*
உன்
கோபங்களை
தாபங்களை
மன்னித்துவிடுகிறேன்
முத்தத்தால் நீ முடிப்பதானால்!
*
புல்லாங்குழல்
அழுவதாகவே இருக்கின்றது;
நீ வரும் நாட்களில் மட்டுமே
அது இசையாய் வழிகிறது!
*
மலர் பறிக்கையில்
மேல் விழுந்து சிலிர்ப்பூட்டும்
பனித்துளியாய் உன் நினைவு!
*
கை பிரித்து
அவரவர் திசையில்
முன்னேறுகிறோம்;
இன்னும் பூங்காவில்
முதுகோடு முதுகு சேர்த்தபடி
பேசிக் கொண்டிருக்கின்றன
இதயங்கள்!
*
என் பார்வைக்கெதிரே
தளிர் இலையொன்று
பழுத்து வர்ணம் மாறி
உதிர்கிறது!
நீ வருகிறாய்
உதிர்ந்திட்ட அவ்விலை
மீளவும் மரம் பொருந்தி
பச்சையாக தொடங்குகிறது!
*
சில முடிகள் வெளுத்துவிட்டன
தேகம் பலவீனமடைந்து விட்டது
தோல்கள் சுருக்கம் கண்டுவிட்டன
என்றாலும் என்ன
இப்போதும்
காதலின் குழந்தைகள் நாம்!
*
காதல் பாதையில்
விழி மூடியபடி
பயணிக்கிறேன்;
வழிகாட்டியபடி
துணைவருகிறது
உந்தன் விழியின் ஒளி!
*
உன்னைவிட்டு பிரிந்து
நடக்கும் தருணங்களில்
என் சவத்தை
நானே சுமந்து தொடர்கிறேன்!
*
மரணம் ஒத்த
தூக்கமதிலும்
கேட்டபடியே இருக்கிறது
உந்தன் விழி படபடக்கும் சப்தம்!
*
கொஞ்சினால் மிஞ்சும்
மிஞ்சினால் கொஞ்சும்
காதலும் குழந்தைதான்!
– ப்ரியன்.