ஆறு கவிதைகள் 6!

நவீன் அண்ணாச்சி கூப்பிட்டாரு
வெற்றி அண்ணன் இழுத்துப் பார்த்தாரு
குமரன் அண்ணாத்தேயும் கொடஞ்சு கொடஞ்சு கேட்டாரு
ம் மசிவோமா நாம

இந்த அந்த ன்னு தள்ளித் தள்ளி
ஆறப் போட்டாச்சு ஆறு பதிவை
வேற ஒண்ணுமில்லை மக்களே
வழக்கம் போலதான்
வேலை மேலதான்
பழி!

இதோ என் ‘ஆறு’ பதிவு;படிச்சுட்டு ஒரு ஆறு பின்னூட்டமாவது வரணும் ஆமா!

*

ஆற்றிலிருந்து
தோண்டப்படுகிறது மணல்
அக்குழியிலேயே அவ்வாற்றை
சமாதியாக்க!

*

வெள்ளி ஒட்டியாணமாய்
ஆறு ஓடிய
எம் ஊரின் தெருவெல்லாம்
தண்ணீருக்காய்
பிளாஸ்டிக் குடங்களின்
தவங்கள் இன்று!

*

கால் நனைத்து
மனம் சில்லிடவைத்த
ஆற்றை இன்று கடக்கையில்
தட்டிவிழ வைக்கிறது – பல் இளிக்கும்
அதன் விலா எலும்புகள்!

*

ஊருக்கே தண்ணீர் கொடுத்த ஆற்றுக்கு
நாக்கு வறண்டு கிடக்கிறது
ஒரு குவளை தண்ணீர் தர யாருமில்லை;
தண்ணீரும் இல்லை!

*

கிராமத்துக்கு செல்லுகையில் எல்லாம்
ஏதாவதொரு மாற்றம் கண்ணில் படும்
ஆனாலும்,
பளேரென இதயத்திலேயே அறையும்
ஆற்றின் ஆழம்!

*

முந்நாட்களில்
தொப்பென குதிக்கையில்
கால் சல சலக்க நடக்கையில்
தவம் கலைந்த
அவசரத்தில் பறந்த கொக்குகள்;
வற்றி நிற்கும் ஆற்றோரம் உலாத்துகையில்
பேர பிள்ளைகளுக்கு
பழைய கதைகள் சொல்லி செல்லக்கூடும்
என்னைப் போலவே!

*

– ப்ரியன்.

Reader Comments

  1. அருட்பெருங்கோ

    ஆற்றில் ஓடுகிற நீரில் குளித்தது ஒருகாலம்…
    ஆற்றிலேயே ஊற்றுத் தோண்டிக் குளித்தது ஒருகாலம்…
    இப்போதெல்லாம் ஆற்றில் இறங்கி விட்டு வந்தால் வீட்டில் ஒருமுறை குளிக்க சொல்லி விடுவார்கள் போல…
    அந்தளவுக்கு சாயக்கழிவுநீர் ஓடுகிறது எங்களூர் அமராவதியில்…

    கவிதைகள் நறுக்!

  2. வெற்றி

    ப்ரியன்,
    ஆகா! அருமை. அற்புதம். அனைத்தும் அருமையன கவிதைகள்.
    குறிப்பாக,

    /* முந்நாட்களில்
    தொப்பென குதிக்கையில்
    கால் சல சலக்க நடக்கையில்
    தவம் கலைந்த
    அவசரத்தில் பறந்த கொக்குகள்;
    வற்றி நிற்கும் ஆற்றோரம் உலாத்துகையில்
    பேர பிள்ளைகளுக்கு
    பழைய கதைகள் சொல்லி செல்லக்கூடும்
    என்னைப் போலவே! */

    இக் கவிதை எம்மினத்தின் தொலைந்த பல செல்வங்களை ஒருவித சோக உணர்வுடன் எடுத்துச் சொல்கிறது. இக் கவிதையை படிக்கும் போது ஈழத்தின் பல பகுதிகள் நினைவுக்கு வருகின்றது.

    பி.கு:- அழைப்பை ஏற்று பதிவு போட்டமைக்கு மிக்க நன்றிகள்.

  3. Naveen Prakash

    வற்றிய ஆறு
    வற்றாத கவிதை
    ஆற்றின் நினைவு
    ஆறாத ரணமாக

    அழகான கவிதைகள்
    ஆனாலும் தைக்கின்றன

    அழகு ப்ரியன் !! :))

  4. தம்பி

    ப்ரியன்,

    கவிதைப்பிரியந்தான் அதுக்காக கவிதையாவே ஆறு விளையாட்டை முடிச்சிட்டிங்களே வித்யாசமான ஆளுதான் நீங்க.

    அன்புடன்
    தம்பி

  5. பாலசந்தர் கணேசன்.

    பேர பிள்ளைகளுக்கு
    பழைய கதைகள் சொல்லி செல்லக்கூடும்
    என்னைப் போலவே

    ரொம்ப நாள் கழித்து ஓரு கவிதையின் வரிகள் மிகவும் பாதித்துள்ளன. பிரமாதம்!!!

    என்ன செய்ய ஒரு குத்து தான் விடமுடியும்.

  6. சேரல்

    எல்லாக் கவிதைகளும் அருமை!
    //முந்நாட்களில்
    தொப்பென குதிக்கையில்
    கால் சல சலக்க நடக்கையில்
    தவம் கலைந்த
    அவசரத்தில் பறந்த கொக்குகள்;
    வற்றி நிற்கும் ஆற்றோரம் உலாத்துகையில்
    பேர பிள்ளைகளுக்கு
    பழைய கதைகள் சொல்லி செல்லக்கூடும்
    என்னைப் போலவே! //

    இந்தக் கவிதையை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

  7. பிரதீப்

    சுளீருன்னு உறைக்குது கவிதைகள்.

    கை வைத்தால் போதும் தண்ணீர் ஊற்று உன் முகத்தில் அறையும் என்றிருந்த வைகையின் இன்றைய நிலையைக் கண்டு நான் எழுதியது இங்கே இருக்கிறது.

    வந்து பாருங்க!

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/