Archive for February, 2014


எட்ட எட்ட போனாலும்
தொட்டுவிடும் துடிப்போடு
கிட்ட கிட்ட
வருகிறேன்

கரையாய் நீ
அலையாய் நான்

– ப்ரியன்.

 

உனை எழுதிய
கவிதை வரிகளை
காட்சிப்படுத்த உத்தேசித்துள்ளேன்
ஓவிய கண்காட்சியில்.

– ப்ரியன்

என்
அதி உன்னதமான
கணங்களை
காதல்
உன்னில் ஒளித்து
உலகுக்கு அனுப்பியிருக்கிறது

– ப்ரியன்.

தேங்கி சிறு குட்டை ஆகிவிட்டிருக்கிறது
மே மாத ஓடை

தாவி குதிக்கும் வேகத்தில்
ஓடி ஒளிகிறது தலப்பிரட்டை

உடலெங்கும் உள்புகுந்து
உஸ்ணத்தை வெளியேற்றுகிறது
இரவு தந்துவிட்டுபோன குளிர்கொண்டு

கணம் கணமாய்
பொழுது கழிய
போதும் வெளியே வா என்கிறார் தாத்தா

வெளிறி சுருங்கிய
கை கொண்டு
முகம் வடியும் நீரை துடைக்கையில்

எதிரில்
வெக்கைக்காற்றில்
அசைந்தபடி
காலெண்டரில் ஓடுகிறது
நீல நிற ஓடை.

– ப்ரியன்.

மழைக்கு
முன்னான மண்வாசம்
முத்தத்துக்கு முன்னான
உன் வெட்கம்

– ப்ரியன்.