தப்பு தப்பாய் தமிழ்
வாசிக்க அறிவாய்!
தாறுமாறாய்
எழுதித்தந்தாலும்
தலைவன் எனக்காக
தரமானது என்பாய்!
கவிதை புத்தகங்கள்
காணோமென்று தேடினால்
தலையணை அடியிலிருந்து
எடுத்து நீட்டி இதனால்
என்மேல் உங்கள் கவனம்
குறைக்கின்றது என கோபித்துக்கொள்வாய்!
என்றுமில்லாமல்
இன்று புது வெட்கம்
காட்டி!
பூமியை புரட்டிப்போடும்
புன்னகை சிந்தி!
நாணி கோணி
சிரிப்பால் நனைந்து
எனையும் நனைத்து
தோள் சாய்ந்து
கையில் தந்தாய்;
படித்துவிட்டு
சொன்னேன் அருமையான
கவிதை படைத்தாய்!
சொல்லி முடிக்கும் கணம்
பொக்கைவாய் திறந்து
நம்மிருவர் முகம் நோக்கி
முதல் புன்னகை உதிர்த்தது
கையிலிருந்த கவிதை!
நம் குழந்தை!
– ப்ரியன்.