உன் பார்வை
நெய்;
எரிகிறது என்
உயிர்தீபம்
*
உன் முத்தமீன்களை
கொத்திக் கொத்தி
கொழுத்துக்கிடக்கிறது
என் உயிர்ப்பறவை
*
நம் நிழல்கள்
கட்டிக்கொண்ட பொழுதில்
நீ சிந்திய வெட்கத்தில்
வானவில்லாக பரிணாமம் கண்டன
நம் நிழல்கள்!
*
கோடை மழையின்
முதல் மழைத்துளி
நீ
சிந்தும்
ஒற்றைப் பார்வை
*
நீ
என் உயிர் சாளரத்தின்
வெண்ணிலா
*
குளத்தில் இறங்குகிறாய்
உன் அழகு பொரிக்காக
காத்திருக்கின்றன
மீன்கள்
*
நீ
கண்டு அஞ்சியதிலிருந்து
தன் கம்பீரத்தினை
நொந்துக் கொண்டிருக்கிறான்
அய்யனார்
*
என் இதயதோட்டத்தில்
காதல் பூத்திருக்கிறது
எப்போது வருகிறாய்
பறித்து சூட!
*
நீ
தொட்டுப் பறிக்க
மொட்டவிழ்கின்றன
பூக்கள்!
*
காய்வதாகவே இல்லை
நீயும் நானும்
நனைந்த மழையின் ஈரம்!
*
– ப்ரியன்