வீடெங்கும் உறவினர்கள்
வீதியெங்கும் நண்பர்கள்
பெண்கள் தொடர்களைத் தொடர முடியாமல் போனக்
கவலையில் அழுதுவைக்க!
ஆண்கள் ஆவேசமாய் அரசியல் பேச!
சிரித்துக்கொண்டே கையசைத்து
மேல் நோக்கி புறப்படுகிறேன்!
அதிசயம் தேவதூதன்
சொர்க்க வாசல்
திறக்கிறான் எனக்கு!
“அவ்வளவு நல்லவனா நான்?”
கேட்ட கேள்விக்கு
“இல்லையில்லை!
சொர்க்கத்தில் நுழைபவர்கள்
எண்ணிக்கைக் குறைந்துப் போனதில்
வரையறைகள் குறைக்கப்பட்டுவிட்டன!”
சத்தமாய் சிரித்துவிட்டேன் நான்!
உள்ளே நுழைந்தால்
வள்ளுவனும் ஒளவையும்
சத்தமாய் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள்
சத்தியமாய் புரியவில்லை;
சுத்தத் தமிழாயிருக்கும்!
சொர்க்கம்
வெறிச்சோடிக் கிடக்க!
பக்கத்திலிருந்த தூதனிடம்
“ஏனப்பா,எங்கே சிவனும்
மற்றையோரும்?”
“இப்போதே காண வேண்டுமா?
இரவுவரைக் காத்திருப்பாயா?”
ஐயோ!மேலோகத்தில் இரவும் பகலும்
சில கோடி ஆண்டுகளல்லவா?
“இப்போதே!”
“கொஞ்சநேரம் நரகத்திலிருக்க
ஆசைப் போலும்!”
“அய்யோ!என்ன சிவனும் திருமாலும்
நரகத்திலா? ஏன்??”
“அவர்களையேக் கேட்டுக்கொள்” சொல்லித்
தள்ளிவிட்டான் அதல பாதாளத்தில்!
சுற்றிலும் தீயெரிய
பேய்கள் சுற்றித் தின்ன துறத்த
ஓடியோடி ஒரு அடியும் இனி நகரமுடியாது
என்ற கணத்தில் நின்றால்,
அங்கே,
சவுக்கடி வாங்குவது
சிவனா?
எண்ணெய் சட்டியில்
சாய்ந்து வெந்துக் கிடப்பது
திருமாலா?
அய்யோ அங்கே
சுற்றிச் சுற்றிச் செக்கிழுப்பது
ஏசுவல்லவா?
நபிகளா?அது
நரமாமிசம் சமைப்பது?
என்னப்பா இதெல்லாம்?
சிவனிடம் கேட்டதிற்கு
ஏசுவும் நபியும் திருமாலும் சிவனும்
கூட்டாய் சொன்னது
“மனிதனின் பாவமேற்று
பாவமேற்று பகுதிநேரம்
நரகத்தில் வெந்துதணிகிறோம்!
விரைவில் முழுநேர வேலையாகும் போல!”
பொலப் பொலவென
கண்ணீர் விட்டார்கள்
கடவுள்கள்!!
கொஞ்சமாய் பாவம் செய்வதைக்
குறைத்துக் கொண்டாலென்ன?
“கண்ணீர் விடும் கடவுள்களுக்காக!!”
– ப்ரியன்.
Reader Comments
Good thought…and good poem.. u may shorten the length of the poem