பட்டாம்பூச்சி தொலைத்தவன்.

 

எப்போதாவது
வந்தமரும் குருவிக்கு
காத்திருக்கும் ஒற்றை பனையாகிறேன்;
உனக்காக காத்திருக்கையில்!

*

மேளத்தின் அதிர்வெட்டுகிறது
இதயம்;
தலைகுனிந்து கடந்த நீ
திரும்பி பார்த்து வெட்கி குனியும்
நொடிப் பொழுதில்!

*

பட்டாம்பூச்சி துரத்திய
குழந்தையின் குதூகலத்துடன்
விடிகிறது;
கனவில் உனைக் கண்ட
என் இரவு!

*

முன்னமே சிநேகம்தான்
என்றாலும் நேற்று
நீ நனைந்தபின்
இன்னும் சிநேகமாகிப்போனது
மழை!

*

நீ வர தாமதமாகும்
ஒவ்வொரு நிமிடமும்
அனுபவிக்கத் தருகிறது:
பட்டாம்பூச்சி தொலைத்த
குழந்தையின் அவஸ்தையை!

*

உன் உதடும்
என் உதடும்
சங்கமிக்கும் பொழுதில்
யாருடையது முதல்முத்தம்?

*

நீ
நீருள் இறங்கினாய்;
அழகால் நிரம்பியது
குளம்!

*

Reader Comments

 1. மகிழ்நன்

  மிக அருமை,
  அனலில் நடக்கும் பொழுது,
  எதிர்பாராது விழுந்த மழைத்துளி போன்றது காதல்,
  காதலில் விழுந்தவன் உள்ள அனலில் இருந்து
  வெளிப்படும் பனித்துளி போன்றது கவிதை.

  தொடரட்டும், கவிதையும் காதலும்

 2. meha

  இன்றூ என் கண்களுக்கு அகப்பட்டது
  உங்கள் அகப்பக்கமும் கவிதைகளும்
  நன்று !!

 3. நான் நாகரா(ந. நாகராஜன்)

  உம் கவிதை
  என் விழிகளில் இறங்கியது
  பரவசத்தால் நிரம்பியது
  இருதயம்

  கவிதை அருமை, வாழ்த்துக்கள் ப்ரியன்

  அன்புடன்
  நான் நாகரா(ந.நாகராஜன்)
  நான் வழங்கும் மகாயோகம்
  என் கவிதைகள்

 4. எம்.ரிஷான் ஷெரீப்

  அழகான கவிதைகள் ப்ரியன்.
  உங்கள் காதலி கொடுத்து வைத்தவர்.
  அருமையான கவிதைகளுக்குக் கருவாக அமைந்தவர்.
  தொடர்ந்து எழுதுங்கள் நண்பா.
  வாழ்த்துக்கள் !

 5. யெஸ்.பாலபாரதி

  //உன் உதடும்
  என் உதடும்
  சங்கமிக்கும் பொழுதில்
  யாருடையது முதல்முத்தம்?

  *

  நீ
  நீருள் இறங்கினாய்;
  அழகால் நிரம்பியது
  குளம்!//

  நல்ல அழகியல் ப்ரியன்…, அது சரி.. இன்னும் எத்தனை காலத்துக்கு தி.மு கவிதையே படித்துக்கொண்டிருப்பது?/எழுதிக்கொண்டிருப்பது..?

  சீக்கிரம் தி.பி கவிதைகளுக்கு ஏற்பாடு செய்யுங்கப்பா..!

  *தி.மு- திருமணத்திற்கு முன்
  *தி.பி- திருமணத்திற்கு பின்

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/