எழுத ஏதும் அற்றவனாய்…

எழுதுவதற்கு நிறைய இருக்கிறது
வழியனுப்ப வந்தவளின்
கடைசிநேர கண்ணீரின் கனம் பற்றியும்;

ஏதென்று கேட்க ஆளில்லாத தேசத்தில்
ஜூரம் கண்ட நாட்களில்
விட்டத்தை வெறித்தபடி கடத்திய தனிமை பற்றியும்;

கனத்த
கூரான மார் கொண்ட
இவ்வூர்* பெண்களைப் பற்றியும்;

இரவோடு இருளாக
விழித்து நகரும்
சில இரவுகள் பற்றியும்;

அந்நாளில் பிரிவும்
ஆற்றாமையும் கலந்து
தலையணை நனைக்கும்
கண்ணீர்துளிகளைப் பற்றியும்;

இன்னும்
முட்கம்பிக்கு இடையில்
சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும்
எம் இனத்தைப் பற்றியும்;

இவ்வூரின்* அழகை
வறுமையை, அரசியலை
நம்மவர் இங்கு காட்டும்
அக்கிரமமான ஆதிக்கத்தைப் பற்றியும்
எழுதுவதற்கு நிறைய இருக்கிறது.

என்றாலும், சோர்வையும் , சோம்பேறித்தனத்தையும் தாண்டி எழுத ஏதும் அற்றவனாக , விருப்பம் இல்லாதவனாக இருந்த ஒரு நாளில்தான் இந்ந நட்சத்திர அழைப்பு.உண்மையை சொல்வதானால் இதை ஏற்றுக் கொள்ளக்கூடிய , எழுதலாம் என்ற ஒரு மனநிலையில் கண்டிப்பாக இல்லை.என்னத் தோன்றிதோ எது உந்தியதோ தெரியவில்லை.ஒத்துக் கொண்டிருக்கிறேன்.எதுவும் இன்னமும் எழுதவில்லை , இதுதான் எழுத வேண்டும் என்று தீர்மானிக்கவுமில்லை , ஆனாலும் தினம் ஒரு பதிவாவது இட வேண்டும் என்று உறுதி எடுத்திருக்கிறேன்.என்னை நட்சத்திரமாக்கிய ‘தமிழ்மண’த்திற்கு நன்றி.விட்ட இடத்திலிருந்து இந்த ஒரு வாரத்தினால் நான் மீண்டும் எழுத ஆரம்பித்தால் நிச்சயமாக அது தமிழ்மணத்தின் வெற்றிதான்.

* இவ்வூர் – தற்சமயம் பிழைப்புக்காக இருக்கும் கென்யா தேசம்,

—————————————————————————————————————————————————

இது மூன்றாவது முறை
உரையாடலை இடையில்
நீ துண்டிப்பது

ஊடலுக்கு நீ சொல்லும்
ஆயிரம் காரணங்களையும்
மொழிபெயர்க்க முடிகிறது
பிரிவாற்றாமை எனும் ஒற்றைச் சொல்லாய்.

அமைதியாய் கழியும்
இவ்விரவில் மெலிதாக காதில் விழும்
அலையின் ஓசையோ
சிலுசிலுக்க பொழியும்
மிதமான தூறலோ
என் வெக்கையை குறைக்கும் அளவுக்கு சுகந்தமானதாக இல்லை.

நீயும் திரும்புவாய்
நானும் திரும்புவேன்
நாளைய உரையாடலுக்கு
இன்றைக்கு ஏதும் நிகழவில்லை என்பதாய்

என்றாலும் இப்போதைக்கு
சாளரத்தில் அமர்ந்திருக்கிறேன்
நட்சத்திரம் தொலைத்த வானத்தை வெறித்தபடி.

– ப்ரியன்.

https://www.theloadguru.com/