தேவன் சபை நுழைந்தேன்
தடவி தழுவி
மடியில் கிடத்திக் கொண்டது அது;
சாத்தானின் சபை புகும்
வாய்ப்பும் கிட்டியது
சாட்டையை சுழற்றிபடி
கோரநகங்களால் கீறி இரத்தம் சுவைத்து
வரவேற்றது அதே காதல்!
இரயில் நிலையத்தின்
இரைச்சலையும் தாண்டி
குரலும்
சிரிப்பொலியும்
இசையாக காதுமடல் வருட;
கண்கள் தேடி
அவள் உருவம் மேல்
முட்டி நின்றது;
முட்டி நின்ற கண்கள்
மூர்ச்சையாகி
நின்றது நின்றபடியே இருந்தது!
கையிருந்த குழந்தைக்கு
முத்தமிட்டு
கையாட்டி
விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தாள்;
தன் பங்குக்கு
காதணியும் காற்றுக்கு சாடைக்காட்டி
விளையாடிபடி இருந்தது!
புறப்படுவதற்கான அடையாளமாய்
பெரியதாய் இரயில் கனைக்க
அதுவரை அருகிலிருந்தவனிடம்
குழந்தையை கையளித்து
சிரித்து கையசைத்து
வந்தாள் அவள்;
வழி அனுப்ப வந்த அவன்
நண்பனாக இருக்கலாம்
தூரத்து சொந்தமாயிருக்கலாம்
என கணக்குப் போட்ட
குரங்கு மனது
ஒருவேளை
அய்யோ ஒருவேளை
காதலனாக
கணவனாக இருக்ககூடுமோ
எண்ணிய வேளை
மூலையில் குத்தவைத்து
அழ தொடங்கிவிட்டிருந்தது உயிர்!
அதை தொடர்ந்தே நிகழந்தது
நான் நாளிதழில் முகம் புதைத்ததும்;
அவள் பெட்டி நகர்த்தி தரக் கேட்டதும்;
நாளிதழ் நகர முகம் பார்த்து
அவள் உணர்வுகள் மூர்ச்சை ஆனதும்;
அதே நாங்களேதானென
நாங்கள் உறுதிபடித்திக் கொண்டதும்!
காலச் சக்கரங்கள் மெல்ல சுழல
நினைவுகளின் மேல்
பயணத்திருந்தவனை
அவளின் குரல் கைகாட்டி நிறுத்தியது.
‘நல்லா இருக்கியா?’
நான் இல்லையோ என்ற சந்தேகத்தில்
முன்னர் காட்டிய ‘ங்க’ மரியாதை வெட்டி
அவள் பழைய பழக்கத்தில் பேச ஆரம்பிக்க;
‘ம்!’
மூடிய வாய் திறவாமல்
மூச்சு வழியே பதில் சொல்ல
மீண்டும்
பள்ளி வயதை அடைந்திருந்தேன் நான்!
– உயிர் இன்னும் உருகும்.