கலியாணத்துக்கு போறேனுங்கோ…

நிலவு நண்பனின் நீ எனக்கு வேண்டாமடி கவிதையை நான் முதல் முதலில் வாசித்தது வாரமலரில் என்று நியூரான்கள் சொல்கின்றன.அப்போதுதான் நான் கவிதைகள் வாசிக்கவும் கொஞ்சம் எழுதவும் கற்றுக் கொண்டிருந்தேன்.வாசித்ததும் எனக்கு மனதில் தோன்றியது ‘அட!’.அதற்கப்புறம்,எழுதியவர் பெயர் மறந்துவிட்டாலும் மனதுக்குள் நாற்காலிப் போட்டு அமர்ந்துவிட்டது அக்கவிதை.

நல்லதொரு பணியில் அமர்ந்தப் பிறகுதான் கவிதைகள் என்ற தவம் உடைந்த தினங்களில்,அடிக்கடி நண்பர்கள் வாயிலாக மின்னஞ்சல் தட்டி நிற்கும் எழுதியவர் பெயரில்லாமல் நிலவு நண்பன் ஞானியின் கவிதைகளும்,நிலா ரசிகனின் கவிதைகளும்.அட!யார்ரா இவுங்க என கவனிக்க ஆரம்பித்ததில்தான் ஒருநாள் தேடு பொறி வலையில் தமிழ் வலைபூக்கள் சிக்கின.அதன் பிறகே எனக்கும் வலைப்பூ ஆரம்பிக்கும் ஆர்வமும்,இணையத்தில் கவிதைகள் பதியும் ஆசையும் வந்தது அதை தொடர்ந்து கொஞ்சம் எழுதவும் தொடங்கினேன்.அதைத் தொடர்ந்து தமிழ்மணமும் உங்களின் அறிமுகமும்.இந்த வகையில் என்னை எழுத வைத்தது;உங்களை எல்லாம் அறிமுகப்படுத்தியவர் ரசிகவ் என்றால் மிகையல்ல.

நான் மிக ரசித்த “நீ எனக்கு வேண்டாமடி” ,”தூக்கம் விற்ற காசுகள்” இரண்டையும் எழுதியவரை தேடி நான் கண்டுக் கொண்ட இடம் அன்புடன்.

அன்புடன் குழுமத்தில் இணைந்த புதிதில் என்னை ஊக்கமூட்டி இன்னும் அதிகம் எழுத தூண்டியது ரசிகவின் கிண்டல் பதில் கவிதைகள்.பதில் கவிதைகள் எழுதுவதில் ரசிகவ்க்கு நிகர் ரசிகவே!ரசிகவின் கவிதைகளுக்கு ஒரு ரசிகர் பட்டாளம் அன்புடனில் உண்டென்றால் அந்த எண்ணிக்கைக்கு குறையாத ரசிகர் பட்டாளம் மற்றவர் கவிதைகளுக்கு அவர் இடும் மறுமொழி நக்கல் கவிதைகளுக்கும் உண்டு!

காதல் கவிதைகளை தருவதில் ரசிகவ் மிஞ்ச யாரும் இல்லை,அன்புடனில் ‘அன்புடனின் தபூ சங்கர்’ என்று ஒரு பெயரும் உண்டு அவருக்கு.ஞானிக்கு பிடித்து ‘ஜர்னலிசம்’ என பலதடவைச் சொல்லி கேட்டிருக்கிறேன்.கல்லூரி காலத்தில் பகுதிநேரமாக அதனாலேயே அவரது சமூகப் பார்வை கொஞ்சம் விரிந்தே இருக்கும்,அதன் வெளிப்பாடுதான் – அவரின் மன விதைதான் ‘விதைகளாய்‘ வலைப்பூவாய் விதைக்கப்பட்டிருக்கிறது.

கவிதை , சமூக சிந்தனை இப்படி என்றால் ரசிகவ்வின் குறும்புக்கும் என்றும் பஞ்சம் இருந்ததில்லை அவரின் நக்கல்,நையாண்டி,கேலி எல்லாமே மற்றவரை புண்படுத்தாமல் ரசிக்க சிரிக்க வைப்பனவாய் இருக்கும்.அவர் இப்போது கைப்பிடிக்கப் போகும் பெண்ணிடம் கூட அவர் ‘பூரி’ சேட்டை செய்திருக்கிறார்.அதனாலேயே அவருக்கு ‘வால்’ என்ற செல்லப் பெயரும் உண்டு அன்புடனில்.

பூரிச் சேட்டை‘ யை ரசிகவ் வலைப்பூவில் இட்டமாதிரி தெரியவில்லை அன்புடன் குழுமத்தில் படிக்க : பூரிச் சேட்டை

ரசிகவ் எழுதிய கவிதைகள் பல பிடிக்குமென்றாலும்,சமீபத்தில் நான் ரசித்த அவரின் சில கவிதைகளை இங்கே தருகிறேன்

* பயம் *

முதியோர் இல்லங்களின்
வாசல்தாண்டி
பயணப்படும்பொழுதெல்லாம் …

அனிச்சை செயலாய்
மகனின் கைகளை …
அழுத்திப்பிடிக்கிறது கரங்கள்!

