உனக்கான ஆபரணங்கள்

ஓலைக்குடிசையில் இடுக்கில்
ஒழுகும் மழைத்துளிகளென
சில்லிடுகிறது
நின் நினைவலைகள்
கடந்திடும் ஒவ்வொரு சமயமும்.
*
உனக்கான ஆபரணத்தை
மழைத்துளிகளால் கோர்க்கிறது
வானம்.
*
மழையின்
முதல் துளி நீ
அடுத்த துளி நான்
மற்றவை
நம் பிள்ளைகள்.
*
காதல் தேசத்தின்
தேவதையாய் இருக்ககூடும்
நிலவொளியில் நம்மை
நனைத்து சென்ற
மழை!
*
எவ்வூர் நியாயம்
மழை நனைத்தால்
அணைப்பதும்
நான் அணைத்தால்
தள்ளுதலும்!
*
நீ நனைய
என்னை தாக்குகிறது
அழகின் மின்னல்!
*
எழுத இன்னும் இருக்கிறது
உன்னைப் பற்றியும்
மழைப் பற்றியும்.
*
என் கண்ணீரின்
ஒற்றை துளியை
கரைக்க இயலாமல்
மண் புதைகின்றன
மழைத்துளிகள்.
*

– ப்ரியன்

https://www.theloadguru.com/