அன்னைக்கும் அப்பனுக்கும்
அடுத்து வைத்து!
தெய்வத்திற்கு முன்னே
வைத்தது உலகம்
உன்னை! – அய்யனே
என்னுயிரில் முன்னே
வைத்தேன் உன்னை!
அன்னை சுட்டினாள்
உயிர்வித்தளித்த அப்பனை!
அய்யனே! – நீ சுட்டினாய்
உணர்வளர்க்கும் அறிவை
என் தமிழை!
தாய்க்கு மகன்
தந்தைக்கு மகள்
செல்லம்!
குருவே உனக்கு
இருபாலருமே
வெல்லம்!
கட்டி வெல்லம்!
தாய்க்கு தந்தைக்கு
உற்றார் உறவினர்க்கு
என்னிடத்தில் உண்டு எண்ணிலடங்கா
எதிர்ப்பார்ப்புகள்!
உன்னிலும் உண்டு
என்னிடத்திலான எதிர்ப்பார்ப்புகள்
என்றாலும் அவை நீ
காணும் என் எதிர்காலங்கள்!
உன் சூரியஅறிவில்
கடன் வாங்கி
சுற்றித் திரியும்
சின்னச் சின்ன
மின்மினிகள் நாங்கள்!
ஆசிரியனாய் இருந்து
முதல்குடிமகனாய் உயர்ந்தவனின்
பிறந்தநாளில் கண்டார்கள் – உனக்கு
ஆசிரியர்தினம் என்று ஒன்று!
அறியாப்பிள்ளை உரக்கச் சொல்வேன்
பாரதத்தில் மட்டும்தான்
இதுவென்று!
அரவணைத்து அன்னையானாய்!
நல்வழி புகுத்தி அப்பனானாய்!
ஆலயத்திற்கு ஒப்பான – பள்ளியில் அமர்ந்து
தெய்வமானாய்!
மூன்றும் சேர்ந்ததால் நீ
குருவானாய்!
அருவாய் திரிந்தவரை – நல்
அறிவால் சமுகம் காக்கும்
எருவாய் மாற்றும்
குருவே வாழ்த்த வந்தேன்!
சிறுவன் இச்சிறுவன்
உருகி நின்றேன் – நின்
பெருமை கண்டு
உருகி நின்றேன்!
முதல் வகுப்பில் நீ
சொல்லித்தந்த பாடம் தான்!
மீண்டுமொருமுறை
அதே கூட்டுக் குரலில்
வணக்க்க்க்ம் அய்ய்ய்ய்யா!
– ப்ரியன்.
Reader Comments
final words super :-)>