அன்புடன் குழுமத்தில் கவியரங்கத்திற்காக படைத்த கவிதை இது
<அன்புடன் குழுமம்> -> http://groups.google.co.in/group/anbudan
என்னை உலகிற்கும்
உலகத்திற்கு என்னையும்
அறிமுகம் செய்த
அன்னைக்கு முதல் வணக்கம்!
தமையனாய் சில நேரம்
வயதொத்த தோழனாய் சில நேரம்
நல்லாசிரியனாய் சில நேரம்
பாசமிகு தந்தையாய் சில நேரம்
தரமான மனிதனாய்
வார்த்த எந்தைக்கு அடுத்த வணக்கம்!
தோளோடு தோள் நின்று
தோழமையாய் என்னை
ஆளாக்கிய என்
ஆசான்களுக்கு அடுத்த வணக்கம்!
தாய்ப் பாலோடு
உனைப் பருகவில்லை!
தத்தித் தத்தி நடக்கையில்
துணைக்கு உனைப்
பற்றிக் கொள்ளவில்லை!
பத்து வயதில்கூட
தடவித் தடவித்தான் படித்தேன்
தமிழே உனை
தடவித் தடவித்தான் படித்தேன்!
தாராளமான உன்மடியில்
தஞ்சம் தந்து – எனைத்
தத்தெடுத்துக் கொண்ட
பெருமைமிகு
என் தமிழே
உனக்கு “பெரு”வணக்கம்!
உன்னில் நான் அடக்கம்!
என்னில் நீ அடக்கம்!
காதலியிடம் பேசும் வசனமில்லை!
அய்யனே பொய்மை
கொஞ்சமும் இல்லா மெய்யனே
என் அப்பனே!
பாரத கதையெழுத தந்தம்
உடைத்த கவி
பித்தனே!
முழு முதல் முதல்வனே!
பழத்திற்கு முந்தியவனே!
விக்கனம் விலக்கி
“விக்னேஷ்” என பெயர் கொண்ட
விநாயகனே!
என் குண்டனே!
உனக்கும்
எனக்கும் சேர்த்தொரு
வணக்கம்!
அறியா பிள்ளைக்கு
ஆறுதல் கரம் தந்து
தமிழ் கடலில் நீந்த
கற்றுத் தந்து கொண்டிருக்கும்
மின் தமிழ்ச் சங்கமே!
என்னை அன்புடன்
அரவணைத்துக் கொண்ட
“அன்புடன்” குடும்பமே
உனக்கொரு வணக்கம்!
தலைமைக்கு பெருமை சேர்க்கும்
இரவா விற்கு
தனி வணக்கம்!
முன்னிலை வகிக்கும்
வேந்தனுக்கு
ஒரு வணக்கம்!
கவிமழைப் பொழிகவிஞர்களுக்கு
சிறப்பு வணக்கம்!
பார்வையாளர்களாய் அமர்ந்து
சீர் தூக்கி
கவிதைகளில் ஏர் ஓட்டி
கவியரங்கத்தை சிறப்பிக்கும்
உள்ளங்களுக்கு
உவகை வணக்கம்!
வாராத மழை
வெளி சிந்த!
தமிழ் எழுது
எழுது என உந்த!
இதோ “வண்ணங்களில் என் எண்ணங்கள்”
வானுடைந்து மண்
விழுந்த சில
வானவில் சில்லுகள்!
வண்ணங்களில் என் எண்ணங்கள்
********************
– ப்ரியன்.
நீலம் ஒரு போலி
**********
நாம்
வான் நீலம் கண்டு வாழ்த்துவது இல்லை
கடல் நீலம் கண்டு களிப்பெய்துவதில்லை
கண்ணன் கருநீலம் கண்டு கும்பிடப்புகுவதில்லை
கண்கள் நீலம் கண்டு கவிப்பாடித் துதிக்கின்றோம்!
