இசைக்குறிப்புகளாய்!

*

ஆதாம்
ஏவாள் சுவைத்த
பாவக்கனி
காதல்!

*

துளிர் துயிலும்
மழைத்துளி பருகவரும்
சின்னஞ்சிறு சிட்டுக்குருவியாய்
என்னிருதயம்
உனைத் தேடி
வரும் அந்நாளில்
காத்திரு காதலோடு!

*

கசப்பு மருந்தருந்திய
குழந்தையின் முகமாய்
இதயம்;
உன்னை காணா நாட்களில்!

*

ஒரு நாள்
மழையோடு;
மற்றொருநாள்
மலரோடு;
இன்னொரு நாள்
இசையோடு என்று
ஒவ்வொரு சந்திப்பின் பிறகும்
ஒவ்வொன்றோடு திரும்புகின்றேன்;
பொத்தி வைக்க இடமில்லாமல் போகும் நாளில்
மொத்தமாக கடத்திச் செல்வேன் உன்னை!

*

உலர்ந்து வெளிறி
உடையும் நிலையிலிருக்கிறது
ரோஜா இதழ்கள்;
பனி கூட உதிராமல்
பத்திரமாய் இருக்கிறது
அதை நீ கை சேர்த்த கணம்!

*

குளித்து வரும்
உன்னில் வழியும்
நீர்த்துளிகள் நினைவூட்டுகின்றன;
மழை தூரிகை
சன்னல் கண்ணாடியில்
வரையும் ஓவியங்களை!

*

தேநீரில்
கரைந்திட காத்திருக்கும்
சர்க்கரைக் கட்டியென
உன்னுள் கலந்திட
படைக்கப்பட்டவள் நான்!

*

உன்
வளையல் சிணுங்கும் ஓசைகளையும்
கொலுசு கொஞ்சும் ஒலிகளையும்
பத்திரப்படுத்துகிறேன்
என் கவிதைகளுக்கான இசைக்குறிப்புகளாய்!

*

உன்னைப் போலவே
அழகாயிருக்கிறது
நம் காதலும்!

*

நீ உறைய – இதயம்
கொத்திக் கொத்தி
கூடு அமைக்கிறது
காதல் குருவி!

*

அதிகாலை எழுந்து
சோம்பல் முறிக்கிறாய்;
எங்கோ மெல்ல
மொட்டு வெடிக்கிறது
ஓர் தாமரை!

*

கோபமாய்
நீ முகம் திருப்பிடும்
கணத்தில்
சட்டென நிகழ்ந்தே விடுகிறது
என் வானில்
ஓர் சந்திர கிரகணம்!

*

பார்வையற்ற மனிதனின்
கைத்தடியாய்
நீ இல்லா என் வாழ்வில்
நின் நினைவுக்குறிப்புகள்!

*

எப்படி பத்திரப்படுத்துவதெனத் தெரியவில்லை
உன் இதழ்கள்
என் மேல் வரைந்த
ஈர ஓவியங்களை!

– ப்ரியன்.

Reader Comments

 1. கோவை முசரளா

  கோபமாய்
  நீ முகம் திருப்பிடும்
  கணத்தில்
  சட்டென நிகழ்ந்தே விடுகிறது
  என் வானில்
  ஓர் சந்திர கிரகணம்! //

  ஒப்புமையும் உவமையும் கவிதைக்கு கிரீடம் சூட்டுகிறது பிரியன்

  பிரியப்பட்டு வெளிவந்த வார்தைகள் எப்பவும் நிறைவாகவே இருக்கும்

  நல்ல ரசனை ….தொடர்ந்து ரசியுங்கள் உங்களோடு நாங்களும்………….

 2. jothi

  எப்படி பத்திரப்படுத்துவதெனத் தெரியவில்லை
  உன் இதழ்கள்
  என் மேல் வரைந்த
  ஈர ஓவியங்களை!

  its very suit for me………..and my love………..

 3. selva

  உன்னைப் போலவே
  அழகாயிருக்கிறது
  நம் காதலும்!

  அழகான வரிகள் ப்ரியன் 🙂

 4. கோபால்

  உன்
  வளையல் சிணுங்கும் ஓசைகளையும்
  கொலுசு கொஞ்சும் ஒலிகளையும்
  பத்திரப்படுத்துகிறேன்
  என் கவிதைகளுக்கான இசைக்குறிப்புகளாய்

  அருமையான வரிகள் தோழரே

 5. திவ்யா

  “தேநீரில்
  கரைந்திட காத்திருக்கும்
  சர்க்கரைக் கட்டியென
  உன்னுள் கலந்திட
  படைக்கப்படவன் நான்!”

  வணக்கம் ப்ரியன்
  இந்த வரியில் உள்ள
  தவறு புரிகிறதா?

  மிகவும் அழகு.
  பாராட்டுக்கள்.
  நன்றி.

 6. ஸ்ரீ

  “கசப்பு மருந்தருந்திய
  குழந்தையின் முகமாய்
  இதயம்;
  உன்னை காண நாட்களில்!”

  அருமை. காதலர் தின வாழ்த்துக்கள் நண்பரே!

  – ஸ்ரீ.

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/