– ரசிகவ் ஞானியார்.

* ஆறுதல் *

“ஏலே நொண்டி”

சூம்பிப்போன கால்களை
மண்ணில் நிறுத்தி
கைகளால் எம்பி
முகம் திருப்பி பார்த்தேன்!

அட..
அங்கே ஓர்
இதய நொண்டி

– ரசிகவ் ஞானியார்.

* ஒருநாள் அத்தனையும் மீறப்படும் *

வீதி மங்கைகள்..
விளையாடிய
பல்லாங்குழிகளில்,
புளியங்கொட்டைக்குப்பதிலாக…
மனித இரத்தங்கள்!

கடற்கரைச் சிறுவர்களின்..
மணல் வீட்டில்
எலும்புகள்தான்..
கூரைகள்!

வீதிகளில் விட்டுவந்த
பம்பரங்கள்…
இன்னமும்
இதயத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறது!

நாங்கள்
பாயில் தூங்கிய …
நாட்களை விடவும்,
பயத்தில் தூங்கிய ..
நாட்கள்தான் அதிகம்!

வாழப்போகிற தலைமுறைக்காய்
சாவை விரும்பும் ..
சந்ததிகள் நாங்கள்!
அழியப்போகும் ஆதிக்கமே! – உன்
சாவுக்கு ஊதுகிற
சங்கொலிகள் நாங்கள்!

உங்களுடைய
வாழ்க்கையெல்லாம்..
மரணத்தோடு முடிகிறது!
எங்களுடைய
வாழ்க்கையோ..
மரணத்தில் விடிகிறது!

சற்று உற்றுப்பாருங்கள்
எங்கள்
தலையில் சுமந்திருப்பது
கோணிகளா இல்லை
கோபத்தின் கொப்புளங்களா..?

நாங்கள்
விட்டுவந்தது ..
தாய் மண்ணைத்தான்
தைரியத்தை அல்ல..

நாங்கள்
அகதிகள் அல்ல ..
உங்களை
புதைக்க வரப்போகிற..
சகதிகள்!

புறநானூற்று தமிழ் – இனி
புல்லட்டுகளோடு வரும்

காத்திரு!
அத்து மீறியவனே – ஒருநாள்
அத்தனையும் மீறப்படும்

– ரசிகவ் ஞானியார்

இன்னும் அவரைப்பற்றி சொல்ல நிறைய உண்டென்றாலும் மற்ற அன்பர்களும் நிலவு நண்பனைப் பற்றி சொல்ல இடம்விட்டு இப்போதைக்கு நகர்ந்து நிற்கிறேன்.

அதே சமயம் ரசிகவ் அவரைப் பற்றி அவரே என்ன சொல்லுகிறார்னு படிச்சு பாருங்க : அன்புடன் அறிமுகம் – ரசிகவ்.

கடைசியாக,
செல்வன் அண்ணா,நான் ரசிகவின் திருமணத்திற்கு பாளையங்கோட்டை செல்கிறேன்.பொன்ஸ் அக்கா சொல்வதுப் போல் அன்பர்கள் எல்லோரும் பதிவுப் போட்டு வெட்டி ஒட்டி கார்டாக தந்தால் ப்ரீ கொரியர் சர்வீஸ் செய்ய நான் தயாராகவே இருக்கிறேன்,இதை அண்ணன் முத்துகுமரனின் பதிவிலும் நான் சொல்லி இருக்கிறேன்.

இதுத்தவிர கிப்ட் கொடுத்தனுப்புவர்களும் வெள்ளிக் கிழமை மாலைக்குள் என்னை தொடர்பு கொள்ளலாம்:

மடல் : mailtoviki@gmail.com
செல்பேசி : +91-98408-48453.

பொன்ஸின் நிலவுக்குப் போகும் நட்சத்திரம்

அன்புடன் குழும அன்பர் தமிழ்மாங்கனியின் For Nilavu Nanban!

Reader Comments

 1. கார்த்திக் பிரபு

  hi priyan you have done a well job..congrats frend.

 2. நிலவு நண்பன்

  திருமண வேலைப்பளுவிலும் வலைகளை விட்டு விலகி இருந்தால் ஏதோ குடும்பத்தை விட்டு பிரிந்து இருப்பது போன்ற உணர்வில் இருக்கின்றேன். ஆகவே அடிக்கடி வந்து போகின்றேன்.

  ப்ரியன் என்னைப்பற்றி கொஞ்சம் அதிகமாகவே எழுதிவிட்டாலும் ( தன்னடக்கம்னு நினைக்கின்றேன் ) எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது. நன்றி ப்ரியன் ..மறக்கவே முடியாமல் செய்துவிட்டாய்.. இதுவே எனக்கு பெரிய பரிசு..
  பதிவை எழுதிய ப்ரியனும் பதிவை விமர்சித்த நண்பர்களும் என் மனதில் பதிந்து விட்டீர்கள். நன்றி நன்றி நன்றி

 3. சேதுக்கரசி

  ரசிகவைப் பத்தி அருமையா எழுதியிருக்கீங்க ப்ரியன். சரியாச் சொன்னீங்க — ரசிகவுடைய குறும்பு (லொள்ளு?) “எசப்பாட்டு” போன்ற பதில் கவிதைகள் மிகவும் ரசிக்கக்கூடியது.

