கால எச்சம்

சலசலத்து ஓடும்
ஓடை நீர்
புதர் மாறும் சர்ப்பம்
பாறையிடுக்கில்
ஒளியும் தவளை
கல் தேடி எடுத்து
முதுகு தேய்க்கும் பெண்கள்
குட்டையில் குதிக்கும்
குழந்தைகள்
கிளை தொங்கும்
வாண்டுகள்

எல்லாம் தொலைத்த
ஓடையோர ஆலமரம்
காலத்திடம் கெஞ்சியபடி இருக்கிறது
கடந்த காலத்துக்கு கூட்டிச்செல்ல சொல்லி

– ப்ரியன்

ஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 18

கிளை தொடங்கி
இலை எண்ணி முடித்து
சாய்ந்த மரத்தின்
வேராகும்
நேரத்தில்தான் வருகிறாய்
எப்போதும்

– ப்ரியன்

மனம் உறை பறவை – 07

கனிந்து உதிர்ந்துவிடும்
தருணத்தை எட்டுகிறது
உன் குவிந்த இதழில்
முத்தம்
இங்கே போர் மூள்கிறது
என் இதழுக்கும்
கன்னத்துக்கும்

– ப்ரியன்.