காதலியின்
கண்கள் நீலம் கண்டு கவிப்பாடித் துதிக்கின்றோம்!
எல்லோரும் அறிவதில்லை
அக்கண்களில் உள்ள
விஷத்தின் வண்ணமும் நீலமென்று
நம் மனதைக் கைது செய்யும் நீலத்தில்
‘விஷயம்’ இருக்கின்றது
விஷமும் இருக்கின்றது.
நீலம் ஒரு போலி
நீலம் வெறும் நிழல்
காரணத்தைக் கேளுங்கள்
சொட்டு நீலம் சேர்ப்பது
துணிகளின் ‘தூய வெண்மைக்கு’
நீலத்தின் வேஷம்
வெயிலில் வெளுத்துப் போய்விடுகிகிறது!
ஆம்!
நீலம் ஒரு போலி
நீலம் வெறும் நிழல்!
செங்குருதி அழகா?
***********
குங்குமச் சிவப்பழகு
செம்பருத்திப் பூவழகு
செம்மண் நிலமழகு
செந்தாமரை அழகு
செங்கதிரோன் அழகு
செவ்விதழ் அழகு
அவள் செவ்விதழ் தானுமொரு அழகு
செங்குருவி தனி அழகு
செங்குருதி அழகென்று
கருதுவோர் யாருமுண்டோ?
நம் தமையர்
ஈழத்தமிழர்
செங்குருதி அழகென்று
கருதுவோர் யாருமுண்டோ?
தமிழ்த் தாயின் குருதி கண்டு
வெறுக்கின்றேன் சிவப்பை – நீங்கள்
அறிவீர்கள் என் தவிப்பை!
வன்முறைக் கலாச்சாரம்
நிலவும் நாட்டில்
சிவப்புநிறம்,சீவ நதியாய் ஓடும்!
சில சிவப்பில் தியாகம் தென்படலாம்
அதன்பின் தீமையும் இருக்கின்றதே!
மஞ்சள் மெல்லிய சோக
ம்
****************
மஞ்சளை விரும்பாத மனிதருண்டோ?
மங்கலம் விரும்பாத பெண்மையுண்டோ?
கழுத்தில் மஞ்சள்
மங்கலத்தின் அடையாளம்
கண்களின் மஞ்சள்
காமாலையின் அடையாளம்
காமாலைக் கண்களுக்குக்
காண்பதெல்லாம் மஞ்சள்
குற்ற நெஞ்சங்களுக்கு
காண்பதெல்லாம் குற்றம்
மஞ்சள்,
மெல்லியதொரு சோகம்
மஞ்சள் வண்ணத்தில் நிறமில்லை
மஞ்சள் வண்ணத்தில் கனமான நிறமில்லை
நிறமிருந்தால் திடமில்லை
திடமிருந்தால் சுவையில்லை
சுவைத்து ரசிக்க உதவா மஞ்சள்
இந்த அவைக்கெதற்கு?
மஞ்சள் மெல்லியதொரு சோகம்
சோகம் நமக்கு வேண்டாம்
வேண்டுவதெல்லாம் சுக உற்சாகம்!
இருட்டோ இருட்டு
***********
இருட்டின் நிறம் கருப்பு
கருப்பின் துணை இருட்டு
கருப்பிருட்டுக் கருவறையில்
குடியிருந்த காரணத்தால் என்னவோ
மனித மனங்களெல்லாம் ஒரே கருப்பு
பிறர் மீது
கருப்பைப் பூசிவிடத் துடிப்பு
கண்ணுக்கு கரும்’மை’ அழகுதான்
ஒவ்வாமை ஆகாத வரையில்
கருமை ஒரு வெறுமை
கருமை ஒளி பிறக்க ஓடிவிடும்
இவ்வளவு ஏன்?