 4. பொன்ஸ்~~Poorna

  பூரி சேட்டையை இப்போ தான் படிச்சேன்.

  இனியேனும் சொல்லாமல் சாப்பிட்டதுக்கும் சேர்த்து, சகோதரி ஜஹானுக்கு நல்லதா பூரி செஞ்சு போடச் சொன்னேன்னு சொல்லுங்க 🙂

 5. johan -paris

  வளமாக வாழ வாழ்த்துகிறேன்.
  யோகன் பாரிஸ்

 6. ப்ரியன்

  காசி அண்ணன் செல்பேசினார் அப்போது ரசிகவின் எண் தர மறந்திவிட்டேன் பின் குறுந்தகவலாக அனுப்பி வைத்துள்ளேன்..

 7. ப்ரியன்

  வாங்க மஞ்சூர் அண்ணா,

  பொன்ஸ் சொல்லுறமாதிரி நேரம் கிடைத்தால் நீங்களும் ஒரு பதிவுப் போடுங்களேன் நிலவு நண்பனைப் பற்றி!

 8. ப்ரியன்

  /*சிங். செயகுமார் கூட திருமணத்திற்கு செல்லப்போவதாய்ச் சொன்னார்.*/

  இப்போதுதான் அவருடன் பேசினேன்,தகவலுக்கு நன்றி அருள்

 9. மணியன்

  மணமக்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவியுங்கள் !!

  உங்கள் இடுகை அவரின் கவிதை பரிமாணத்தை அறிமுகப் படுத்தியது. நன்றி.

 10. ப்ரியன்

  மறக்காமல் உங்கள் வாழ்த்தையும் தெரிவிக்கிறேன் அருள்,

  இதோ,உங்கள் தொடர்புக்கு

  ரசிகவ் செல்பேசி எண் : +91-98435-47888

 11. பொன்ஸ்~~Poorna

  மஞ்சூர் ராசா,
  ப்ரியன் அடக்கி வாசிச்சி இருக்காருன்னா, நீங்க ஒரு பதிவு போடுங்களேன், நம்ம ஞானியார் பத்தி.. :)))

  இந்தப் பதிவும் பாருங்க.. இத்தனை அடக்கமா எழுதலை.. கொஞ்சம் நிறையவே எழுதி இருக்கேன்…

  ப்ரியன்,
  இந்தப் பதிவுக்கு ரொம்ப நன்றி.. அன்புடனின் வால் பற்றி இன்னும் அதிகம் தெரிந்து கொண்டேன் 🙂

 12. மஞ்சூர் ராசா

  ரசிகவ் ஞானியார் எனது நண்பர் என்பதைவிட சமூகத்தின் மீது அக்கரை கொண்டுள்ள ஒரு நல்ல எழுத்தாளர், கவிஞர், அவர் எனக்கு நண்பராக ஏன் வலைப்பதிவுலகிலும் குழும உலகிலும் பலருக்கும் நண்பராக இருக்கிறார் என்பதே நமக்கெல்லாம் பெருமை.

  அவரைப் பற்றி இங்கு எழுதியிருக்கும் நண்பர் பிரியன் என்ற விக்கியும் ஒரு நல்ல கவிஞர், கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார், அவ்வளவு தான்.

  இரண்டு இளைஞர்களும் மேலும் மேலும் வெற்றிப்பெற வாழ்த்துகிறேன்.

  மஞ்சூர் ராசா
  http://manjoorraja.blogspot.com/
  http://muththamiz.blogspot.com/
  குழுமம்:http://groups.google.com/group/muththamiz

 13. S. அருள் குமார்

  சிங். செயகுமார் கூட திருமணத்திற்கு செல்லப்போவதாய்ச் சொன்னார். அங்கு அவரைச் சந்தியுங்கள் 🙂

 14. S. அருள் குமார்

  எனது வாழ்த்துக்களையும் சொல்லிவிடுங்கள் ப்ரியன் 🙂

 15. ப்ரியன்

  கண்டிப்பா உங்க வாழ்த்துக்களைச் சொல்லிடுறேன் துளசி அக்கா!

  கிப்ட் வாங்க அவுங்க நேரா வராங்களாம்…நியூசிலாந்துக்கு To & Fro விமான பயணச்சீட்டு மட்டும் நீங்க வாங்கி தரணுமாம் 🙂

 16. துளசி கோபால்

  மணமக்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்து(க்)களைச் சொல்லுங்க.

  கிஃப்ட் இங்கே வச்சுருக்கேன். அவுங்க ரெண்டுபேரும் வந்து வாங்கிக்கணும்:-))))

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/