சில காதல் கவிதைகள் – 2

கொஞ்சம் சீக்கிரம்
வா!
சொர்க்கக் கடலில்
படகு வலிக்க
பெரிய துடுப்புடன்
காத்திருக்கிறான்
காதல் கடவுள்!

– ப்ரியன்.

என் கூந்தலின் நீளம்
உன் விரல்கள்
உள் புகுந்து
அளக்க;
அறிகிறேன் நான்!

– ப்ரியன்.

காதலியின்
கொலுசு சிணுங்களிலும்
கண்ணாடி வளையல்களின்
உடைபடும் சப்தங்களிலும்
நெஞ்சு முட்டும்
வெப்ப மூச்சிலும்
மெதுவாக நெய்யப்படுகிறது
இரவு!

– ப்ரியன்.

வருவாய் என
எண்ணினேன்!
வரவில்லை நீ!
வரமாட்டேன் என
நினைக்கிறேன்!
கண்டிப்பாக வருவாய் தானே!

– ப்ரியன்.

அவளுக்காக ஒரு
செடி நட்டு வளர்த்து வந்தேன்!
பூத்ததும்
பூ கிள்ளி தலையில் சூடி
செடியை தனியே
தவிக்கவிட்டுப் போகிறாள்!

– ப்ரியன்.

அவன் வருவதாய் சொல்லி
வராத நாட்களில்
அழுது அழுது
வெளிறி நீலம்
கரைகிறது வானம்!

– ப்ரியன்.

உன் கண்களின்
ஆழத்தின் தொலைந்த
என்னை!
அதன் இமை மேடுகளில்
தேடிக் கொண்டிருக்கிறேன்!

– ப்ரியன்.

காலை எழுந்து
சோம்பல் முறித்து
கூந்தலில் கட்டி முடிக்கிறாய்!
நம்முடன் விழித்தே
பயணித்த இரவையும்!
கூந்தலில் சிக்கி தொலைந்த
என்னையும்!

– ப்ரியன்.

நான் அமர்ந்திருந்த
மரத்தின்
கார்கால தளிர்கள்
பழுப்பாகி உதிர்கின்றன
இன்னுமா வரவில்லை
நீ!

– ப்ரியன்.

பழைய என் பாலிய
கதைகளில்
ஏழுகடல் ஏழுமலை தாண்டி
பாதுகாக்கப்படும் உயிர்!
என்னுடையதை எங்கே
ஒளித்துவைத்திருக்கிறாய்!

– ப்ரியன்.

காற்றை வெட்டி
ரணமாக்குகின்றன
கூரான மூங்கில் இலைகள்!
என் மனதை
உன் நினைவுகள்!

– ப்ரியன்.

சந்திரகிரகணத்து அன்று
மட்டுமல்ல!
ஒவ்வொரு முறை
இரவில் நீ
வெளி வரும்போதெல்லாம்
விழுங்கப்படுகிறது
நிலவு!

– ப்ரியன்.

கடற்கரையில் காத்திருந்தேன்
வாராத உனக்காக
விட்ட பெருமூச்சில்
ஆவியாகிப் போனது
கடல்!

– ப்ரியன்.

நீ வர நேரமாகும்
நாட்களில் தெரிகிறது!
மரம் விட்டு
மடி விழும்
இலைகளின் நேசம்!

– ப்ரியன்.

உன் மடியில்
குழந்தையாக தவழ ஆசை
இன்று உள்புகுத்தி
நாளைப் பிள்ளையாய்ப்
பெற்றுக் கொள்ளேன்
என்னை!

– ப்ரியன்.

இரவில்
நீ மொட்டைமாடியிலிருந்து
எட்டிப் பார்த்தால்தான்
மொட்டு வெடிப்பேன் என
அடம் பிடிக்கிறது
என் வீட்டு மல்லிகை!

– ப்ரியன்.

எல்லா நதிகளும்
மலைக்கிடையில் தொடங்குகின்றன!
என் உயிர் நதி மட்டும்
ஏனோ,
உன் மார்புக்கிடையில்
தொடங்குகிறது!

– ப்ரியன்.

நேரமாகி அவன் வந்ததும்
சொல்லாமல் கொள்ளாமல்
ஓடிப் போகின்றன
அதுவரை துணையாயிருந்த
கண்ணீர் துளிகள்!

– ப்ரியன்.

Reader Comments

  1. ப்ரியன்

    அன்பின் செந்தில் அறிவுமதி நட்புக்காலம் என்று ஒரு அருமையான கவிதை தொகுப்பை தந்துள்ளார் அது படிக்க இங்கே சொடுக்கவும்

    http://www.koodal.com/poem/poem_search.asp?id=5&cat=4

  2. யாத்திரீகன்

    அறிவுமதி எழுதியது… நிலாக்காலம் தானே.. நட்புக்காலம் என்றுமா எழுதினார் ??

    பி.ம். ஆன்சைட் போகவேண்டாம்.. பேசாம நீங்க வந்திருங்க.. அது ரொம்ப வசதி.. 😀

  3. ப்ரியன்

    அன்பின் செந்தில்,

    எனக்கும் அந்த பேராசை இருக்கின்றது ஆனால் தாளில் கைவைத்தால் அறிவுமதியின் நட்புகாலம்தான் முன் நிற்கின்றது.அதன் தாக்கம் கொஞ்சம் குறையட்டும் என காத்திருக்கிறேன்…எல்லாதுக்கும் மேலே எங்க பி.எம் ஆன் சைட் போகணும் 🙂 அப்பதான் நேரம் கிதைக்கும்…

  4. ப்ரியன்

    அன்பின் நளாயினி,

    இதுதான் நீங்கள் என் வலைப்பூவில் இட்ட முதல் பின்னூட்டம் என நினைக்கிறேன்.அதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  5. யாத்திரீகன்

    ப்ரியன்..

    ஒரு பேராசை எனக்கு.. நட்பை பற்றி ஓர் கவிதைத்தொடர் சீக்கிரம் எழுதுங்களேன்..

    மிக முக்கியமாக.. இனக்கவர்ச்சிக்காக (1 மாதத்தில் தொலைபேசியில் வருவதை காதல் என்று சொல்ல மாட்டேன்) நட்பை களப்பலி கொடுப்பவர்களுக்கு படிக்க கொடுக்க வேண்டும். 🙁

  6. நளாயினி

    நீ வர நேரமாகும்
    நாட்களில் தெரிகிறது!
    மரம் விட்டு
    மடி விழும்
    இலைகளின் நேசம்!

    நல்ல ஆழமான நேசம் பாசம் தெரிகிறது. மெய்மறந்து வாசித்த கவிதை. பாராட்டுக்கள்.

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/