நகரின்
அந்த பிரதான துணிக்கடையின் லிப்டில்
பெருங்கூட்டம் மற்றும் பொதிகளுக்கு இடையில்
எதிர்பாராமல்
நிகழ்ந்து முடிந்தது
அந்த சந்திப்பு!
அதிர்விலிருந்து மீண்டு
நான் உதிர்த்த புன்னகை
உனைச் சேர்ந்திடும் முன்னம்
கழுத்தை வெட்டித் திருப்பிக் கொண்டாய்!
கொஞ்சம் கருப்பாகியிருந்தாய்;
மிஞ்சிய சதையும்
உயிர்ப்பில்லா உதடும்
காதோரம் ஓடிய நரை ஒன்றும்
உன்னை வேறு மாதிரி காட்ட முயன்றிருந்தன!
கட்டிடத்தின் உயரம்
அங்குலம் அங்குலமாய் கடக்க
காலம் தன் கால்களை
வேகமாய் வீசி
ஆண்டு கணக்கில் பின்னோக்கி
பயணப்பட்டிருந்தது!
கை பிணைந்த கணம்
மடி சாய்ந்த தருணம் என
நீளமாய் விழுந்து பரவ தொடங்கிய
நினைவின் விழுதுகள்
சட்டென அறுந்து தொங்கின
லிப்ட் நின்ற வேகத்தில்!
பேசிவிடும் முனைப்புடன்
கூட்டத்தில் முண்டி அடித்து வெளியேறுகையில்
கரைந்து
காணாமல் போயிருந்தாய்
முந்தைய காலத்தை போலவே
சொல்லாமல் கொள்ளாமல்!
வீடு திரும்பியவன்
மனையின் மடி சாய்ந்து
கதைச் சொல்லி அழுது
அவளை
கட்டியபடி உறங்கிப்போனேன்!
தைரியம் சிறிதும் அற்ற நீ
சன்னமாக அழுதிருப்பாயா –
குளியலறை குழாயை
சத்தமாய் திருப்பிவிட்டபடியாவது?!