கால எச்சம்

சலசலத்து ஓடும்
ஓடை நீர்
புதர் மாறும் சர்ப்பம்
பாறையிடுக்கில்
ஒளியும் தவளை
கல் தேடி எடுத்து
முதுகு தேய்க்கும் பெண்கள்
குட்டையில் குதிக்கும்
குழந்தைகள்
கிளை தொங்கும்
வாண்டுகள்

எல்லாம் தொலைத்த
ஓடையோர ஆலமரம்
காலத்திடம் கெஞ்சியபடி இருக்கிறது
கடந்த காலத்துக்கு கூட்டிச்செல்ல சொல்லி

– ப்ரியன்

வட்டம்

குட்டி சைக்கிளின் சக்கரம்
சட்டை பட்டன்
தரையில் சிந்திய நீர்துளி
பறக்கும் குமிழி
மின்விசிறி
நிலா
பந்து , பலூன்
உலகமே வட்டமயமாய்
குழந்தை
வட்டம் கற்ற நாளில்.

– ப்ரியன்.

மிருகம்

காலைச் சுற்றிச் சுற்றிவரும்
பூனைக்குட்டியை
தள்ளிப்போவென எட்டி
அனாதரவாக விட்டுச் செல்லும் தருணங்களில்
கூரிய நகம் முளைக்க
மிருகமாக மாறுகிறேன் நான்

– ப்ரியன்

பிரியங்களின் பூந்தொட்டி

பிரியங்களை பூக்கும்
பூந்தொட்டி ஒன்று
என் அறையில் இருந்தது

மதுகுடுவையை ஏந்தியபடி
உள்ளே நுழைந்த
சாத்தான்
ஒரேயொரு பூ கேட்டான்

பூந்தொட்டியை
எடுத்தக்கொள்ள பணித்தேன்

சாத்தான்
வெளியேறவே இல்லை
இப்போதும் உறைகிறான்

சாத்தான் தனத்தினை மறந்து
என்னுள் அரூபமாய்.

– ப்ரியன்.

சட்டை உரிக்கும் சர்ப்பம்

சட்டை உரித்தெறியும்
சர்ப்பமாகிறேன்;
துரோகம்
துரத்தும் நாட்களில்

உரிப்பதும்
துரோகங்கள் நிழலாக தொடர்வதும்
தொடர்கதை

உரிப்பது நிற்கின்ற
அந்நாளில்
மரித்து போயிருக்கலாம் –
துரோகம் அல்ல;
நான்.

– ப்ரியன்.