தலையணை!

விலை எண்பது
சொன்னக் கடைக்காரனுக்கு
நூறாய் கொடுத்து
சில்லறை அவனுக்கு விட்டு
எடுத்து வந்தேன்!

வழியிலேயே கேட்டது
அவள் தொட்டுக்காட்டிச்
சென்றதால்தானே என்
விலை கூடியது
“வாயாடி” தலையணை!

பத்திரமாய் படுக்கையில்
அமர்த்தி சன்னல் வழியே
பராக்கு பார்த்தவனை
கூப்பிட்டழைத்து எனக்கொருப்
பெயர் வையேன் பாசமுடன் கேட்டது!

உன்னை அல்லா
வேறேதும் அறியா நான்
தேடித் தேடி
கடைசியில் உன்பெயரையே
வைத்தேன் அதற்கும்!!

ஹை!அழகின் பெயர் எனக்கா?
துள்ளிக் குதித்தது
தலையணை!!

படுக்கும் பொழுது
பக்கத்திலிருத்தி பார்த்திருந்தேன்!
ம்.ம்கூம்.கட்டிக்கொள்ள மாட்டாயா?
சிணுங்கி கொண்டே நெருங்கி வந்தது!

பாவம் வலிக்குமென
மெதுவாக கட்டியணைக்க
ஆண்மகனா நீயென
எள்ளி எள்ளி
என்னிறுக்கம் கூட்டியது!

அணைப்பில் சொக்கி நான் நிற்க
கதகதப்பில் தூங்கிப் போனது
தலையணை!
சற்று பொறுத்து
என்னிறுக்கம் அதிகமாகி
நான் உறங்க
அதன் உறக்கம்
கலைந்தது!!

இரவின் இருடெல்லாம் வடிந்துவிட
இரவெல்லாம் விழித்த
கண் மேலும் சிவக்க
அழுது கொண்டிருந்தது
தலையணை!!

உனை பார்க்கும் அவசரத்தில்
அதை அப்படியே விட்டு
அலுவலகம் ஓடிவர!
பகலில் என் நிலவுடன்
நாள் கழிய!
இரவுக்கு இல்லம் கண்டேன்!

பக்கதில் படுத்தபடி
தலையணையை நான் அழைக்க
போடா சொல்லி தள்ளி
படுத்தது தலையணை!

என்னப்பா!தவறுசெய்தேன்??

ம்.ம்கூம்.உனக்கே தெரியாதாக்கும்
ஒற்றை வரி உச்சரித்து
உச்சஸ்த்தனியில் மறுபடியும்
அரம்பத்திலிருந்து அழுகைத்
துவக்கியது!!

கட்டியணைத்ததில்
காயம் கண்டாயா?

காயம் கண்டால்
அழுவேனா???

அப்புறம் என்ன என் கண்ணே??

காலையில் அழுதுகிடந்தேன்
நீ அருகில் வந்து அரவணைப்பாயென்று
அருகில் வராமலேயே ஓடிப்போனாய்!!

ஐய்யோ!!மாபெரும் குற்றமாயிற்றே
என்ன தண்டனை!!

ம்.ம்.ஒற்றை முத்தம் போதும்!!
சொல்லி
முகமலர்ந்தது தலையணை!

வாயாடலில் மட்டுமல்லடி
காதலிப்பதிலும்
உன்னைப் போலவே இருந்து
தொலைக்கின்றன
நீ தொட்டுத்தரும் பொருற்களும்!

– ப்ரியன்.

https://www.theloadguru.com/