முதல் பூ

வெள்ளை
மஞ்சள்
சிவப்பு
வர்ணங்களில் பல
பரவி கிடக்க…
எது வேண்டும்?
கேட்டபடி கசங்கியதை
தலையில் கட்டப் பார்க்கும்
கடைக்காரனைத் தட்டி;
சிவப்பில் விரிந்தும் விரியாததுமாய்
கண்சிமிட்டும் ஒன்றை தேர்ந்து;
மஞ்சள் அழகாயிருக்கும்
வியாபார தந்திரம் தவிர்த்து;
ஒன்றா?பூங்கொத்தா?
தொன தொனப்பை துட்சமாக்கி;
கையடக்கமாய் கத்தரித்து
தரச் சொல்லுகையில்
ரூபாய் எட்டு ஆகும் பரவாயில்லையா?
பத்தாய் கையில் திணித்து
பந்தாய் அவன் ஓடுகையில்
நிதானித்து நின்று கொஞ்சம் சிரித்து வந்தேன்.

அன்றும்,
உனக்கான முதல் பூ வாங்குகையில்
எனைப் பார்த்தும்
யாராவது நகைத்திருப்பார்கள்!!

– ப்ரியன்.

கவிதை ஒர் குழந்தை

காலை ஓட்டத்தில்
கால்சுற்றும் நாய்குட்டியாய்;
அலுவலக அவசரப்
புறப்பாட்டில் அவஸ்த்தையாய்;
கால்மாற்றி காலுறை
நுழைக்கையில் கடுப்பாய்;
படிக்கட்டில் ஒட்டிய
பேருந்துபயணத்தில் இடிக்கும் பயணியாய்;
பாதைக் கடக்கையில்
எதிர் கடக்கும் பள்ளிச்சிட்டாய்;
அலுவலக கலந்துரையாடலில்
சுவற்றில் ஓடியாடும் பல்லியாய்;

கூடவே துரத்தி வந்து
பிடித்துக்கொண்டால்தான் ஆச்சு என
நச்சரிக்கும்!

வேலையெல்லாம் முடித்து
அதற்கென காத்திருக்கையில்;

முடிந்தால் பிடித்துக்கொள்
சொல்லிச் சொல்லி
விலகி ஓடி ஒளியும்
கவிதை;
“ஒர் குழந்தை”!

– ப்ரியன்.

பரிசு

நேற்று இரவு,வானம் பார்த்துக்கிடந்த கணம் எனக்கே எனக்கான என் ப்ரியா பக்கத்திலிருந்தால் எதை என் பிறந்தநாளுக்கு(அட இன்னிக்குதானுங்கோ!28.03.)பரிசாக என்ன அளிப்பாள்?என எண்ணியபோது தோன்றியது!இதை ப்ரியன் எழுதுனதா படிக்காமே,என் ப்ரியா எழுதுனதா நினைச்சு படிங்கப்பா!

ஏதோ பேச்சுக்குரல்
கேட்டு விழித்தெழுந்தேன்!

“காது கடித்து வாழ்த்துரைப்பாள்!”

“இல்லையில்லை அவன்
விட்டுச் சென்ற கைக்குட்டையில்
இவள் பெயர்
பதித்து தருவாள்!”

“பைத்தியங்களா,
விலையுயர்ந்த கைக்கடிகாரம்
கட்டிவிடுவாள்!”

“இது என்ன சில்லறைப் பரிசுகள்
மணவாளனுக்கு இவைகளா?
ஒற்றை முத்தம் போதாதா?”

கூடிக் குசுக்குசுவென பேசிக்
கொண்டிருந்தன
சின்னச் சின்னதாய்
கைகால் முளைத்த
கவிதைகள்!

இமை விழித்த சப்தம் கேட்டிருக்கும்
ஓடி வந்து சுற்றி நின்று
என்னத் தரப்போகிறாய்!
நச்சரிக்கத் தொடங்கின
பிசாசுகள்!

முத்தமா?
மொத்தமுமா?
கேட்டுவிட்டு
அடிபடாமல் விலகிக் கொண்டது
குறும்புக்கார கவிதையொன்று!
மொத்ததில் வெட்கத்தில்
கொஞ்சம் சிவந்து வைக்க!

அதுவரை விழித்தும்
விழிக்காதவனாய் நடித்தவன்
வெட்கத்தை விட அழகானப் பரிசா?
வாய்ப்பில்லை!! சொல்லி
கன்னத்தில்
உள்ளங்கை வைத்து
வெட்கம் புசிக்க ரம்பித்தாய்!

அப்படி நீ செய்ததில்
இன்னும் கொஞ்சம்
வெட்கத்தில் அதிகம்
சிவந்ததுதான் மிச்சம்!

– ப்ரியன்.

அழகு

அழகான என் கவிதைகளையெல்லாம்
அழைத்து உலகத்தில்
அழகு எதுவென்றேன்?
இதில் என்ன சந்தேகம்
நாங்கள்தான்
முந்திரிக் கொட்டையென
முன்னால்
வந்து நின்றன!

சிரித்துக் கொண்டே
உன் பக்கம்
பார்த்தேன்!
ம்.ம்கூம்.கொஞ்சம் கோபமாய்
கனைத்தாய்!

ஐய்யோ!
இந்த அழகு பிசாசு
இங்கேயா இருக்கிறது
சொல்லி ஓடி ஒளிந்தன
சட்டென கால் கை முளைத்த
கவிதைகள்!

– ப்ரியன்.