பட்டாம்பூச்சிகளின் தேவதை

Pattampoochi_Devathai

பூக்களை நாடும்
பட்டாம்பூச்சிகளுக்கிடையில்
நீ
பூக்கள் மொய்க்கும்
பட்டாம்பூச்சி

*

சிறகில்லை
விதவிதமான வர்ணமில்லை
என்றாலும்
நீ
தேன் சுமக்கும்
பட்டாம்பூச்சி

*

மலர் தாவி
மலர் அமர்கிறது
பட்டாம்பூச்சி
உன்
நளினத்தோடு

*

கோலத்தின் மையத்தில்
நீ
வைத்த அரசாணிப்பூ விடுத்து
புள்ளிகளை பூவென மொய்க்கின்றன
பட்டாம்பூச்சிகள்

*

படபடக்கும்
விழிகள் எப்போதும்
காட்டிக் கொடுத்துவிடுகின்றன
நீ
பட்டாம்பூச்சிகளின் தேவதை என்பதனை

*

பெருத்த சந்தேகம்
பூக்கள் மொட்டவிழ்வது
பட்டாம்பூச்சி அமரவா?
நீ சூடவா?

*

நின் நினைவுகளை
பின் தொடர்கிறேன்
பட்டாம்பூச்சி
துரத்தும் பிள்ளையின் குதுகலத்தோடு

*

மழைத்துளி
பூக்களை மீட்டுகிறது
நீ
மழை ஆடும்
தாள நயத்தில்

*

– ப்ரியன்