிலே அணிலே ஓடி வா
அழகிய அணிலே ஓடி வா

கொய்யா மரம் ஏறி வா
குண்டு பழம் கொண்டு வா

பாதி பழம் உன்னிடம்
பாதி பழம் என்னிடம்

கூடிக் கூடி இருவரும்
கொறித்து கொறித்து தின்னலாம்!

*

குள்ள குள்ள வாத்து
குவா குவா வாத்து

மெல்ல உடலைச் சாய்த்து
மேலும் கீழும் பார்த்து

செல்லமாக நடக்கும்
சின்ன மணி வாத்து!

*

தோசை அம்மா தோசை என்றதும் கை மேல் கை வைத்து தோசை ஊற்றுவது போன்ற பாவனையும் , நிலாவையும் அணிலையும் கை தூக்கி அழைப்பதையும் , வாத்து பாடல் படித்ததும் கைவலி டீச்சர்(கைவேலை டீச்சர்) குச்சியை கையில் வைத்துக் கொண்டு வாத்து போல குத்த வைத்து நடந்து காட்டியது நினைவுக்கு வருவதையும் இன்றும் தடுக்க முடிவதில்லை.

வெக்கை

வெக்கை – குறும்படம்

தமிழ் அகதி ஒருவரின் கண்ணீர் கதை…

இணையத்தில் சுட்டது…