உனைக் கண்ட அந்நாளில்
ஏதோ ஒன்று என்னிடமிருந்து
பிரிந்து தொலைந்து போனது!
கண் தொலைந்த குருடன் போல்
தடவித் தடவி தேடியதுதான் மிச்சம்!
தொலைந்தது எதுவென்று கூட
அறிய மாட்டாமல் போனது!
பின்னொரு நாளில்
மயங்கும் மாலைப் பொழுதினில்
எதிரெதிரே புல் தடவி
நாம் அமர்ந்திருக்க
மெளனத்தின் மத்தியில்
மெல்ல மெல்ல முட்டி முட்டி
அது முளைத்தது!
அருகில் சென்று விசாரித்ததில்
“காதல்” என்று
தன் நாமம் பகன்றது!
மெல்ல விலகி மெளனமாய்
உனை ரசிக்க
“வா! ஒரு கிசுகிசு
சொல்கிறேன்” சட்டையை இழுத்து
காதோடு காதாக
அன்று ஒன்று தொலைந்ததே?
அது உன்னிடமிருந்து மட்டுமல்ல
அவளிடமிருந்தும் களவாடப் பட்டது!
அதுவே உரமாகி இன்று காதலாக
என் உரு பெற்று நிற்கிறது!
நன்றாக பேசுகிறாய் காதலே!
காதலுக்கு பட்டம் தந்து
திரும்பி அமர்ந்த கணம்
இருட்டில் நம்மையும்
நம் மெளனத்தையும் தனிமையில் விட்டு
கத்தி பேச ஆரம்பித்தன
உன்னில் என்னதும்
என்னில் உன்னதும் என
தொலைந்து இக்கணம்
கண்டு கொள்ளப் பட்ட
நம் இதயங்கள்!
– ப்ரியன்.
Reader Comments
Good.. nallaa irukku priyan