கருமைக்கு வயது ஏற ஏற
நரை ஏறும்
கருப்பின் முன்னே
வண்ணங்கள் பல வந்தாலும்
வலுவிழந்து போய்விடும்
வானவில்லே வந்தாலும்
பொலிவிழந்து போய்விடும்
இருட்டு மட்டும் இங்கே வந்தால்
இதுவே எங்கோ போய்விடும்
இருட்டு மட்டும் இங்கே வந்தால்
இக்கருப்பே எங்கோ போய்விடும்
இக்கருப்பு
தன் பொருட்டு பிறரை அழிக்கும்
பாங்கை எப்படிப் பெற்றது?
மனிதனோடு சேர்ந்த வகையில்
மாசு இதைப் பெற்றது!
கருப்பு
குற்றத்தின் குரல்
மன அழுக்கின் மறுபிறவி
எதிர்ப்பின் அடையாளம்
துக்கத்தின் துணைவன்
பயத்தின் பரிணாமம்.
ப’சுமை’
*****
பசுமை கண்களுக்குக் குளுமை
வறட்சி கண்களுக்குச் சுமை
பசுமைப் புரட்சி பற்றிப் பேசுகின்றோம்
பாயும் காவேரி வந்து சேர்ந்ததா?
தூரத்துப் பச்சை கண்களுக்குக் தண்மை
என்பார்கள்.
கர்நாடகப் பச்சை நம் கண்களுக்கு ஒவ்வாமை
இக்கரைக்கு அக்கரை பச்சை என்பார்கள்
உண்மைதான்
காவிரிக்கு அக்கரையில் பச்சைதான்
பச்சைப் பயிர்கள் வாடி வதங்கி
பாவ உயிர்களாய் நசுங்கி
பரிதவிக்கும் நிலை – இங்கு
பச்சைத் தண்ணீர்க்கே விலை!
இங்குள்ள தாவரங்களில்
குளோரோபில்கள் குறைந்துவிட்டன
சாந்தோபில்கள் நிறைந்துவிட்டன
பச்சை குத்தும் அரசியல்வாதிகள்
பச்சைத் துரோகிகள்
நம் சுட்டுவிரலில்,
பச்சை குத்தும் அரசியல்வாதிகள்
பச்சைத் துரோகிகள்
பச்சை ரத்தம் குடிக்கத் துடிக்கும்
மக்கள் விரோதிகள்
அவர்கள்,
பச்சை ரத்தம் குடிக்கத் துடிக்கும்
மக்கள் விரோதிகள்
பச்சைமரம் வெட்டும் கயவர்
மழை குறைக்கும் கூட்டம்
பச்சைமரம் வெட்டி
மேக கர்ப்பத்தைக் கலைக்கும் கயவர்
மழை குறைத்துப் பசியால்
உயிர்தின்னும் கூட்டம்
பச்சை வசனம் பேசும் நடிகர்
குழிபறிக்கும் கூட்டம்.
பச்சை பச்சையாய்
வசனம் பேசும் நடிகர்
இளைஞர்களுக்கு
குழிபறிக்கும் கூட்டம்.
வெண்மைதான் வண்ணம்
***************
தூய உள்ளங்களே
நீங்கள் வாழ்க
சத்திய மொழிகளே
நீங்கள் வெல்க
எளிய மனங்களே
நீங்கள் வாழ்க
ஒளி பொருந்திய விழிகளே
நீங்கள் வெல்க
தூய்மை வாய்மை எளிமை – இம்
மூன்றின் முத்தாய்ப்புதான் வெண்மை
வெண்மை வண்ணங்களின் தலைவன்
எல்லா வண்ணங்களின் தகப்பன்
வெள்ளொளிதான் உயிர்களின் உதயத்திற்காதாரம்
வெண்மைதான் பிறவண்ணங்களின் மூலாதாரம்
சமாதானப் புறாவும் வெண்மை
சங்கு சுட்டாலும் வெண்மை
காராம் பசுவாக இருந்தாலும்
கறப்பது வெண் பால்தான்!
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்