மற்றொரு மாலையில்… – 09

காதல் கோவிலின்
கருவறையில்
தேவி உனக்கு;
தினம் தினம்
என் கண்ணீரால்
அபிஷேகம்!

பரிட்சை அறை வெளியே
முதல் தேர்விற்கு முந்தைய
பதட்டமான அந்நொடிகள்!

எங்கெங்கோ தேடி
சலிப்படைந்த
கண்கள் தரை தொட்டு
எழும்பிய சமயம்
முகமெல்லாம் புன்னகையாய்
நின்றிருந்தாய் எதிரில்!

‘படிச்சிட்டியா?
நல்லா எழுது;
வாழ்த்துக்கள்!’
அவசரமாய் உதிர்ந்த வார்த்தைகள்
இறக்கை விரித்து காற்றில்
பறக்க தொடங்கியிருந்தன;
பக்கத்தில் நானும்
ஒரு காற்றாடியாய் மாறி
நானும் பறந்திருந்தேன்;
எனக்கே ஆச்சர்யம்தான்
மேலே பேசியதெல்லாம்
நான்தானா என்பதில்
எனக்கே பெரும் ஆச்சரியம்தான்!

உனக்கேற்பட்ட ஆச்சரியம்
இன்று சொல்லியா முடியும்!

உனக்கு பேசக்கூட வருமா?
அதிலும் என்னிடம் என்பதாய்
ஒரு பார்வை
மேலாய் படரவிட்டு
‘இந்தா கோவில் பிரசாதம்’
கைவிரித்து நீ தர
கண்மூடி தொட்டு நெற்றியில் நான் பூச
கையிருந்த எழுதுகோல் தவறி
மண்ணில் விழுந்தது!

குனிந்து எடுத்து
நல்லா எழுது
என்று உன் தேர்வறை நோக்கி நடந்தாய்!
எனக்கு ஏனோ
மரவெட்டியும் வனதேவதையும்
மனத்திரையில் வந்துப்போனார்கள்!

எனக்கே சொல்லாமல்
வேண்டுமென்றே
எழுதுகோலை தரையில் விட்டது
அந்த உயிர் சாத்தானின் வேலை
என்பது வெகுநாள் தெரியாமலே இருந்தது!

நீ எழுதுகோல் தொட்டுக் கொடுத்த
நினைப்பில்
அன்றைய தேர்வு நன்றாகவே முடிந்தது;
அடுத்தடுத்த தேர்வுகளும்
அவ்வாறே!

Posts Tagged with…

Reader Comments

  1. தனசேகர்

    கவிதைகள் ஒவ்வொன்றும் அருமையாக இருக்கிறது … என்ன சொந்த அனுபவமா??? 😉

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/