நீ:
கவிதை தயாரித்து
வெகு நாட்கள் ஆச்சு!
என்னவாயிற்று உங்களுக்கு?
காதல் கோபித்துக்கொண்டதா?
நான்:
கோபித்தாலும் காதல் அழகாகி
காகிதத்தில் இ(ற)ரங்கியிருக்குமே!
நீ:
தமிழ் தீண்டாமல் நின்றதோ?
நான்:
விடமாட்டேனே தள்ளி நின்றால்
கட்டி கொள்வேனே?
அநுபவமில்லையா?
நீ:
உலகின் அழகு மொத்தமும் செத்துப்போனதுகளோ?
நான்:
இல்லையில்லை நீ உயிரோடு முன் நிற்கிறாயே!
நீ:
பின் எதுதான் எழுதாமல் தடுத்தது உங்களை?
நானா?
நான்:
என் கவிதை சுரங்மே நீதானடி
உன் அழகை களவாடித்தானே
கவிதை சேர்க்கிறேன்…
நீ:
அப்புறம் என்னதான் காரணம்?
நான்:
நீ வாங்கி தந்த குறிப்பேடு
தீர்ந்து போனதடி
நீ:
கோடிட்டு காட்டிருந்தால்
முன்னமே தந்திருப்பேனே?
நான்:
சரி தா…
ஆனால்
நிபந்தனை ஒன்று…
நீ:
என்ன அது?
நான்:
முத்தம் பதிக்க வேண்டும்
நீ:
ஆசை தோசை
வேறு கேள்
முடிந்தமட்டும் தருக்கிறேன்
நான்:
கவிதைசுரங்கத்தின் கைபக்குவத்தில்
கவியொன்று வேண்டும் முன் பக்கத்தில்
நீ:
நீ சொல் நான் எழுதுகிறேன்
நான்:
ம்.கூம் அடாது
நீயே யோசித்து எழுது
உன் பெயராயினும்
சம்மதம்…
நீ:
எனக்கும் தமிழுக்கும்
சண்டையடா சண்டை
யார் அழகு என்பதில்
போட்டியடா போட்டி
நான்:
இதுவே கவிதைதானடி
நீ:
கண்டிப்பாக நான்
எழுத வேண்டுமா?
நான்:
நிச்சயமாக…
சொல் கேட்ட மாத்திரத்தில்
குறிப்பேடு எடுத்து
யோசித்து யோசித்து
மறைத்து மறைத்து
எழுதி தந்தகணம்
முகம் முழுவதும் வெட்கத்தின்
சிவப்பு கோடுகள் திட்டுத்திட்டாய்
என்னதான் எழுதியிருப்பாய்
ஆர்வத்தில் பறித்து
வாசித்ததில்
மழலைப் போட்ட
கோலமாய்
“ப்ரியனுடன்ப்ரியா”
வரைந்திருந்தாய்
எழுதிய,எழுதக் காத்திருக்கும்
கவிதைகளெல்லாம்
ஓடி வந்து
உன் காலடியில்
சரண்ஆயின…
உனைக் கட்டிக்கொண்டு
இவள் என் காதலி
பெருமையாய் கத்தினேன்
கவிதைகளுக்கு மட்டும்
கேட்கும்மட்டும்…
– ப்ரியன்.