கனவு
வனாந்திரத்தில்
வனாந்திரமாய்
அலைந்தேன்!
அங்கொன்றும்
இங்கொன்றுமாய்
திரியும் பாம்புகளைத் தவிர
வேறு ஜீவராசிகள் இல்லை
துணைக்கு!
சுற்றிச் சுற்றி வந்தாலும்
ஏதோ ஒன்று கொண்டு
சேர்க்கிறது
துவங்கிய இடத்திலேயே!
குழம்பிப் போய்
மேல் பார்க்கையில்
வானவில் வர்ணத்தில்
ஏதோ ஓர் பூ!
பெயர் தெரியா அப்பூவை
பறிக்க முற்படுகையில்;
பூ அலைகிறது
காற்றில் அசையும்
அருகம்புல் நுனி போல!
வெறி கொண்டவனாய்
எட்டிக் குதித்ததில்
கீழேயிருந்த
புதைக்குழியில்
விழுந்து தொலைகிறேன்!
பகுதி குழியேறி
வெளி குதித்துவிட
எத்தனிக்கையில்
கால் இடறி
குழியில் இடுகின்றனர்
மீண்டும் மீண்டும்
யாரோ!
கட்ட கடைசியில்
கால் பிடித்தவனை
எட்டி உதைத்து,
கைக்கெட்டிய வேரைப்
பிடித்து
வெளிப் பார்க்கையில்!
மெல்ல மெல்ல
இருளின் கண் மை
துடைத்து;
கண்ணாடி வழியே
படுக்கையறை நுழைகிறது
சூரியன்!!