புரியா உலகம்

எவனோ ஒருவன்
தினம் தினம்
ஒரு கதவு தட்டி
இராப்பிச்சைக்
கேட்கிறான் என
எல்லோரும்
பேசிக் கொண்டார்கள்!

நேற்று பக்கத்து வீட்டு
பக்தவசலம் வீடாம்!

அப்படி என்றால்
இன்று என் வீடு!

தட்டிக் கேட்டுதான்
நீ பெறவேண்டுமா?
உனக்கு வேண்டியதை
நீயே எடுத்துக் கொள்!

வாசல் கதவு திறந்து
வைத்து தூங்கி போனேன்!

எவனும் வந்து
போனதுக்கான
சுவடு காணோம்
காலை!

மெல்ல சோம்பல் முறித்தபடி
வெளியே வந்தேன்!

என்னை கைக்காட்டிப் பேசிக்
கொண்டிருந்தார்கள்!

கஞ்சன்,
இவன் வீட்டு
கதவு தட்டி சிரமபடுத்துவானென்று
திறந்து வைத்து தூங்கியதால்
அடுத்த வீட்டு கதவு தட்டினானாம்
இராப்பிச்சை நேற்றைய
இரவு!

எனக்கு இன்னமும்
உலகம் விளங்கவில்லை!
அவர்களுக்கும்
என்னை!

– ப்ரியன்.

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/