விழி படபடக்கும் சப்தம்

காதலர் தின வாழ்த்துக்கள்

*

உன்
கோபங்களை
தாபங்களை
மன்னித்துவிடுகிறேன்
முத்தத்தால் நீ முடிப்பதானால்!

*

புல்லாங்குழல்
அழுவதாகவே இருக்கின்றது;
நீ வரும் நாட்களில் மட்டுமே
அது இசையாய் வழிகிறது!

*

மலர் பறிக்கையில்
மேல் விழுந்து சிலிர்ப்பூட்டும்
பனித்துளியாய் உன் நினைவு!

*

கை பிரித்து
அவரவர் திசையில்
முன்னேறுகிறோம்;
இன்னும் பூங்காவில்
முதுகோடு முதுகு சேர்த்தபடி
பேசிக் கொண்டிருக்கின்றன
இதயங்கள்!

*

என் பார்வைக்கெதிரே
தளிர் இலையொன்று
பழுத்து வர்ணம் மாறி
உதிர்கிறது!
நீ வருகிறாய்
உதிர்ந்திட்ட அவ்விலை
மீளவும் மரம் பொருந்தி
பச்சையாக தொடங்குகிறது!

*

சில முடிகள் வெளுத்துவிட்டன
தேகம் பலவீனமடைந்து விட்டது
தோல்கள் சுருக்கம் கண்டுவிட்டன
என்றாலும் என்ன
இப்போதும்
காதலின் குழந்தைகள் நாம்!

*

காதல் பாதையில்
விழி மூடியபடி
பயணிக்கிறேன்;
வழிகாட்டியபடி
துணைவருகிறது
உந்தன் விழியின் ஒளி!

*

உன்னைவிட்டு பிரிந்து
நடக்கும் தருணங்களில்
என் சவத்தை
நானே சுமந்து தொடர்கிறேன்!

*

மரணம் ஒத்த
தூக்கமதிலும்
கேட்டபடியே இருக்கிறது
உந்தன் விழி படபடக்கும் சப்தம்!

*

கொஞ்சினால் மிஞ்சும்
மிஞ்சினால் கொஞ்சும்
காதலும் குழந்தைதான்!

– ப்ரியன்.

பெரியதாக்கி பார்க்க படம் மேல் சொடுக்கவும்

Reader Comments

 1. ப்ரியன்

  நன்றி வரவனையான் இந்த பதிப்பில் எனக்கு மிகப்பிடித்த அக்கவிதை உங்களுக்கும் பிடித்திருப்பதில் இரட்டை மகிழ்ச்சி

 2. வரவனையான்

  பிரியன், வேணாம் அழுதுடுவேன் வலிக்குது.

  உண்மையில் பிரியன் அற்புதம் கவிதைகள் அதிலும் அந்த பூங்கா கவிதை, உங்கள் கவிதைகள் எனக்குள் ஒரு மெல்லிய சோகம் போன்றதொரு உணர்வைக்கொண்டு வருகிறது, ஆம் அதுதானே காதலுணர்வு

  வாழ்த்துக்கள்

 3. தூயா

  //…அதுவுமில்லாமல் காதல் பற்றி எழுதி வெகுநாட்களாவதால் கொஞ்சம் சிரமமாகவும் இருந்தது. //

  இது தானே வேணாங்கிறது 😛

 4. சிறில் அலெக்ஸ்

  ப்ரியன் அருமை. படங்களில் பொறித்தது இன்னும் அழகு.

  இதைப் படித்து கருத்து சொல்லுங்களேன்.

 5. தமிழ்ப்பிரியன்

  விழி படபடக்கும் சப்தம்! அருமை..
  வாழ்த்துக்கள்.

 6. ப்ரியன்

  கருத்துக்களுக்கு நன்றி முபாரக் அண்ணா,நவீன்,ப்ரியா(யாருங்க இது ?! எனக்கு மிகப் பிடித்தமான பேரில்),அருட்பெருங்கோ

 7. ப்ரியன்

  நன்றி நாகு…மனதில் தோன்றியதை அப்படியே சொன்னதற்கு…

  எனக்கும் எழுதி முடித்தபோது ஏமாற்றமே மிஞ்சியது…ஆனால் புதிதாக எழுத நேரம் ஒதுக்க இயலவில்லை…அதனால் கையில் இருந்ததை அப்படியே இட்டுவிட்டேன்…அதுவுமில்லாமல் காதல் பற்றி எழுதி வெகுநாட்களாவதால் கொஞ்சம் சிரமமாகவும் இருந்தது.

 8. அருட்பெருங்கோ

  ப்ரியன,

  வாழ்த்துக்கள்!!!

  கவிதையில் காதல் அடர்த்தியாக இருக்கிறது!

 9. நவீன் ப்ரகாஷ்

  படபடக்க வைக்கின்றன படங்களும் அதனினும் கவிதைகளும் ப்ரியன் !! :)))

 10. Mubaarak

  வாழ்த்துக்கள் ப்ரியன் 🙂

  நன்றாக இருக்கிறது காதலைப் பற்றிய எண்ணங்கள்.

  சினேகபூர்வம்
  முபாரக்

 11. நாகு

  கவிதை நன்றாக உள்ளது. ஆனால், உங்களிடம் நான் இதைவிட இன்னும் கொஞ்சம் அதிகமாகவே எதிர்பார்த்து இந்த பதிவினுள் நுழைந்தேன். கொஞ்சம் ஏமாற்றம் தான்.

 12. தூயா

  நல்லாயிருக்கு….:) படங்களுடன் எழுதியது இன்னும் அழகூட்டுகின்றது..:)

Write a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.