பாப்பா பாட்டு!

கொஞ்ச நாள் முன்னால் வரை நானும் ஒரு சிறுவனாக இருந்தேன் என்பதை நினைத்தால் மிகவும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.கிழிந்த டவுசரில் கட்டமாக கிழித்த காகித்ததை தபால் என்று போட்டதும் , வேப்பங்கொட்டையை எச்சல் துப்பிய விரல் முட்டியில் வைத்து தோல் கிழிய அடித்ததும் , பகல் உணவு வேளையில் கமல் அணி ரசினி அணி என பிரிந்து அடித்துக் கொண்டதும் , சின்ன வயது சிநேகம் தந்த தோழியின் கதகதப்பும் , பறித்து தின்ற பருத்திப் பிஞ்சுகளின் சுவை நாக்கில் நிறையும் நேரத்தில், சத்தமாய் ராகத்தோடு இழுத்து இழுத்து பாடிய சில பாடல்களில் சிலவற்றை இங்கு பதிக்கிறேன்.

தோசை அம்மா தோசை
அரிசி மாவும் உளுந்த மாவும்
கலந்து சுட்ட தோசை
அப்பாவிற்கு நான்கு
அண்ண்னுக்கு மூன்று
அக்காவுக்கு இரண்டு
பாப்பாவுக்கு ஓன்று
சீனி நெய்யும் சேர்த்து
கூடி கூடி உண்போம்!

*

நிலா நிலா ஓடி வா
நிலாமல் ஓடி வா

மலை மீது ஏறி வா
மல்லிகைப் பூ கொண்டு வா

வட்ட அட்ட நிலவே
வண்ண முகில்ப் பூவே

பட்டம் போல பறந்து வா
பம்பரம் போல சுற்றி வா!

*

அணிலே அணிலே ஓடி வா
அழகிய அணிலே ஓடி வா

கொய்யா மரம் ஏறி வா
குண்டு பழம் கொண்டு வா

பாதி பழம் உன்னிடம்
பாதி பழம் என்னிடம்

கூடிக் கூடி இருவரும்
கொறித்து கொறித்து தின்னலாம்!

*

குள்ள குள்ள வாத்து
குவா குவா வாத்து

மெல்ல உடலைச் சாய்த்து
மேலும் கீழும் பார்த்து

செல்லமாக நடக்கும்
சின்ன மணி வாத்து!

*

தோசை அம்மா தோசை என்றதும் கை மேல் கை வைத்து தோசை ஊற்றுவது போன்ற பாவனையும் , நிலாவையும் அணிலையும் கை தூக்கி அழைப்பதையும் , வாத்து பாடல் படித்ததும் கைவலி டீச்சர்(கைவேலை டீச்சர்) குச்சியை கையில் வைத்துக் கொண்டு வாத்து போல குத்த வைத்து நடந்து காட்டியது நினைவுக்கு வருவதையும் இன்றும் தடுக்க முடிவதில்லை.

4 thoughts on “பாப்பா பாட்டு!”

  1. //பறித்து தின்ற பருத்திப் பிஞ்சுகளின் சுவை நாக்கில் நிறையும் /..
    ரொம்ப பீல் பண்ண வெச்சுட்டீங்க 🙂

  2. கொஞ்ச நாள் முன்பு வரையா ?!?!?! என்ன சின்னபுள்ளத்தனமா இருக்கு .. 🙂

    எல்லா பாட்டையும் நியாபகப்படுத்திட்டீங்க நன்றி 🙂

  3. தல, நீங்க இன்னும் சின்னப்புள்ளன்னு இல்ல நினைச்சிட்டு இருந்தேன். இப்படி வயசாயிடுச்சேன்னு ஃபீல் பண்ணுறீங்களே….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.