திடீர் மழையில்
நிழற்குடை கீழ்
ஒதுங்கினாய்
நீயுமொரு பகுதி
மேகமாய்!
ஊரே
சொல்லாமல் வந்த
மழையை வைய்ய!
தேவதை அருகிலிருத்திய
மழைத்தூதனை வாழ்த்தியபடி
நான்!
மின்னல் வெட்டி
திடுமென ஒர் இடி வெடிக்கையில்
நடுங்கித் திரும்பி
முகத்தாமரை மறைத்து
அர்ச்சுனா அர்ச்சுனா
சொல்லியவளை
பார்த்த கண் பார்த்தபடி
நின்றிருந்தவனை
கண்டு மெலிதாய்
வெட்கம் பூத்தாய்!
மழை ஓய்ந்து
எல்லோரும் ஓடிவிட
நான் நீ
துணைக்கு
மரம் தங்கி
சொட்டும்
சில துளிகளும்
நிழற்குடைக்கு
நன்றி பகன்ற படி!
ஏதோ மறந்தவள்
ஞாபகத்திற்கு உதித்தவளாய்
சட்டென குதித்து
ஓடிப் போனாய்!
கனவில் தேவதை
துரத்தும் குழந்தையென
என் கண்கள்
உனைத் தொடர!
பட்டென திரும்பி
சிறுப் புன்னகைப் பூத்தாய்!
அப்போது பெய்யத் தொடங்கியது
இருதயத்தில் மழை!
அந்நிமிஷம் உன் விழி கண்ட
மின்னல் வெட்டில் கட்டுண்டேன் நான்!
ஆலங்கட்டி மழைக்
கேள்விப் பட்டிருக்கிறேன்!
அன்று பெய்தது
“ஆள்” கட்டி மழை!
– ப்ரியன்.