யோசித்து யோசித்து
ஏதோ எழுதிக் கொண்டிருக்கையில்
பின் நின்று நுனிநாக்கால்
காதுமடல் வருட ஆரம்பித்தாய்!
காகிதம் மேலிருந்த
கவனம் முழுவதும்
காது மடலில் குவிந்த கணம்
வருட்டெனக் கடித்துவைத்தாய்!
கடித்தது நீயென்றாலும்
சின்னதாய் வலிக்கத்தான்
செய்தது!
செல்லமாய் கோபம்
மெலிதாய்
அடித்து வைக்கத் துணிந்தேன்!
எதிர்ப்பார்த்தவள்
பாதுகாப்பான தூரம்
நின்று!
உடைந்துவிட எத்தனிக்கும்
இடையில் இருகை வைத்து
புருவம் தூக்கி
என்னடாவென்றாய்
மெலிதாய் தலைசாய்த்து
புன்னகை பூத்தூவி!
அதுவரை மூக்கின்
மேல்நின்று தவம் செய்த கோபம்
மெதுவாய் கை ஊன்றி
கீழிறங்கி முன்நின்று
அவள் காதலுக்கும்
எனக்கும் ஏழாம் பொருத்தம்
சொல்லி காற்றில்
கரைந்து போனது!
பேசாமல் சில நொடிகள்
நான் நின்றுவிட!
சேயழைக்கும் தாய்ப்போல்
இருகை நீட்டி
வா வா
வாடா செல்லம் என்றாய்!
மந்திரமென காதல்
கட்டிப் போட்டதில்
மழலையென மார்ப்பில்
சாய்ந்து ஒட்டிக்கொள்கிறேன்!
சுகமோ சுகமென
நினைக்கையில்
மெதுவாய் முன்னேறி
காது மடல்
வருட முனைகிறாய்!
சீக்கிரத்தில்,
அரங்கேறும்
மற்றொரு காதல்
நாடகம்!
– ப்ரியன்.