சட்டை உரிக்கும் சர்ப்பம்

சட்டை உரித்தெறியும்
சர்ப்பமாகிறேன்;
துரோகம்
துரத்தும் நாட்களில்

உரிப்பதும்
துரோகங்கள் நிழலாக தொடர்வதும்
தொடர்கதை

உரிப்பது நிற்கின்ற
அந்நாளில்
மரித்து போயிருக்கலாம் –
துரோகம் அல்ல;
நான்.

– ப்ரியன்.

ஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 14

வறண்ட நதியின்
மணல் இடுக்கு
நீர்த்திவலைகளாய்
எஞ்சி நிற்கின்றன
நின்
நினைவலைகள்.

– ப்ரியன்.

உள்ளங்கை வனம்

காத்தமாத்தேன்
காத்தமாத்தேன் என
கை மூடி
ஓடி ஒளியும்
குழந்தை – கைவிரிக்க
உள்ளங்கை வனத்திலிருந்து
பறக்கின்றன
ஆயிரம் ஆயிரம்
வண்ணத்துப்பூச்சிகள்

– ப்ரியன்.

ஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 13

குளக்கரை சந்திப்பொன்றில்
சொல்லாமல் போனாய்
செல்லரித்த மரமாய்
இன்னும் கிடக்கிறேன்
நான்.

– ப்ரியன்.

கடல்

முகம் புதைத்து
இரகசியம் பேசும்
காதலர்
கண்மூடி தலையசைத்து
பாடல் இரசிக்கும்
யுவன்
சுண்டல் கொறிக்கும்
குடும்பம்
மண்புரண்டு எழும்
குழந்தை
உடைந்து சிதறும் அலைவழியே
அமைதியாய் இரசித்தபடி
கடல்.
– ப்ரியன்.