யாவரும் நலம்…

Buddha

*

வானம்
வெறித்து அமர்ந்திருந்தாள்
கிழவி.

ஒட்டிய வயிறும்
கிழிந்த உடையுமென
மண்ணள்ளி தின்றுகொண்டிருந்தது
ஓர் பிள்ளை

சப்பத்து சப்தம்
கேட்டு நடுநடுங்கி விழுந்தான்
இளையவன்

தூரத்தில் எங்கோ
கேட்டது இன்று
கண்ணில் பட்டவளின்
கதறல்

மரமிருந்து இவற்றை மன குறிப்பெடுத்த
புத்தனின் அன்னம்
சுட்டு வீழத்தப்பட்டது
உளவு குற்றம் சுமத்தி

துப்பாக்கி வாசத்தோடு
வந்தவர்கள் புத்தனின்
காதில் ஓதினார்கள்
யாவரும் நலமென்று

புத்தனும் புன்னகையோடு
கேட்டு தலையாட்டினான்
அன்னம் திரும்பாததன்
பற்றிய கேள்வி எழுப்பகூட திரணியற்று

– ப்ரியன்.

எமக்கான மழை

நிகழப் போகிறது
மழை!
பிள்ளை வரைந்த
எளிய கோடாய்!

மின்னல்
இடியோடு
எம் மண்ணின்
வாசம் கொணரக்கூடும்
அது எம் நினைவாக!

யாரும் மழை வேண்டாவென
வேண்டி
கெடுத்திட வேண்டாம்!

எமக்காக அழ
யாருமற்ற இந்நிலத்தில்
எம்மோடு
அழுது அரற்றி
அரூபம் கொள்ளும்
அதில் கரையலாம்
கண்ணீர் துளிகள்
சில!

நின்று
நிகழட்டும் மழை!

– ப்ரியன்.
நன்றி : தை கவிதையிதழ் – 2009

தொடர்பு பதிவு : ஈழக்கவிதைகள்.